Saturday, January 05, 2019

பிறவி மேதைகள்

உலகில் பிறப்பவர்களில் ஒரு சிலரே அதீத திறமையைப் பிறப்பிலேயே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதிலும் சிறு பிராயத்திலேயே உலகம் வியக்கக் கூடிய அதிதிறமையைக் காட்டும் மேதைகளும் அப்பப்போ பிறந்து உலகை வியக்க வைக்கிறார்கள். இவர்களையே நாம் குழந்தை மேதைகள் என்கிறோம். இவர்களை ஆங்கிலத்திலே Child Prodigy என்பார்கள்.

இத்தகைய மேதைகள் தாம் சிறந்து விளங்கும் துறைகளிலே கற்றுக் கொண்டு மேதைகள் ஆனவர்கள் அல்ல. அது அவர்களுக்குப் பிறவிக் கொடையாகக் கிடைத்தது. இவர்கள் தமது துறையில் மேதமைத் தன்மையோடு திகழ்ந்த போதும் சாதாரண வாழ்க்கையிலே பிடிவாதங்களும் கிறுக்குத்தனங்களும் உடையவர்களாக இருந்ததையும் காண முடிகிறது.

மகாலிங்கம் எனப்படும் மாலி புல்லாங்குழல் வாசிக்க யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. மாலி எட்டு வயதிலேயே தன் புல்லாங்குழல் வாத்திய வாசிப்பில் அபார திறமையைக் காட்டியவர். தன் வாசிப்பால் பல்லாயிரம் ரசிகர்களை மயக்கியவர். இவர் சிறு பையனாக இக் குழலிசையை வாசிக்கும் போது தன் குழல் இசையால் உலகை மயக்கிய கிருஷ்ன பரமாத்மாவே மறு பிறப்பெடுத்து வந்துள்ளார் என அவர் ரசிகர்கள் கூறுவார்களாம்.

ஒரு சமயம் அந்த வேணுகோபாலனின் புல்லாங்குழல் இசை  தரும் அந்தச் சிறுவனைக் காண  நிகழ்ச்சி நடந்த மண்டப வாயிலில் பெரிய கூட்டமாம். மண்டபத்துக்குள் யாரும் நுழைய முடியவில்லை. எட்டு வயதான வித்துவான் மாலி கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டு மண்டபத்துக்குள் நுழைய முடியாது திகைத்தாராம். மாலிக்கு மிருதங்கம் வாசிக்க வந்த கலைஞர் நல்ல வாட்டசாட்டமான பேர்வழி. மாலியை இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டு மண்டபத்தை அடைந்து விட்டாராம். அப்புறம் என்ன பிறவி மேதை புல்லாங்குழல் இசையால் மக்களை மயக்கினார்.

இவர் எப்படி கற்றுக் கொள்லாமலே கலைஞரானாரோ அதே போன்று Geometry Problems ஐத் தீர்ப்பது அவருடய விருப்பமான பொழுது போக்காக இருந்ததாம் என்பதும் ஒரு சுவாரிசமான விஷயம். சிலர் Cross words, Puzzles களில் நாட்டமுடையவர்களாக இருப்பது மாதிரி இவர் சிக்கலான கணக்குகளுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் மிக ஆர்வமுடன் இருந்தார் என்பர். இதன் காரணமாக Geometry - கேத்திரகணித ஒற்றைகளை இவர் கையில் எப்போதும் காணலாமாம். எத்தகைய கூட்டமானாலும் சில சமயம் அந்த கணித கணக்குப் பிரச்சினைகளுடன் மாலி ஒன்றி மெளனமாகி விடுவாராம். ஒரு வேளை இசையுலகில் இம்மேதை நுழைந்திருக்கா விட்டால் கணித மேதை ஆகி இருப்பாரோ யார் கண்டார்!?

இது மாலி பெரியவரான பின் நடந்த கதை. சபாவில் மாலியின் கச்சேரியை ஒழுங்கு செய்து டிக்கட்டுகளும் விற்றாகி விட்டது. மாலியின் வாசிப்பைக் கேட்க மண்டபம் நிறைந்த கூட்டம். மாலி தன்னால் வாசிக்க முடியாது; தன் ஷீஷ்யனே அன்றய தினம் வாசிப்பார் எனச் சபா மண்டபத்திற்கு ஷீஷ்யனை அனுப்பி விட்டு அருகில் உள்ள உணவகத்தில் போண்டாவை இரசித்துக் கொண்டிருந்தாராம்.

மாலியின் வாசிப்பைக் கேட்க டிக்கட் வாங்கி உள்ளே இருந்த கூட்டம் இதனால் கொதிப்படைந்தது. சபா செயலாளரை கண்டபடி திட்டியது. ஏன் ஒரு கலாட்டாவே நடந்தது என வைத்துக் கொள்ளுங்களேன். சபா செயலாளர் எதைச் சொல்லியும் மக்களின் கோபம் அடங்கவில்லை. செயலாளருக்குக் கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. சபாவிற்கு அருகில் இருந்த பழக்கடையில் பழங்கள், பாக்குவெத்திலை என்பனவற்றை வாங்கி ஒரு தட்டில் வைத்து நேராக மாலி இருந்த உணவகத்திற்குப் போய் வெத்திலை பாக்கு பழங்கள் கொண்ட தட்டை மாலியின் கால்களிலே வைத்து ஷாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாராம். இதைச் சிறிதும் எதிர்பாராத மாலி, திருப்தி என எழுந்து வந்து தனது வாசிப்பை ஆரம்பித்தாராம்.

மாலி போன்றே யாரிடமும் வீணையைக் கற்றுக் கொள்ளாது மேதமைத் தன்மையுடன் விளங்கியவர் வீணை பாலச் சந்தர். கலைஉலகில் பல பாலச்சந்தர்கள் சமகாலத்தில் இருந்ததால் அவரை வீணை பாலச்சந்தர் எனவே அழைப்பது வழமை.  வீணை பாலச்சந்தர் தனது கையெழுத்தை வீணை வடிவிலே போடுவதும் பலர் அறிந்த ஒன்று. இவர் வீனை வாசிப்புடன் நின்று விடாமல் சினிமாவிலும் தனது ஆர்வத்தைக் காட்டினார்.

இசை மேதையான பாலச்சந்தர் தான் எடுத்த ‘அந்தநாள்’ என்ற திரைப்படத்தில் எந்தப்பாடல்களும் இல்லாமல் திரைப்படத்தை எடுத்திருந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி. முதன் முதலாகப் பாடல்களே இல்லாது வெளிவந்த தமிழ் சினிமா ‘அந்தநாள்’ தான். இந்தப் படம் சினிமா உலகையே கலகலக்க வைத்தது. பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கலாம் என யாரும் சிந்தித்திருக்காத காலம் அது! இதனால் வீணை பாலச்சந்தர் Director பாலச்சந்தரும் ஆனார்.

இப்படி இருந்த ஓர் நாளிலே பாலச்சந்தரின் வீணைக்கச்சேரி அருகில் இருந்த நகரத்திலே ஏற்பாடாகி இருந்தது. தனது ஒத்திசைக் கலைஞர்களுடன் காரில் இவர் போய்க் கொண்டிருந்தார். கச்சேரி நடக்க இருக்கும் நகரத்தில் சுவரொட்டிகளில் எல்லாம் Director பாலச்சந்தர் வருகிறார் என விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இதை பாலச் சந்தர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வீணை அல்லவா வாசிக்க வருகிறேன். வீணைக்கு தகுந்த மரியாதை கொடுக்காத இந்தக் கூட்டத்தின் முன் வீணை வாசிக்க மாட்டேன் எனக் கூறி, Car Driver இடம்  Car ஐ வீட்டுக்குத் திருப்பு என்று கூறினாராம் அந்த மேதை.

