Friday, February 01, 2019

மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் அதனால் ஏற்பட்ட அழிவில் இருந்து தம்ம நிவர்த்திக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரழிவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய போதும் சில புதிய தகவல்களும் எமக்குக் கிடைக்கின்றன.

அண்மையிலே வெளிவந்த ஒரு செய்தி எம்மை வியப்புக்குள்ளாக்கியது. சென்னைக்கு அருகில் உள்ல மகாபலிபுரம் என்னும் கடற்கரை கடல் அனர்த்தம் ஏற்பட்ட சமயத்தில் 100 மீற்றர் வரை உள்வாங்கியதாம். இவ்வாறு உள்வாங்கிய சமயத்தில் மகாபலிபுரத்துக் கடலுக்குள் பல சிற்பங்களைக் காணக்கூடியதாக இருந்ததாம்.

இது வரை இப்படியாகக் கடலின் அடியில் இருந்த சிற்பங்கள் யாராலும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஒரு சுனாமி ஏற்பட்டிராவிட்டால் மேலும் பலகாலம் இது யாரின் கண்ணிலும் பட்டிருக்காது. சுனாமி அனர்த்தத்தின் போது இதைக் கண்டதால் தற்போது இவை பற்றி அறிவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வாளர்களும் கடற்படையினரும் ஆய்வில் மூழ்கியுள்ளதாக அறிகிறோம். இந்த ஆய்வு எத்தனை வியப்பான செய்திகளை அளிக்குமோ என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களில் பலர் இந்த மாமல்லபுரத்திற்குப் போயிருக்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சிற்பங்களைக் காண்பதற்குப் பலர் போவது வழக்கம். இன்று தமிழரின் நாகரிகச் சின்னமாக உயர்ந்து நிற்கும் கோயில்கள் கட்டுவதற்கு இந்த இடம் தான் பயிற்சிக்களமாக அமைந்தது. சிற்பிகள் தாம் அமைக்கப் போகும் சிற்பவடிவங்களை இங்கு காணும் பெரிய பாறாங்கற்களிலே செதுக்கிப் பழகினார்கள். இங்கு 5 இரதம் போன்ற வடிவங்களைக் காணலாம். இதைப் பாண்டவர் இரதம் என்பார்கள். இதுவே கல்லிலே எப்படிக் கோயில் அமைப்பது என்ற எண்ணத்தை உருவகப்படுத்திப் பார்த்ததாகக் கருதப்படுகிறது.

வேறு சில கற்கள் குடையப்பட்டு அதற்குள் சிற்பவடிவங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு பெரிய கல்லிலே குரங்கு பேன் பார்ப்பது போன்ற காட்சி. அதை அடுத்து அர்ச்சுணன் தவம் செய்வது போன்ற காட்சி. இது யாவரையும் கவர்ந்தது. தவம் செய்யும் சிற்பக்காட்சியில் அர்ச்சுணன் ஒற்றைக்காலிலே நிற்கிறான். நீர், ஆகாரம் எதுவுமில்லாமல் அவன் தவம் செய்வதால் அவனது விலா எலும்புகள் யாவும் புடைத்து தாடியுடன் அச் சிற்பம் கானப்படுகிறது.

நான் சென்னையில் படித்த காலகட்டத்திலே மாமல்லபுரம் இன்று இருப்பது போல அல்லாமல் அதை அடுத்து அருகாமையில் புல்லும் புதருமாகக் காணப்பட்டது. அங்கெல்லாம் நந்தி வடிவில் அமைந்த சிலைகள் விரவிக் கிடந்தன. சில முழுமை பெற்றிருக்கும் சில முழுமை பெறாது பாதியிலே நிறுத்தப்பட்டிருக்கும். ஆம், இவை யாவும் சிற்பக்கலை கற்றுக் கொண்ட மாணவர்களது கைவண்ணம் என்பது இவற்றைப் பார்த்தவுடனே புலனாகும். தற்போது அவை யாவும் சேகரிக்கப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன.

இன்று சிற்பிகளுக்கான அரச கலைக்கல்லூரி மாமல்லபுரத்துக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பங்கள் குறித்த சிந்தனைகலோடு அமைவாக கோயில்கள் தமிழ்நாட்டில் எப்போது கட்டப்பட்டன என்ற எண்ணம் எமது மனதில் தோன்றுவது இயல்பு. பல்லவ அரசர் காலத்திலேயே (கி.பி.300 - 900) கோயில் கட்டும் கலை உருவானது. குறிப்பாகக் கூறுவதானால் மகேந்திரவர்மன் காலத்திலேயே இது தொடங்கப்பட்டது எனலாம்.

இது பக்தி இயக்கம் வளர்ந்த காலம். சமணப்பள்ளிகளுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் எதிராக சைவ வைணவ பக்தி இயக்கம் போர் தொடுத்தது. இந்த சமயத்திலே பக்தி நெறியை வளர்க்க கோயில் வழிபாடு இன்றியமையாததாக கருதப்படலாயிற்று.

