இன்றய மனித சமுதாயம் பணத்தையும் பொருளையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் பத்தும் செய்யும். அந்தப் பத்து மட்டும் இருந்து விட்டால் யாவற்றையும் பெற்றுவிட்டவர் ஆவோம் என்ற சிந்தனை மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சம்பாதிப்பதால் ஏற்படும் திருப்தி முழுச் சந்தோஷத்தையும் கொடுக்கிறதா? சந்தேகமே!. இதனால் ஏற்படும் மன உழைச்சல் நீண்ட நாள் உபாதைகளைக் கொண்டுவரக் கூடியவை.
இந்த மன உழைச்சலால் ஏற்படக் கூடியவை இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, வயிற்றுப் புண், மூட்டு வாதம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். மன அழுத்தத்தால் உடலில் பல நோய்கள் ஏற்படக் கூடும்.
கொஞ்சம் முன் யோசினையாக இருந்தால் இவற்றை வருமுன் தடுக்கலாம். எமது பண்பாட்டில் தோன்றிய யோகாப்பியாசம், தியானம், மேலும் சில ஆயுள்வேத முறைகளைக் கையாள்வது எமக்குப் பயன் தரக் கூடியவை. ஆயுள் வேத முறையைக் கடைப்பிடிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. அவை பற்றிச் சிறிது பார்ப்போம்.
ஆயுள் வேதம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் ‘ வாழும் வழி’ என்பதாகும். அது வாழ்க்கைக்கான அறிவு எனப் பொருள் படும். ஆயுள் என்பது வாழ்க்கை; வேதம் என்பது அறிவு. அதனால் இது வாழ்க்கையை வாழ்வதற்கான அறிவு எனக் கொள்ளலாம்.
ஆயுள் வேதம் சுகபலத்துடன் வாழ்பவரின் நலத்தை காப்பது. நோயுற்றவரின் நோயை தீர்ப்பது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு கையாளும் முறை சிறந்த உணவு, போதிய தூக்கம், அதற்கு மேல் நோயுற்றால் குடிநீர் மற்றும் மாத்திரை.
ஆயுள் வேத வைத்தியரான Raghwanand Sharma , ’இன்றய ஐரோப்பிய அலோபதி வைத்திய முறை கசநோய், தொழுநோய், பெரியம்மை போன்று கிருமிகளால் ஏற்படும் நோயைத் தீர்க்கவல்லது. அதே சமயம் உடலில் உள்ளே ஏற்படும் சீரான சமநிலை தவறுவதால் ஏற்படும் நோயைத் தீர்ப்பதற்கு ஆயுள்வேத வைத்திய முறைசிறந்தது’ எனக் கூறுகிறார்.
ஆயுள்வேதம், யோகாசனம் போன்றவை எமது பாரம்பரியக் கலாசாரமான வேதங்களில் இருந்து தோன்றியவை. இவை வாழும் வழியை அதாவது எமது நாளாந்த வாழ்க்கை முறையைச் சரியாக நடைமுறைப்படுத்துவதால் பல நோய்களில் இருந்து உடலைக் காப்பாற்றும் வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது.
இங்கு 3 வகையான உணவு அனுஷ்டானங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. முதலாவதாக நீங்கள் முதலில் உண்ட ஆகாரம் முற்றாகச் சமிபாடு அடைந்த பின்பே அடுத்த ஆகாரம் உண்ண வேண்டும். இதனை நாம் எத்தனை பேர் கைக்கொள்ளுகிறோம்? அதன் பின் அளவோடு வேண்டியதை மட்டும் உண்ண வேண்டும்.
எம்மைச் சுற்றி உள்ள இயற்கை ஒன்றுடன் ஒன்று இனைந்து ஒன்றுக்கொன்று அனுசரணையாக இயங்குகின்றது. இந்த இயற்கையினின்றும் வேறுபட்டதல்ல நமது உடல். எமது சரீரம் இந்திரியம், மனம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் அதே நேரம் இணைந்தும் செயல் படுபவை. அதாவது சரீரம் என்பது உடல். இந்திரியம் என்பது உள்ளுறுப்புகள். மனம் என்பது உடலை இயக்கும் சிந்தனைச் சக்தி. இவை ஒன்றுக்கொன்று இணைந்து இயங்காத பொழுது நாம் நோய்வாய்ப்படுகிறோம். இவற்றைச் சரிவரப் பராமரிப்பது நல்வாழ்க்கைக்கு உதவும்.
மேலும் ஆயுள் வேதம் கூறுவதாவது, தினமும் உடற்பயிற்சி அவசியம். ஆகாரத்தை காலை, மதியம், இரவு ஆகிய 3 நேரங்களிலும் உண்ண வேண்டும். நாக்கைக் கட்டுப்படுத்தி அதனை வழிநடத்த வேண்டும். எமது மனநிலை எமது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமானது. இன்று பல நோய்களுக்குக் காரணம் மன உழைச்சலே. உங்கள் மனநிலையே உங்கள் உணர்வுகளுக்குக் காரணமானவை. நீங்கள் யோகப்பயிற்சியால் உங்கள் இந்திரியங்களை - அது தான் உங்கள் உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீர்படுத்தி அதன் மூலம் உணர்வுகளை வழிநடத்தலாம். இதனால் மனநிறைவடைந்த மனநிலையுள்ளவராக ஆகலாம்.
