Friday, January 04, 2019

பேராசிரியர்.கா.சிவத்தம்பி: ஒரு நண்பராக....

சிவத்தம்பி - ஆமாம். Prof. சிவத்தம்பி, Dr. சிவத்தம்பி, அறிஞர். சிவத்தம்பி. தமிழ் வளர்ச்சிக்கு உதவிய பெருந்தகை சிவத்தம்பி..... இவ்வாறு சிவத்தம்பியைப் பார்த்தவர்கள் பலர். அந்தச் சிவத்தம்பியை நண்பனாக; நல்ல கலாஇரசிகனாக நான் கண்ட சிவத்தம்பியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எமது திருமனம் நடந்த நாள் தொட்டு எனது கணவரின் இனிய நண்பராக சிவத்தம்பியை நான் அறிவேன். ஏன் எமது திருமனம் எப்படி நடக்க வேண்டும் என்பதை எனது கணவருக்கு உனர்த்திய இனிய நண்பரும் அவரே. எனது கணவர் திருமணமாகப் போகும் இளைஞர், முற்போக்குக் கருத்துக்கள் எனப் பலதைக் கொண்டிருந்த காலம் அது. எமது திருமணம் வைதீக முறையில் நடைபெற வேண்டாம்; சென்னையில் இருந்து அன்று எழுத்தாள அறிஞராகக் கொள்ளப்பட்ட Dr. வரதராசன் அவர்களை வருவித்து அவர் ஆசியுடன் மாலை மாற்றினால் போதும் என எனது பெற்றோரிடம் என் கனவர் கூறினார்.

வீட்டிற்கு மூத்த பெண் திருமணத்தை விமர்சையாக நடத்த விரும்பிய தந்தைக்கு இது ஒரு பிரச்சினையாகி விட்டது. மறுமுறை எனது தந்தையைக் காணும் போது எமது திருமணம் வைதீக முறையில் நடைபெறுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எனது கணவர் கூறி விட்டார். இதற்குக் காரணமாக இருந்தவர் சிவத்தம்பி தான். எனது கணவர் தனது கருத்தை தன் நண்பரான திரு. சிவத்தம்பியிடம் கூறிய போது அவர்,’ அடேய் மச்சான், எமது திருமணமே மிக மிக அழகாக ஒழுங்கமைக்கப்பட்ட நாடகம். அப்படி ஒரு Drama வைக் குழப்பலாமா’ என கூறி அவரது எண்ணத்தை மாற்றியவர் அவரே!

எங்கெல்லாம் கலையழகு உண்டோ அதை வாழ்க்கையில் இரசிக்கும் சிவத்தம்பி எமது சம்பிருதாய திருமணம் எத்துணை அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை எவ்வாறு ரசித்திருக்கிறார்!!
இதனை நான் பலரிடமும் கூறி மகிழ்ந்ததுண்டு. அத்துடன் எமது திருமணச் சடங்குகளின் அழகையும் பலரை ரசிக்க வைத்தும் உள்ளேன். சென்னையில் வாழ்ந்த போது பலதரப்பட்ட திருமணங்களைக் கண்ட போதெல்லாம் திரு. சிவத்தம்பியின் திருமணத்தைப் பற்றிய கருத்து என் மனதிலே வந்து போவதுண்டு.

எமது திருமண வாழ்வு ஆரம்பமான காலத்திலே சனி ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர் குழாம் எமது வீட்டில் கூடி அரட்டை அடிப்பது வழக்கம். அரசியலில் இருந்து கலை, இலக்கியம் என அத்தனையும் அங்கு அலை மோதும். ஒரு நாள் எனது கனவர் எதற்காக நாம் இப்படிக் கூடி நேரத்தை வீணடிக்க வேண்டும்? ஆக்கபூர்வமாக எதையாவது செய்யக் கூடாதா? என நண்பர்களை வினவ, ஆரம்பமானது ‘தமிழில் விஞ்ஞான விருத்திக் கழகம்’. அன்று தமிழிலே பாடசாலைகலில் விஞ்ஞானம் கற்பிக்கப்பட்டு வந்தது.அன்று Official Language Department ஆங்கில விஞ்ஞான நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தது. எனது கணவரும் பகுதி நேர வேலையாக சில விஞ்ஞான நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். தான் University யில் படித்த காலத்தில் சொந்தமாகத் தன்னிடம் Chemistry Text புத்தகங்கள்  கூட இருக்கவில்லை; யாவற்றையும் நூல் நிலையத்திலேயே கற்றேன். அதனால் நூல் நிலையத்தில் உள்ள பொதுவான நூல்கள் தொட்டு விஞ்ஞான சஞ்சிகைகள் யாவற்றையும் வாசித்ததாகக் கூறுவார்.