சிவனை லிங்க முறையில் வழிபடுவது இந்தியா பூராகவும் இருந்தது. ஆனால் சிவனை நடராஜ மூர்த்தியாக வழிபடும் முறை தமிழ் நாட்டிற்கே உரியது. தெய்வங்களுக்கும் நடனத்திற்கும் இருந்த உறவால் நடன உருவங்கள் பல கோயிகளில் அமைக்கப்பட்டன. இதனால் நடனத்தைப் போலச்  சிற்பக்கலையும் ஒரு லலித கலையாக வளரத்தொடங்கியது. சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்ட கோயில்களே சகல கலைகளையும் வளர்க்கும் இடமாக இருந்தன. இதனால் கோயில்கள் அழகிய சிலைகளுடன் கூடிய கலா மண்டபங்களாக காட்சியளித்தன. அழகிய நடன மங்கையரின் உருவங்களும் சிற்பவடிவு பெற்றன. பண்டைய ஆடற்கலையின் சிறப்பை நாம் இந்தச் சிற்பங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் சிதம்பரம் தலத்தின் கோபுரச் சிற்பங்கள் முதன்மை பெற்றவை. இங்கு காணப்படும் மேற்கு கோபுர வாயிலில் 93 நாட்டிய நிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோபுரம் அந்தக் காலத்தில் ஆடற்கலைக்கு அளிக்கப்பட்ட சிறப்பை எடுத்தியம்புகிறது..

இவ்வாறு, தென்னகம் முழுவதும் விரவிக் கிடக்கும் கோயில்கள் அன்று சிற்பக்கலைக்கு அளித்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. இந்த அழகிய சிற்பங்கள் தமிழனை நாகரிகத்தில் உயர்ந்த ஒரு சமுதாயமாக உலக அரங்கில் நிலைநிறுத்த உதவுவன எனில் அது மிகையில்லை.

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றிய ஓர் உண்மையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். யான் சென்னையில் படித்த காலத்தில் இன்றுபோல் சுற்றுலாத்துறை பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. பலரும் சென்னையில் உள்ள தமது நண்பர்களின் தயவில் தான் பலவற்றையும் சென்று பார்ப்பது வழக்கம். நான் அங்கு இருப்பதன் துணிவில் எனது நண்பர் ஒருவர் சென்னைக்கு முதன் முறையாக வந்தார். எனது கணவரின் பல்கலைக்கழகத் தோழனான அவர், திரைப்பட காட்சி எடுக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினார். அதனால் எனது குருவின் சிபாரிசில் AVM  studio க்கு அவரை அழைத்துச் சென்று காட்டினேன். பின்னர் மாமல்லபுரத்துக்குப் போனோம். அச் சிற்பங்களைப் பார்த்த நண்பர், ‘என்ன கார்த்திகா, சும்மா கற்பாறைகளாகத் தெரிகிறது’ எனச் சப்புக் கொட்டினார். யாவுமே பொய் என்பதை வலியுறுத்துவதற்கு எனக்கு வேதாந்திகள் சொல்லும் இரு வரிகள் தான் அன்றைக்கு ஞாபகத்துக்கு வந்தன. அது,

‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை’

என்ற வாசகம் தான் அது.

அதாவது மரத்தையே நோக்கிக் கொண்டிருப்பவனுக்கு அதில் செதுக்கியுள்ள யானையின் உருவம் தெரிவதில்லை. மறுபுறத்தில் யானைச் சிற்பத்தையே நோக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு அது செதுக்கப்பட்ட மரம் தெரிவதில்லை என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

இது போலவே எனது நண்பருக்கும் மாமல்லபுரம் பூராவும் கற்களாகவே தென்பட்டது போலும்! ஆனால் எனது நண்பர் அழகியற்கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆயினும் தனக்குத் தோன்றியதை அவர் ஒழிவு மறைவின்றி கூறுவதில் அவர் மன்னர்.  ஆயினும் இவர் ஏன் இவ்வாறு கூறினார் என நான் வினா எழுப்பத் தொடங்கினேன். வீடு திரும்பியவுடன் எனது கார்டியனான அரிஞர் கண. முத்தையா அவர்களிடம் நடந்ததைக் கூறினேன்.

‘ஆம் கார்த்திகா, உனது நண்பர் கூறியதிலும் ஓர் உண்மையுண்டு. மாமல்லபுரத்துச் சிற்பங்களும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முறையும் கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலத்தைக் காட்டுகிறது’ என அவர் விளக்கினார்.

ஆகவே, சிற்ப வரலாற்றுக் துறைக்கு மாமல்ல புரத்துச் சிற்பங்களும் வேண்டியவையே! ஆகவே தான் அவையும் பேணிப்பாதுகாக்கப் படுகின்றன போலும்!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சிக்காக ..........அன்று ஒலிபரப்பானது.)

No comments:

Post a Comment