Monday, January 14, 2019

பறை - நம் பாரம்பரியத்தில் அதற்கு நாம் கொடுத்த இடம்


இந்தப்பாடல் கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெறுகிறது.

நந்தனன் ஒரு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவன் என்ற சமூகத்தில் இருந்து வந்தவன். இவனுக்கோ சிதம்பரம் போக வேண்டும்; தில்லை, சிதம்பர நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. தாழ்த்தப்பட்டவர்கள் சிதம்பரம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத கால கட்டம் அது.

பேயாண்டி, மாயாண்டி, சின்னக்கறுப்பன் போன்ற காவல் தெய்வங்களையே தாழ்த்தப்பட்டவர்கலள் வணங்கிய காலம். இவன் வேலை செய்த பண்ணையாரோ ‘சிதம்பரமோ உனக்குச் சிதம்பரம்?’ எனத் திட்டுவார். தாழ்த்தப்பட்டவர்களின் எளிமையான ஆசைகளின் வெளிப்பாடாக இந்த நந்தனார் கதை கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது.

புலவர்களும் கவிஞர்களும் அக்காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த அரசனையோ அல்லது அதற்கு நிகராக வாழ்ந்த பெருங்குடியினரையோ பாடிப் பரிசில்களைப் பெறுவது வழக்கம். அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்களை; அவர்களது உனர்வுகளை தன்னையே அவனாகப் பாவித்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கோபால கிருஷ்ண பாரதி.

அழகாகவும் அதே நேரம் ஆழமாகவும் ஓர் அறிஞர் இந்தச் சமூகக் கட்டமைப்பை கீழ்வருமாறு விளக்குகிறார். ‘ இந்தச் சமூகத்தை ஓங்கி நிற்கும் கோயிலுக்கு ஒப்பிடலாம். கோயில் கோபுரத்தின் உச்சியிலே மினுங்கும் வெங்கலக் கலசமாக இருப்பவன் அரசன். அதை அடுத்து கோபுரம் போல் பார்ப்பதற்கு உயர்ந்திருப்பவர் வைசியர் என்ற வணிக குளாத்தினர். அதாவது வியாபாரிகள். வேளாளர் என்ற நிலத்தை வைத்திருப்பவர்கள் இந்தக் கோபுரத்தைத் தாங்கும் கட்டிடமாக இருப்பவர்கள், கட்டிடக் கலைஞர், நெசவாளர், கைவினைஞர்களான தங்கம், பொன், பித்தளை வேலை செய்யும் தொழில்நுட்பவியலாளர்கள்; மரவேலையாளர்கள் இப்படியே சொல்லலாம். 

ஆனால் அத்திவாரமாக யாரைச் சொல்லலாம்? சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் அவர்கள்! பழுவைத் தாங்கி கண்ணுக்குத் தெரியாமல் ஒதுங்கி வாழும் தீண்டத்தகாதவர்கள்.

சாதிப்பாகுபாடு என்பது ஒரு பொருளாதார அடக்கு முறை. தனது நிலபுலன்களில் வேலையாட்களாக இருப்பவனை உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அளவும் ஊதியம் கொடுத்து வேலை வாங்குவது அதன் இயல்பு. உயர் மட்டத்தில் இருப்பவன் சொகுசாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அடக்கு முறை. 

இதற்காகவே மறுபிறவித் தத்துவம் ஏற்படுத்தப்பட்டது. முற்பிறப்பில் நீ செய்த பாவத்திற்காக இப்பிறவியில் கஷ்டப்படுகிறாய். நீ நல்லவனாக இருந்தால் மறு பிறவியில் நல்லபடியாக வாழ்வாய் என்ற தத்துவத்தின் வாயிலாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்தச் சமூகம். இல்லாத ஒன்றை ஒரு காலமும் விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத ஒன்றை கற்பனை பண்ணி அந்த எண்ணத்தை சமுதாயத்தில் பரப்பி இன்றும் வாழ்பவர்கள் பலர்.