அவ்வாறு தன் மாணவப்பருவத்தைக் களித்ததனாலோ என்னவோ மாணவருக்குப் பாட நூல் தவிர துணையாக விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கு விஞ்ஞான சஞ்சிகை வெளியிடுவது என முடிவு செய்தார். எமது நண்பர் பலரும் விஞ்ஞான பட்டதாரிகளாக இருந்ததால் இதை நடத்தலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதனடியாகப் பிறந்தது ‘ அறிவொளி’ என்ற விஞ்ஞான மாதாந்த சஞ்சிகை.

திரு. சிவத்தம்பி விஞ்ஞானப் பட்டதாரி அல்ல. இருந்தும் விஞ்ஞான ஏடு ஒன்று தமிழில் வருவதை வரவேற்றது மட்டுமல்லாமல் அதற்குப் பலவகையிலும் உதவிகளும் புரிந்தார். மாத சஞ்சிகை வெளியிடுவதற்கு வேண்டிய பணம் விளம்பரம் மூலமே பெறப்பட்டது. அதனால் அப்பப்போ விளம்பரம் எடுத்துத் தந்து உதவினார். தமிழிலே விஞ்ஞானம் வளர்வதால் தமிழ் முத்தமிழாக இயல் இசை நாடகமாக மட்டுமல்லாது, நான்காவதாக விஞ்ஞானத் தமிழாகத் தமிழ் மலர்வதை இரசித்தார்; மனமார வரவேற்றார்.

இந்தக் காலகட்டத்தில் நான் சென்னை சென்று நாட்டியம் கற்றுத் திரும்பினேன். எனது குருநாதரான நாட்டியக் கலாகேசரி, இசைப்பேரறிஞர், பத்மபூஷணம் வழுவூராரும் எனது நிகழ்ச்சியை நடத்தி வைக்க இலங்கை வந்திருந்தார். நாட்டிய நிகழ்ச்சியின் சகல பொறுப்புகளையும் தானே முன்னின்று ஏற்றார் சிவத்தம்பி. பத்திரிகையில் வர இருக்கும் நிகழ்ச்சி பற்றி எழுதினார். எனது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒரு சில விளம்பர நூல் வெளியிட்டார்கள். அந்த நூலை அச்சேற்றுவது, மற்றும் நிகழ்ச்சி நிரலை நிரைப்படுத்தி எழுதியது மட்டுமல்லாமல் எனது குருவான வழுவூரார் என்னைப்பற்றி ஒரு குறிப்பையும் எழுதச் செய்து எடுத்துக் கொண்டார் சிவத்தம்பி. மேலும், அதைத் திரு. வழுவூரார் சொல்லத் தன் கைப்படவே எழுதி எனது ஆசிரியரின் கையெழுத்தோடு அப்படியே அதனைப் பிரசுரிக்கவும் செய்தார்.

அதிலே எனது ஆசான்,’ கார்த்திகாவின் மூலம் இந்தக் கலை மேலும் வளருமென்பதில் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு’ எனக் கூறியிருந்தார். அன்று அது எழுதப்பட்ட சமயம் நான் வெறுமனே ஒரு 20 வயது மாணவி. அதை இன்று பார்க்கும் போது எனது குருநாதர் என்மேல் கொண்ட நம்பிக்கை எனக்குப் புரிகிறது. அதை எழுத்து வடிவில் நிலை நிறுத்தி அதற்கான பிரயத்தனம் அத்தனையையும் செய்த திரு. சிவத்தம்பி அவர்களை மறக்க முடியுமா? அன்றய என் நாட்டிய நிகழ்ச்சி பற்றிய விபரனைகள் யாவற்றையும் அன்று அவரே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். அத்தோடு தமிழ் விபரனைகளையும் அன்றய மேடையில் அவரே செய்தார். அத்தோடு அந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ரேவார்.சூரிய சேனா என்ற சிங்கள அறிஞரும் கலைஞர் மற்றும் விமர்சகர் ஆக எல்லாமாக விளங்கிய ஓரறிஞரை அழைத்ததும் சிவத்தம்பியே.

