Saturday, January 12, 2019
மனத் தடை; பெண் விடுதலை குறித்து....
ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த விருந்தொன்றில் இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த இருவரின் உரையாடல் கேட்பதற்கு மிகவும் சுவாரிசமாக இருந்தது. அதனால் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
ஒரு பெண்ணின் வயது 21. ஒரு காரியாலயத்தில் வேலை பார்க்கிறாள். இவளைக் கமலா என அழைப்போம். மற்றவளைச் சங்கரி என வைத்துக் கொள்வோம். சங்கரிக்கு வயது 24. இவள் ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியை.
பேச்சுவாக்கில் கமலா தான் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பையனையே மணந்து கொள்வேன்; காதல் எதுவும் பண்ண மாட்டேன்; காதலிப்பது என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறான செயல் என்றாள். 24 வயது சங்கரியோ ‘ அப்போ உனக்கு ஆணின்மேல் பெண்ணுக்கு இயற்கையாகத் தோன்றும் கவர்ச்சி அது தான் Attraction வருவது இல்லையா என திகைப்புடன் வினவினாள். Attraction வருவதால் மட்டும் திருமணம் புரிந்து விட முடியுமா? திருமணத்துக்கு வேறு சில விஷயங்களும் உண்டே! அவன் நம் கலாசாரத்துக்கு ஒத்து வருபவனாகவும் இருக்க வேண்டுமில்லையா? என்ற கேள்வியைக் கேட்க, சங்கரி, முதலிலே Attraction இருக்க வேண்டும். இந்த Attraction இல்லா விட்டால் திருமணம் செய்து கொள்வது தப்பு; அத்தோடு இருவரும் பழகி ஒத்து வருமா என்பதையும் முடிவு செய்ததன் பின்பு தான் திருமணம் செய்யலாம் என்றாள்.
கமலா, அது எல்லாம் சரி அல்ல. எனது அம்மா முடிவு செய்வதே எனக்குச் சரியாக இருக்கும் என்றாள். அதற்கு சங்கரி, அப்போ உனது அம்மாவுக்குப் பிடித்தவர் தான் உனக்குப் பிடித்தமானவராக இருக்கும் என்கிறாய் எனக் கூற, கமலா மேலும் ஒரு தனது வாழ்க்கைத் திட்டத்தைக் கூறினாள். தான் திருமணம் ஆன பின் வேலைக்கு; அதுதான் தொழில் பார்க்கப் போவதில்லை என்றாள். மனைவியானவள் வேலை பார்த்தால் அவளால் குடும்பத்தைச் சீராக நடத்த முடியாது என்று சொல்ல, சங்கரி திகைத்துப் போய், உனக்கு Financial Independence வேண்டாமா எனக் கேட்டாள். அதற்குக் கமலா, Financial Independence என எண்ணுவதால் தான் குடும்பங்கள் பிரிகின்றன என்றாள்.
கமலாவோ இந்திய மண்ணில் பிறந்து 12 வது வயதில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெண். சங்கரியோ லண்டனில் குடியேறி வாழ்ந்த இந்தியப் பெற்றோருக்கு பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்த பிரித்தானியக் குடிமகள். நிறத்திலே இருவரும் இந்தியர் தான். ஆனால் சிந்தனையில் இருந்த இந்த மாறுபாட்டை என்னால் அவதானிக்க முடிந்தது.
இவர்களின் பேச்சை உற்றுக் கவனித்ததால் அவர்களை இடைமறித்து, சங்கரியிடம், ‘முன்னய இந்திய சமுதாயத்தில் பெண்கள் வேலைபார்த்து சம்பாதிக்காததால் அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது கனிசமான தொகை பணம், மேலும் காணி நிலம்,வீடு, பொருள்கள் எனக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. காரணம் அவளுக்கு ஒரு Economical Strength இருக்க வேண்டும் என்ற அடிப்படையில். ஒரு சமயம் நமது கமலாவிற்கும் பெற்றோர் அப்படிக் கொடுக்கக் கூடும்’என்றேன்.