இன்று இசையுலகில் பிரபலமாக இருக்கும் காயத்திரி ஆறு வயதிலே வீணையை அபாரமாக வாசித்த சிறுமி. இவர் சிறுமியாக இருக்கும் போது வீணையை விடாது வாசித்துக் கொண்டே இருப்பாராம். வாசித்தது போதும்; சாப்பிட வா , அல்லது படுத்துத் தூங்கு எனப் பெரியவர்கள் வீணையை அவள் கையில் இருந்து எடுத்தால், குழந்தை ’ஓ’வென அழத்தொடங்கி விடுவாளாம். மற்றக் குழந்தைகள் போன்று ஏனைய விளையாட்டுக்கள் எதுவும் விளையாட மாட்டாளாம். வீணை மட்டுமே அவளுடய விளையாட்டுப் பொருளாக இருந்ததாம். வீணையின் நாதத்திலே தன்னை இணைத்துக் கொண்டது அந்தக் குழந்தை. அதுவே இசையுலகுக்குக் கிடைத்த குழந்தை மேதை வீணை காயத்திரி.

இவ்வாறான குழந்தை மேதைகள் தமது மேதமைத் தன்மையும் அதனால் ஏற்பட்ட மமதையும்அவர்களை இரசிகர்களை மதிக்காமல் தம் போக்கில் நடக்கவும் வைத்தன. ஆனால் அவர்களின் பரம ரசிகர்களோ இதுவும் அவர்களது மேதைத் தன்மையே எனப் போற்றி புகழக் காத்திருக்கிறது. இதைத் தான் தன் வசமிழந்த இரசிகர்கள் என்பதா?

( இக்கட்டுரை 11.5.2007 அன்று ATC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

2 comments:

  1. பிறவி மேதைகள் இவ்வுலகில் தோன்றுவதற்கு காரணங்கள் பல.

    முதலாவது அவர்கள் பிறக்கும் போது அவர்களுக்கு ஏதோவகையில் அவர்களோடு பூர்வஜென்ம வாசனையும் சேர்ந்து வருவது. இதனை "விட்ட குறை தொட்ட குறை" என்றும் பொருள் கொள்ளளாம்.

    அடுத்தது, இறைவன் இம்மேதைகளை கருவிலேயே திருவுடையவர்களாகப் படைத்துவிடும் விந்தை. இந்த வகையில், சைவ சமயத்தில் நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் அவரது மூன்றாம் வயதில் இசையுடன் தேவாரம் பாட முடிந்தது.

    இத்துடன் இயற்கையும் அவர்கள் வாழுஞ் சூழலும் சிலருடைய மேதாவித்தனத்தை வெளிக்கொண்டு வரவும் வழி செய்கின்றன.

    இம்மேதைகளுக்கு ஒரு வகையில் அசாதரனமான வாழ்க்கை அமைந்து விடுவதும் உண்டு. உடல் வளர்ச்சியும் மனவள வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று இசைந்து போவது அவசியம். இது பிறவி மேதைகள் வாழ்க்கையில் பொதுவாக நடப்பதில்லை.

    இவர்களின் வாழ்க்கையில் ஓர் ஒற்றுமையை எம்மால் பார்க்க முடியும். இவர்கள் மிக இளம் வயதில் மறைந்து விடுவதுண்டு. திருஞானசம்பந்த நாயனார், சுவாமி விவேகானந்தர், மகாகவி சுப்பரமணிய பாரதியார், இந்திய கணித மேதை ஶ்ரீனிவாச இராமானுஜர் போன்ற மகாமேதைகள் தமது இளம்வயதில் அமரத்துவம் அடைந்தார்கள். ஆனால் அவர்களது சாதனைகளோ வானளாவியவை.

    இதனால் தான் இம்மேதைகளுக்கு இளம்வயதுக்குரிய, ஆனால் வெளிப்படாத குறும்புத்தனம், அவர்கள் பெரியவரான பின்னர் காலங்கடந்த நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத பிடிவாதம் மற்றும் கிறுக்குத்தனமாக வெளிப்படுகின்றன.

    இவை யாவற்றையும் இந்தக் கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும், இதிலுள்ள விடயங்கள் இளைஞர்களுக்கு உபயோகமாகும் வண்ணம் எழுதிய பாங்கு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  2. நீங்கள் கூறியதைப் போல சிலர் கண்டறியப் படுகிறார்கள். மேதைகள் தாம் மேற்கொண்ட கலையில் வெறியாக உழைத்தவர்கள். மேதாவிலாசத்துடன் இணைந்த அயராத பயிற்சியே அவர்களை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

    ReplyDelete