நான் சிறுமியாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலும் சாதிப் போராட்டங்கள் நடைபெற்றன. கோயில்களிலே தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர் அனுமதிக்கப்படாத காலம் அது! இவர்கள் கோயில்களில் காலடி எடுத்து வைத்தால் அவர்களைத் தடுத்துத் தாக்க உயர் சாதிக்காரர் சைக்கிள் செயின், திருக்கை வால் முதலியவற்றுடன் ஒழிந்து நிற்பார்களாம்.

இவ்வாறு, நாமும் வரலாறு படைத்த சமூகம் தான்.

அன்றய மரணச்சடங்குகளிலே வாசிக்கப்படும் வாத்தியத்தின் பெயர் பறை. இந்த வாத்தியம் எழுப்பும் நாதத்துடன் மன்னர்கள் போருக்குப் போனார்கள் எனக் கலிங்கத்துப் பரணி கூறும். சங்கப் பாடல்களில் இந்த வாத்தியம் எமது சமூகத்திற்கு வீராவேசம் ஊட்டியதாகக் கூறும்.

சாதி சண்டைகளில் ஏற்பட்ட முரண்பாட்டில் பறை என்ற வாத்தியத்தை வாசித்த கலைஞர்கள் இனிமேல் இந்த வாத்தியத்தை வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து சுடலையிலே இந்த வாத்தியங்களைப் போட்டு எரித்து விட்டார்கள்.

இந்த வாத்தியம் எழுப்பும் ஒலியால் மரணம் நிகழ்ந்து விட்டதை ஊரார் அறிவர். மேலும் மரணச் சடங்கில் நடக்கும் வெவ்வேறு கிரியைகளுக்கேற்ப வாசிக்கும் விதங்களும் மாறுபடும். மரணம் அடைந்தவருக்கு இரத்த உறவாக உள்ளவர் வரும் போது கூட வாசிப்பின் தொனி மாறு படும்.

இவ்வாறு தமது வாசிப்பில் வல்லவராக இருந்தவர்கள் இந்தக் கலைஞர்கள்.கோயில் கிரியைகளிலே நாதஸ்வர, தவில் வாத்தியகாரர் கிரியைகளுக்கேற்ப வாசிப்பது போல இங்கும் மரணச் சடங்குகளில் இந்த வாசிப்பின் வகைகள் மாறுபடும். இவை யாவற்றையும் பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

பின்னர் நான் கொழும்பில் வாழ்ந்த போது இதே பறை வாத்தியம் தான் சிங்களவரின் நாட்டிய வாத்தியமாக இருந்ததைக் கண்டு இத்தனை அருமையான வாத்தியமா என நான் வியந்ததுண்டு. கீழ் மாகாண அதாவது சப்பிரகமுவா நாட்டிய நாடக வகையிலே இந்த வாத்தியத்தை வைத்துக் கொண்டு அதனை ஒரு உரையாடலைப் போல வாசிப்பார்கள். அந்த வாசிப்பு மூலம் நடிகர் உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாடுவது போல நடிப்பார். அப்பொழுது இந்தப் பறையின் மகத்துவத்தை நான் உணர்ந்ததுண்டு.

நாம் எமது பறை வாசிக்கும் கலைஞர்களைச் சாதி என்ற பெயரால் அவமதித்ததால் இதனை நாம் இழந்து விட்டோம். சங்க காலம் தொட்டு தமிழனின் தனிப்பெரும் வாத்தியமாக வளர்ந்து வந்த இந்த இசைக்கருவியை சாதிப் போராட்டத்திற்கு பலி கொடுத்து விட்ட தமிழர்கள் நாம்.

அது மட்டுமா, நான் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் நாட்டின் தெருக்கூத்து - இப்படி நான் கூறியதும் ஏதோ தெருவில் நடக்கும் வேடிக்கைக் கூத்து என எண்ணி விடாதீர்கள். இதன் பெயர் தான் தெருக்கூத்து. இதுவே தமிழனின் பாரம்பரியக் கதை கூறும் ஆடல் வகை. கதகளி போன்று முகத்திற்கு வண்ணம் பூசி ஆடம்பரமான உடை அலங்காரத்துடன் கோயில் முற்றங்களிலே இந்தத் தெருக்கூத்துக்கள் நடைபெறும்.

இந்தக் கலைஞர்களின் வரவை முன் கூட்டியே அறிவிப்பதற்காக கோயிலிலே கூத்திற்கு முதல் நாள் மாலை ஒரு கலைஞர் கோயிலைச் சுற்றி ஆடுவார். அப்பொழுது அவருக்கு பக்க இசை வழங்கும் வாத்தியமாக அமைவது இந்தப் பறையே. நட்டியகாரர் வெவ்வேறு தாள வேறுபாட்டை கூற, பறை வாசிக்கும் கலைஞன் அதனை அழகாக வாசிப்பார்.

காஞ்சிபுரத்திலே நாட்டுப்புறக் கலைக்கான விழா ஒன்று நடைபெற்றது. இலங்கையின் கூத்தைப் பற்றிப் பேசி விளக்குமாறு என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். பகல் பூராகவும் பல தேர்ந்த அறிஞர்களின் உரைகளும் கலந்துரையாடல்களும்; மாலையிலே கிராமியக் கலையாடல்கள். இவ்வாறு மூன்று நாள் அந்த விழா நடைபெற்றது. விழாவின் இறுதி நாள் இந்தப் பறையை வாசிக்கும் கலைஞர்கள் வெவ்வேறு வகையான பறையை வைத்துக் கொண்டு ஒரு தாள வாத்திய நிகழ்ச்சியை நடாத்தினார்கள். தமிழனின் பெருமைக்குரிய வாத்தியத்தின் பெருமையையும் மேன்மையையும் அன்று நான் கண்டேன்.



எதையோ இழந்து விட்ட உணர்வில் என் மனம் கனத்தது.

இன்று 14.1.19 தைப்பொங்கல் திருநாள்; இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருநாள். இந் நாளில் நன்றி கூறிப் பேண மறந்து, சிதைத்து விட்ட இந்த பண்பாட்டுப் பொக்கிஷத்தையும்  நாம் நினைவு கூர்வோம். 

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 21.3.2006 அன்று ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

2 comments:

  1. சாதி முறை பாரம்பரியத்தில் தொடர்ந்தும் நனைந்து கொண்டிருக்கும் எமக்கு விழிப்புணர்வு ஊட்டும் உயர்ந்த சிந்தனையுடன் இக்கட்டுரை அமைந்துள்ளது, அதன் ஒரு சிறப்பம்சமாகும்.

    அத்துடன் பறை இசை வாத்தியம் அதற்குரிய தொன்மையான சிறப்பை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆதங்கத்தையும் இந்தக் கட்டுரை வெளிப்படுத்தி உள்ளது என்பதையும் எம்மால் உணரமுடிகின்றது.

    பறையிசை தமிழர் மத்தியில் ஒலிப்பதற்கான முயற்சிகள் நடைபெற ஆரம்பித்துள்ளன என்பது மகிழ்ச்சியான விடயம்.


    ReplyDelete
    Replies
    1. பறை எமது சமுதாயத்தில் மரணச் சடங்கிற்கு மாத்திரமே பயன் பட்டமையால் அமங்கலமான வாத்தியமாகி விட்டது. நாம் அதன் முழுப் பயனீட்டையும் பயன் படுத்தாது விட்டு விட்டோம். தமிழகத்தில் இருந்து வந்த ஒருவர் இங்கு பறை கற்பித்தார். அது பறை மேளமல்ல. அதை இங்கு பறை எனக் கற்றுக் கொண்டனர்.

      திருவாரூர் தேர் திருவிழாவில் சிவனார் தேரில் ஆரோகணித்து வரும் போது பறை மேளம் வாசிக்கப்படும். சிவனார் சுடலையில் பொடி பூசி ஆடிய போது பறை வாத்தியம் வாசித்த சமூகம் இன்றும் அதை வாசிக்கும் உரிமையினைப் பெற்றுள்ளனர்.

      Delete