லண்டனில் பிறந்த சங்கரி இதனை வெகுவாகச் சாடினாள். வயோதிப காலத்தில் பெற்றோர் சேர்த்து வைத்த பணம் அவர்களுக்கு உதவுவதற்காகவே தவிர பெண்ணுக்குக் கொடுப்பதற்கல்ல. அப்படி ஒரு பெண் தன் பெற்றோரிடம் பணத்தையோ சொத்தையோ பெறுவது மகா பாவமான காரியம். அப்படிச் செய்யும் பெண் பெற்றோருக்குப் பெரும் துரோகம் இளைப்பவள் என்றாள். மேலும் சங்கரி, தனக்கு வயது 24 என்றும்; 2 அல்லது 3 வருடத்தில் தான் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்றும்; கூற கமலா இதற்கு, திருமணத்தை அவ்வளவு காலம் பிற்போட்டால் எப்பொழுது நீ பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வாய் என்று கேட்டாள்.
சங்கரி அதற்கு, மேலும் ஓரிரு வருடங்களின் பின்பே என்றாள். யாராவது திருமணம் பண்ணியதும் பிள்ளை பெற்றுக் கொள்வார்களா என்ற ஆச்சரியம் அவளின் பதிலில் மறைந்திருந்தது. திருமணத்தின் பின் இருவருமாக எமது வருங்காலத்திற்கு வேண்டிய பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி ஆராய வேண்டும்; அதன் பின் பிள்ளையை வேண்டிய போது பெற்றுக் கொள்வோம் என்றாள்.
இதிலிருந்து நாம் காண்பது என்ன? பெண்விடுதலை வேண்டும் எனப் பாரதி கோரினான். அதை ஆண்களிடம் கேட்டு அந்த ‘பெண்விடுதலையை’ வாங்கித் தர அவன் முயற்சி செய்தான். ஆனால் பெண் ஒருத்தி தனது அறிவைப் பெருக்கி சம்பாதிக்கத் தொடங்கியதும் சுதந்திரம் என்பது அவளுக்குப் போராடி பெற வேண்டிய ஒன்றல்ல; அது தானாக வருவது என்பது புலனாகிறது.
பெண்னானவள் மெல்லியலாள்; ஆணின் ஆதரிப்பில் வாழ வேண்டியவள் என்பது எல்லாம் பெண் தொழில் புரியாத கால கட்டத்துச் சிந்தனையே! பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா? எத்தனை பிள்ளைகள் வேண்டும் எப்பொழுது பெற்றுக் கொள்ல வேண்டும் என்பதனைத்தும் இன்று அவளால் திட்டமிடப்படுகிறது.இதுவே பெண்னை முற்றாக விடுதலையை அடையச் செய்த விஞ்ஞான வளர்ச்சி.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி புவியீர்[ப்பு சக்தியை எதிர்த்து மனிதனைச் சந்திரமண்டலத்திற்கும் அண்டவெளிக்கும் கொண்டு சென்றது. அதே விஞ்ஞான வளர்ச்சி தான் குடும்பத்தையும் திட்டமிட்டு நடாத்தப் பெண்ணுக்குக் கை கொடுத்து பெண்விடுதலையையும் அளிக்கிறது.
என்ன நேயர்களே! இங்கு நான் கூறிய பாத்திரம் ஏதோ என் கற்பனையில் தோன்றியவர்கள் என்று எண்ணி விட்டீர்களா? இந்த 21ம் நூற்றாண்டிலும் இப்படியொரு 19ம் நூற்றாண்டுச் சிந்தனையுடன் ஒருத்தி வாழ்கிறாள். இந்த சம்பாஷனை நான் நிஜமாகக் கேட்டது தான்.
பெண்கள் சுதந்திரமாக வாழும் இந்தக் கால கட்டத்தில் கூட சில பெண்கள் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாது வாழ்வதை நாம் காண்கிறோம். சுதந்திரம் என்பது மற்றவர் கொடுத்துப் பெறுவதல்ல; அது நாமாகத் தேடிக் கொள்ள வேண்டியது. அதற்கும் அறிவு வேண்டும்.
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார்
என் உடையரேனும் இலர்’
என்பதை இங்கு நாம் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
( இக்கட்டுரை 8.9.2006 அன்று ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment