Saturday, January 05, 2019

பரதம்: நம் பாரம்பரிய நடன வடிவம்

இன்று நாம் காணும் பரதம் அன்று கோயில்களிலே ஆடப்பட்டது. ஆகம விதிப்படி நடைபெறும் கோயில் பூஜைகளிலே நர்த்தகியானவளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆடலும் இசையும் அற்ற பூஜைகள் அன்றய காலங்களில் கோயில்களிலே நடைபெறவில்லை. ஆகம விதிகள் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் பூஜைகள் பற்றி விரிவாக விளக்கும். இவ் ஆகமங்களில் ’சோடோப உபசாரம்’ என இசையும் ஆடலும் விபரிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு தெய்வங்களுக்கு, வெவ்வேறு வகையான இராகங்களில், தாள வேறுபாடுகளில் ஆட வேண்டியது நர்த்தகியின் கடமை. நர்த்தகியானவள் கோயில் வழிபாட்டு முறையை அறிந்து அதற்கேற்ற நடன முறையில் தேர்ச்சி பெற்றிருப்பாள். நாள் தோறும் வழிபாட்டு முடிவிலும் விழாக்காலங்களிலும் நர்த்தகியானவள் கும்பாலாத்தி எடுத்தல், சாமரம் வீசுதல், சுவாமி திருஉலா வரும் போது சந்நிதி முன் நடனம் புரிதல் போன்றவை நர்த்தகியின் கடமைகளாகவும் விதிகளாகவும் இருந்தன.

சிவாலயங்களில் நடைபெறும் நடனங்கள் வீரம், வேகம், கம்பீரம் கொண்டவையாக இருக்கும். நாராயணன் கோயிலில் நடைபெறும் நடனங்களிலே நளினமும் மென்மையும் மேலோங்கி இருக்கும்.

இந்த நடனங்களைப் புரியும் நர்த்தகிக்கு நடனப் பயிற்சி ஐந்து வயதில் ஆரம்பமாகும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்றொரு பழமொழி உண்டு. இது இந்த நாட்டியத்தை ஆடிய தேவதாசிகளுக்காகத் தோன்றியதாக இருக்குமோ?

இனி, இவளது நாட்டியாரம்பம் எப்படி நடைபெறுகின்றது என்று பார்ப்போமா? சிறந்த ஒரு நன் நாளில் ஆசிரியர் ( குரு) வின் வீட்டுக் கூடத்தில் கோலமிடப்பட்டு தாமரைக் கோலத்தின் நடுவிலே கலசம் வைத்து பூஜை செய்வார்கள். சந்தனம் வெற்றிலை பாக்கு, ஐந்து வகையான பழங்கள், ஐந்து வகையான மலர்கள், நறுமணப் பொருட்கள்முதலியவற்றைக் கொண்டு மரபு முறைப்படி பூஜைகள் நடைபெறும். பிறகு அறுகோணமுளள கோலத்தில் அரிசியை அல்லது நெல்லை சதுரமாகப் பரப்புவார்கள். குளித்து, புத்தாடை அணிந்த சிறுமியை பரப்பியுள்ள நெல் அல்லது அரிசியின் மேல் சம அடி வைத்து நிற்க வைத்து, நட்டுவ ஆசிரியர் ’தெய்யா, தெய்’ என முதல் பாடத்தை ஆரம்பிப்பார். இது ஆரம்ப நாள்.

இதைத் தொடர்ந்து தினமும் அச் சிறுமியை குப்புறப் படுக்க வைத்து புயம், முழங்கை, விலாப்பகுதி, இடுப்பு, முழங்கால் இணைப்புகள், பாதம் எல்லாவற்றுக்கும் மூலிகை மருந்துகள் இட்டு காய்ச்சிய எண்ணையால் மசாஜ் செய்யப்படும். ஒரு மனி நேரம் மசாஜ் செய்த பின் நடனத்துக்கு வேண்டிய அப்பியாசம் சொல்லிக் கொடுக்கப்படும். பின் மூச்சைச் சாந்தப்படுத்தும் பிரணாயாமம் கற்றுக் கொடுக்கப்படும்.

இன்று இந்த தாசி குலத்தினர் பெரும்பாலும் ஆடாத நிலையில்; இந்த எண்ணை மசாஜ் அப்பியாசம் யாவும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதை மனதில் வைத்து எனது மாணவிகளுக்குக் கட்டாயமாக நாட்டியத்திற்கான உடற்பயிற்சிகளைச் செய்வித்து வருகிறேன்.யான் கற்ற யோகப் பயிற்சியும் அதற்கு எனக்கு உதவுகிறது. இதனாலே எனது மாணவிகள் நாகநிருத்தியம் போன்ற கடினமான ஆடல்களை இலகுவாக ஆட முடிகிறது. இந்த அப்பியாசத்தின் அவசியத்தைப் பலர் உணராதது கவலைக்கிடமான ஒன்றே.

