இன்று மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பொன்னாட்டை விட்டு பிற நாட்டில் வாழ்வது சகஜமாகி விட்டது. இவ்வாறு பிறநாட்டில் போய் வாழ்வதற்கப் பல காரணங்கள் உண்டு. பிறநாட்டில் வசதியான வாழ்வைத் தேடிப் போகிறவர்கள் உண்டு. அதே சமயம் நாட்டில் ஏற்படும் போர் முதலான நெருக்கடி நிலைமைகளால் தம் சொந்த நாட்டில் வாழ முடியாத சந்தர்ப்பத்தில் பிறநாடுகளில் தஞ்சம் புகுவாரும் உண்டு.
இந்தியப் பெருங்கண்டத்தில் இப்படித் தஞ்சம் புகுந்தவர்கள் தான் பார்சி எனப்படும் இனத்தவர். இவர்கள் அன்று பேர்ஷியா எனப்பட்ட பாரசீகத்தில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்தவர்களே!
இவர்கள் யார் என உங்களுக்கு மேலும் தெரிய வேண்டுமா? இந்தியக் கண்டத்தின் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா.காந்தியின் கணவர் Feroze Gandhi ஒரு பார்சி இனத்தவரே. இவர்கள் நெருப்பைத் தெய்வமாக வழிபடுபவர்கள். வழிபாட்டிற்காக நெருப்பை ஏற்றினால் அதனை அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். பண்டைய கிரேக்கர்களிடமும் இத்தகைய நம்பிக்கை இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த பார்சி மக்கள் கப்பலில் ஏறி இந்தியக் கண்டத்தை அடைந்து அங்கு தஞ்சம் கோரிய போது அன்று அந் நாட்டை ஆண்ட மன்னன் தஞ்சம் தர மறுத்தானாம். இதற்கு உதாரணமாக ஒரு பாத்திரத்தில் பாலை இராஜகுரு அவர்களின் முன் வைத்தார். அதன் அர்த்தம் எமது சமுதாயம் பால் போன்றே தூயதாக உள்ளது; இதை நாம் மாசுபடுத்த விரும்பவில்லை என்பதாகும். பிற நாட்டவர் எம்முடன் கலப்பதை நாம் விரும்பவில்லை என்பது அதில் பொதிந்திருந்த உள்ளர்த்தமாகும்.
அதற்குப் பதிலாகக் கப்பலிலே வந்த பார்சிகள் குருவானவரின் பாலில் ஒரு கரண்டி சக்கரையைக் கலந்தனராம். அதன் அர்த்தம் பாலில் சக்கரை கலந்தது போல் உங்களுடன் இனிமையாக நாம் கலந்து வாழ்வோம் என்பதாகும்.,
உடனே அவர்களுக்குத் தஞ்சம் புக இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அது என்னவெனில், எந்த ஒரு பார்சி இனத்தவரும் தமது சமயத்தை இந்த மண்ணில் பிரசாரம் பண்ணி மக்களை மதம் மாற்ற முற்படக் கூடாது என்பது அந் நிபந்தனையாகும். அதற்கமைய இந்திய பார்சி இன மக்கள் எவரும் தமது மதத்தை இன்றுவரை பரப்ப முற்படுவது கிடையாது.
இவர்கள் இறந்ததும் உடலை எரிப்பதோ புதைப்பதோ கிடையாது. மாறாக, இறந்தவரின் உடலை உயர்ந்த ஒரு கோபுரத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். அந்த இடத்தை ‘டாக்மா’ அல்லது Tower of Silence என அழைக்கிறார்கள். கழுகுகளுக்கு அவ் உடல் இரையாகும். இச் செய்கையை அவர்கள் வாழ்க்கையின் கடைசித் தானம் எனக் கருதுகின்றனர். இதற்காக இந்தியாவில் பெரிய நகரங்களிலே உயர்ந்த பெரிய கோபுரங்கள் உண்டு. இந்தப் பழக்கம் இவ் இனத்தவரால் இன்றும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் வாழும் பார்சி இனத்தவருக்காக இது போன்ற கோபுரம் ஒன்று உண்டு.
இந்திராகாந்தியின் கணவர் Feroze Gandhi பார்சிக் காரராக இருந்தும் தனக்கு அத்தகைய சம்பிருதாயம் வேண்டாம் எனக் கூறி இருந்ததால் அவரின் உடல் தகனம் பண்ணப்பட்டது.
மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டாலும் இந்தியா என்ற பெரிய சாகரத்தில் இவர்களும் இந்தியர்களாகக் கலந்து விட்டார்கள். அண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் பார்சி இன இளைஞனைத் திருமணம் செய்து கொண்டாள். இந்த இளைஞனின் பெற்றோர் இந்து முறைப்படி தீ வலம் வந்து திருமணம் செய்ய விரும்பவில்லை. தீயை அவர்கள் தெய்வமாக வழிபடுவதால் தீவலம் வந்து திருமணம் செய்வது அவர்கள் சம்பிருதாயத்தில் ஏற்புடயதாக இருக்கவில்லை.
( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக ...........அன்று ஒலிபரப்பாகியது)
No comments:
Post a Comment