அதைத் தொடர்ந்து நான் தினகரன் பத்திரிகையில் நாட்டியம் பற்றித் தொடர் கட்டுரை எழுதிய போது சிவத்தம்பி நான் எழுதியவை பற்றி என்னுடன் பேசுவது வழமை. தான் ஒரு தேர்ந்த நாடக நடிகன் மட்டுமல்ல; நாட்டியமே எமது பாரம்பரிய கூத்து நாடகம். ஆதலால் அதில் சிவத்தம்பிக்கு எப்போதுமே அதீத ஆர்வம் உண்டு.

எனது கணவர் மேற்படிப்புக்காக Scotland  சென்ற அதே நேரம் திரு சிவத்தம்பி Birmingham Universityயில் பிரபல அறிஞர்  Thomson ன் கீழ் தனது பட்ட மேற்படிப்பு ஆய்வை மேற்கொண்டிருந்தார். கிரேக்க நாடக வளர்ச்சியுடன் தமிழ் நாடக வளர்ச்சியை ஒப்பிட்டு தனது கலாநிதிப்பட்ட ஆய்வை அங்கு அவர் மேற்கொண்டிருந்தார்.

நாம் Scotland  இல் இருந்த சமயத்தில் தினகரன் பத்திரிகையில் தொடராக நான் எழுதிய கட்டுரைகள் சென்னை தமிழ் புத்தகாலயத்தினரால் ‘ தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்’ என்ற நூலாக வெளி வந்தது. அதில் எனது நூல் வெளியீட்டாளர்கள் எனக்கு 3 பிரதிகளை அனுப்பி இருந்தார்கள். அவற்றில் ஒன்றை Birmingham இலிருந்த திரு. சிவத்தம்பிக்கு அனுப்பி வைத்தோம். அந்த நூலை வாசித்தவர் உடனடியாக ‘ தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்’ என்ற எனது நூலுக்கான விமர்சனத்தை எழுதி தினகரன் பத்திரிகைக்கு அனுப்பி இருந்தார்.

நாம் Glasgow விலும் சிவத்தம்பி Birmingham இலும் வசித்ததால் நாம் ஒரு சமயம் London சென்ற போது சிவத்தம்பியும் அங்கு வந்திருந்தார். பல விஷயங்களைபும் அப்போது பேசி மகிழ்ந்தோம். சிவத்தம்பி வாழ்ந்த Birmingham பகுதியிலிருந்த தொழிற்சாலைகளில் இந்திய பாகிஸ்தான் தொழிலாளர்கள் அதிகப்படியாக வேலை பார்த்த காலம் அது. அதனால் அப்பகுதி இந்திய பாகிஸ்தான் மக்களால் நிரம்பி இருந்தது. சிவத்தம்பி லண்டனுக்கு பஸ்ஸிலே வந்திருந்தார். பஸ்நிலயத்திற்குக் காலதாமதமாகப் போனவர்  அறிவிப்புப் பலகையை வாசியாது ‘Is this bus going to London?’ என அருகில் நின்ற ஆங்கிலேயரிடம் வினவ, அவர் இவரைப் பார்த்து ஏளனமாக ‘Can't you read English' எனக் கேட்டாராம். உடனே சிவத்தம்பி, I'm here in the University to teach English to you follows என்றாராம்.  கேட்டவர் அதிர்ந்து போனார் என்று பின்னர் அதை எங்களிடம் கூறினார். ஆமாம் இத்தனை சட்டென பதிலடி கொடுப்பதற்கு சிவத்தம்பியால் தான் முடியும்.

சிவத்தம்பி அவர்களின் PhD  ஆய்வு சென்னையில் N.E.B.H. ( New Century Book House)ஆல் நூலாக வெளியிடப்பட்டது. அந்தச் சமயத்திலும் நாம் சென்னையில் இருந்தோம். நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டோம்.

எனது நாட்டிய நாடகங்களைப் பார்ப்பதற்கு தவறாது வருவார் திரு. சிவத்தம்பி. இராமாயண நாட்டிய நாடகத்தை எனது முதல் முயற்சியாக செய்த போது பார்த்து வியந்து என்னை ஊக்குவித்தார். மட்டக்களப்பு பாரம்பரிய வடமோடி ஆடலை நான் புகுத்தி இராம இராவண அனுமான் வருகை போன்றவற்றை தயாரித்திருந்தேன். ’உதயம்’ என்ற நாட்டிய நாடகத்தில் பாடல்களோ வார்த்தைகளோ அற்ற நாட்டியமாக அதை உருவாக்கி இருந்தேன்! வாத்திய இசையே அதன் உயிர் நாடி. கதையின் சாரம் காட்டிலே சுதந்திரமாக வாழும் மிருகங்கள் வேடர் கூட்டத்தால் கொல்லப்படுகிறது. இதனைப் பொறுக்க முடியாத மிருகங்கள் ஒன்று கூடி திட்டம் தீட்டி வேடர் தலைவனை சித்திரவதை செய்து கொல்லுகின்றனர். இறுதியில் மாத்திரம் ஒரே ஒரு பாடல். அது கொண்டாட்டப்பாடல். கொண்டாட்டம்; ஒரே கொண்டாட்டம். ஒரு கொடியவனைக் கொன்ற நிலை கொண்டாட்டம்....

சிவத்தம்பி கற்பித்த வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தின் விழா ஒன்று இராமகிருஷ்ன மண்டபத்தில் நடக்க இருந்தது. அந் நிகழ்ச்சியில் எனது ’உதயம்’ நாட்டிய நாடகத்தை மீண்டும் மேடை ஏற்ற விரும்பினார் திரு. சிவத்தம்பி. 10 வாத்தியகாரரைக் கொண்டது எமது இசைக்குழு. ஆனால் அவர்களுக்குப் பணம் கொடுக்க பல்கலைக்கழகத் தமிழ் மானவர்களிடம் பணம் கிடையாது. எப்படியாவது நாட்டியத்தை மேடை ஏற்று என்றார் சிவத்தம்பி. எனது கணவரோ அந்த 10 இசைக்கலைஞரும் தொழில் முறையில் வாத்தியம் வாசிப்பவர்கள்; எப்படி சும்மா வா என்பது, அவர்களது தொழில் அதுதான் அது எல்லாம் நடத்த முடியாது எனக் கோபமாகச் சத்தம் போட்டார்.

சிவத்தம்பியோ தேர்ந்த நாடக்கலைஞர் ஆயிற்றே! நெஞ்சைப்பிடித்துக் கொண்டு, ‘மச்சான், இரையாதேயடா, நான் எனது Obituary Notice ஐப் பொக்கட்டிலே வைத்திருக்கிறேன். இப்போதான் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துள்ளேன் என்றாரே! 1976 என நினைக்கிறேன். ஏதோ இருதய நோயோ எனச் சந்தேகப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாராம். தனக்கு Heart attack கே வந்து விடும் என்றார். என்ன வேடிக்கை! தனது மரண அறிவித்தல் சட்டைப்பையில் உண்டு எனக் கூறிய சிவத்தம்பி இன்று வரை வாழ்ந்தது! எனது கணவரோ சிவத்தம்பியின் இரசிகர்.சிவத்தம்பியின் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ’விதானையார் வீட்டில்’ நாடகத்தைப்பற்றி பலதடவை கூறியுள்ளார். அந்த நாடகம் இலங்கைத் தமிழரை வெகுவாகக் கவர்ந்து பிரபலமானது. அவை வானொலியில் நடைபெற்ற சமயம் நான் மிகவும் சின்னப் பெண். அவற்றை இரசிக்கும் வயதல்ல எனக்கு. அதனால் எனது கணவர் மூலம் தான் திரு சிவத்தம்பியின் நடிப்பின் சிறப்பை அறிந்து கொண்டேன். சிவத்தம்பி நாடக நடிகர் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் நன்றாகவே நடிப்பார் என்பதை அறிய Obituary Notice சட்டைப்பையில் உண்டு என்ற விஷயம் பத்தாதா? 