முறையாகத் தினமும் யோகப்பயிற்சி, பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி இவற்றால் நோய்கள் குணப்படும். மனநின்மதி ஏற்படும். இதனால் நீங்கள் சுகபலத்துடன் நீண்ட ஆரோக்கிய வாழ்வை வாழலாம்.
Sprite of Ayurveda என அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுள்வேத, யோகப்பயிற்சி நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இறுதியாக வழங்கிய அறிவுரை என்னவென்றால், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தான். இதை அடைவதற்குக் குறைந்தது 6 மணி நேர நித்திரை அவசியம். இது உடலுக்கு வேண்டிய ஓய்வைக் கொடுக்கிறது. நோய் தீர்க்கும் மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட எண்ணை மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இது எமது உரோமத்தை மிருதுவாக்கி இரத்த ஓட்டத்தைக் கூட்டுகிறது. அதேசமயம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி உடலுக்கு சுவாதீனம் அளிக்கிறது. முறையான நல்ல உணவு, சுத்தமான பழக்கவழக்கங்கள், நல்ல தூக்கம், தியானம் ஆகியவை நல்வாழ்வுக்கு முக்கியமானவை. என மேலும் அவர்கள் கூறினார்கள்.
தினமும் நாம் செய்யும் உடற்பயிற்சி எமது உடலைக் கட்டாக வைத்திருக்க உதவும். எமது தசைநார்களை அது பலப்படுத்தும். எமக்குப் பசியை வரவளைக்கும். உடல்நிலையைச் சீராக வைத்திருக்கும். யோகப்பயிற்சி, நீச்சல், சுத்தமான காற்றுள்ள இடத்தில் நடப்பது, ஏன் நன்றாக மனம் விட்டுச் சிரிப்பது கூட ஒரு அப்பியாசம் தான். இதே போன்று காலை, மதியம், இரவு சாப்பாட்டை நேரம் தவறாமல் உண்ண வேண்டும்.
இதுவரை ஆயுள்வேதம் கூறியவற்றைக் கண்டோம். இத்தனையும் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்துவதும் கடினமாகத் தோன்றவில்லை. ஆனால் என்ன என்கிறீர்களா? ஆமாம், அன்று கிராமிய வாழ்விலே சனிக்கிழமைக்குச் சனிக்கிழமை நல்லெண்ணை தேய்த்து சீயாக்காய் வைத்து தலைமுழுகியவள் தான் நான். காலையில் அப்பாவுடன் சேர்ந்து யோகப்பயிற்சி அதன் பின் சாப்பாடு, பணிக்கன் வளவு என்றெல்லாம் நீண்ட நடை பயின்றோம். இன்று அன்று அனுபவித்தவை எல்லாம் ஒரு சுகபோக வாழ்க்கையாகத் தெரிகிறது. நேரம் தவறாத சாப்பாடு வித விதமாகப் படைக்க அன்பே உருவான பாட்டி. நினைக்கும் போதே கண் கலங்குகின்றது. இத்தனையும் இனி எமக்குக் கிடைக்குமா?
காலையிலே முடிந்த வரைக்கும் Tai Chi என்ற பயிற்சி செய்கிறேன். இன்றய எமது வாழ்க்கையில் இதுவே ஒரு பெரிய விஷயம். நாலாவட்டம் நேரத்துடன் ஒரு போராட்டம். எப்போ பார்த்தாலும் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற குறை. நேரம் தான் கிடைக்கிறதா? ஏன் என்னைப்பற்றி நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? என்னைப் போன்றே உங்களுக்கும் வாழ்ந்து முடிந்த / வாழும் வாழ்க்கை உண்டல்லவா?
நாம் விரும்பாவிட்டாலும், இந்த அவசர வாழ்க்கை தான் நமது. நகரத்தின் சந்தடியுடன் வாழ்கிறோம். ஆனால் எம்மையெல்லாம் மிரட்டுவது ஒன்று உண்டு. அது தான் எமது உடல் நலம். இதை இழக்க நாம் தயாரா? இல்லவே இல்லை. அதனால் மேற்கூறியவற்றைச் செய்யக் கட்டாயமாக முயல்வோம்.
உங்கள் / என் / முயற்சி வெற்றிபெற எமக்கு நாமே நல்வாழ்த்துக் கூறுவோம். இனியும் தாமதம் வேண்டாம். செய்கையில் இறங்குவோம்.
( இக்கட்டுரை 9.3.2006 அன்று ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )
No comments:
Post a Comment