இவரது பயிற்சி, நாட்டியம் ஆடுவதற்கான அடவுகள், முத்திரைகள், தாளங்கள் எனப் பலவாறாக விரிவடையும். இன்று போல வாரம் ஒன்றோ இரண்டோ மணி நேர வகுப்பு என்பது இல்லை. தினமும் காலையும் மாலையும் பயிற்சிகள் நடைபெறும். இதனை நட்டுவனார் வீடுகளில் காண்பது வழமை. யான் குருகுல முறையில் நட்டுவனார் வீட்டில் இருந்து கற்றுக் கொண்டதால் பல விஷயங்களை அறிய முடிந்தது. 

நர்த்தகி இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். வாத்தியங்கள் இசைப்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். கோயில்களிலே பூசையின் போதும்;  கீதங்களுக்குத் தக்க அபிநயம் செய்யும் போதும்; மலர் அஞ்சலி, அர்ப்பணம் செய்யும் போதும்; நர்த்தகி தானே பாடி ஆட வேண்டும்.

இவள் பாடலின் அர்த்தங்களைப் புரிந்து ஆடல் வேண்டும். அதனால் இவள் வடமொழி அதாவது சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவஞ்சி அவள் கற்றுக் கொள்ளும் வெவ்வேறு வகையான நடனங்களை இங்கு விபரிக்காது விடுகிறேன்.

இத்தகைய பயிற்சி 6 முதல் 12 வருடங்கள் வரை நடைபெறும். பயிற்சி முடிந்ததும் ஒரு நன்நாளில் கோயில் குருக்கள் நர்த்தகிக்கு முறைப்படி சங்கு சக்கர முத்திரைகளை அணிவிப்பார். அன்று முதல் அவள் கோயில் வழிபாட்டில் நாட்டியம் செய்யும் தகுதியைப் பெற்றவளாவாள். இத்தகையை தகுதியைப் பெற்றவுடன் நர்த்தகியின் கல்வி முடிந்து விடுவதில்லை. அவள் மேலும் திறமை மிக்க நர்த்தகி ஆவதற்கான பயிற்சி தொடரும்.

எமது பாரம்பரிய நாட்டியத்தை அழகுற விளக்குவது சிலப்பதிகாரம் என்ற தமிழ் காப்பியம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையிலே மாதவி என்ற ஆடல் நங்கையின் அரங்கேற்றம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு நாட்டிய நங்கைக்கு ஐந்து வயது தொடக்கம் 12 வயது வரைக்குமான ஏழு வருடங்கள் பயிற்சி நடந்ததாகக் கூறப்படுள்ளது.

மாதவியின் அரங்கேற்றம் அரசனின் முன்னிலையில் நடைபெற்றது. அரசவையிலே அரங்கேற்றம் நடைபெற்றதும் நாட்டியம் ஆடிய நங்கைக்கு பொன்னும் மணிகளும் பரிசாக வழங்கப்பட்டன. ‘தலைக்கோல்’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. இந்தத் ’தலைக்கோல்’ என்பது ஏழு சாண் நீளம் கொண்டதாகும். இது மூங்கிலால் செய்யப்பட்டுக் கணுக்கள் தோறும் நவரத்தின மணிகள் பதிக்கப்பட்டிருக்கும். இடையிடையே பொன் கட்டு இடப்பட்டிருக்கும்.

இந்திரவிழாவின் துவக்கத்திலே தலைக்கோலுக்கு பூஜை நடைபெறும்.  அக் கோலைப் பட்டத்து யானையின் துதிக்கையிலே கொடுத்து அரசனும் மற்றய பிரதானிகளும் சூழ அது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேர் மேல் நிற்கும் ஆடல் ஆசானிடம் கையளிக்கப்படும். ஆடல் ஆசான் அதைப் பெற்று, வலம் வந்து, அதை அரங்கில் வைப்பான். அத்தகைய கோலைப் பெற்ற நாட்டியக் காரி ‘தலைக்கோலி’ எனப்பட்டாள். நட்டுவனார் ’தலைக்கோல் ஆசான்’ என பட்டம் பெறுவார்.

அன்றய எமது தமிழர்களின் வாழ்விலே நாட்டியம் வகித்த உன்னத இடத்தைக் கண்டோம். கோயில்களிலே வழிபாட்டு முறையாகவும், அரச சபைகளிலே தேர்ந்த கலையாகவும் இந்த நாட்டியம் விளங்கியது. இத்தகைய ஆடலின் பரிநாமமே இன்று நாம் காணும் பரத நாட்டியம் என்ற ஆடல் முறையாகும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 14.6.2005 அன்று ஒலிபரப்பாகியது )

No comments:

Post a Comment