அதன் பின் எனது உதயம் என்ற நாட்டிய நாடகம் சிவத்தம்பிக்காக மேடை ஏறியது. நடந்த இடம் வெள்ளவத்தை இராமகிருஷ்ன மண்டபம். நாட்டியத்தின் சாரம் அடக்கி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றுகூடி தம்மை கொன்று குவித்த வேடர் தலைவனை கொலை செய்து விடுகிறது. குரங்குகள் கூடி கொண்டாட்டம்; ஒரே கொண்டாட்டம். ஒரு கொடியவனைக் கொன்றதிலே ஒரே கொண்டாட்டம் என பாடி ஆடுகின்றன குரங்குக் கூட்டம். கூடி இருந்த கூட்டம் அமோகமாகக் கைதட்ட, ஆடிய மானவியரும் சந்தோஷமாக ஆட, பாடியவர் உத்வேகமாகப் பாட, நிகழ்ச்சி மிக விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

மக்களின் சந்தோஷ ஒலிக்குக் காரணம் யாழ் மேயர் துரையப்பா சுடப்பட்டுக் கொலையுண்டார் என்ற செய்தியே! சிறிது நேரத்தில் சிவத்தம்பி என்னிடம் ஓடி வந்தார். கார்த்திகா நாம் பொலிஸ் ஸ்ரேஷனுக்கு போக வேண்டும். இது திட்டமிட்டு போட்ட நாடகம் என யாரோ பொலிஸில் கூறியதால் அவர்கள் எம்மை விசாரனைக்கு அழைக்கிறார்கள் என்றார். அன்று சட்டமா அதிபராக இருந்த சிவா. பசுபதியின் மகள் சிவாஞ்சலியே முக்கிய வேடனாக நடித்தவர். நாம் விஷயத்தைத் தொலைபேசியில் சிவா பசுபதியிடம் கூற, அவர் நாம் திட்டம் போட்டு இந் நாடகத்தைத் தயாரிக்கவில்லை என விளக்கியிருக்க வேண்டும். பிற்பாடு நாம் காவல் நிலையம் வரைக்கும் போயிருக்க வேண்டி இருக்கவில்லை.

இலங்கை வானிலியிலே சிவத்தம்பி கலைஞர்களை நேர்முகம் காணும் ஒரு நிகழ்ச்சியை வாரா வாரம் நடத்தி வந்தார். வெவ்வேறு துறையில் ஈடுபடும் கலைஞர்களை அவர்களின் ஆக்கங்கள் எவ்வாறு உருப்பெறுகின்றன? அதன் காரணி என்ன? எந்தச் சமயத்தில் அவர்களின் கற்பனை எப்படி உருப்பெறுகிறது? என்பவை அவரால் ஆயப்பட்டன. தானே ஒரு சிறந்த கலைஞர் ஆதலால் மற்றைய கலைஞர்களை அறிவதில்; ஆய்வதிலே அவரது திறமையும் அனுபவமும் சிறப்பாகப் வெளிப்பட்டது. அது மக்கலுக்கும் பயன் பட்டது.

இந்த நிகழ்ச்சி வாரா வாரம் ஒலிபரப்பப் பட்டது. இசை, நாடக, ஓவிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள் என பலதரப்பட்ட கலைஞரை நேர்முகம் கண்டு அவர்கள் உள்ளத்தை; அவர்களின் கலை வெளிப்படும் சந்தர்ப்பம் ,மற்றும் அவர்களின் உள் மன உனர்வுகள் யாவற்றையும் பிறர் அறிய உதவியது இந் நிகழ்ச்சி.

அந் நிகழ்ச்சி நடந்த காலத்திலே ஒரு நாள் சிவத்தம்பியிடம் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது. இன்று மாலை நிகழ்ச்சிக்கு வர இருந்த கலைஞர் வரமுடியாமையால் என்னை நேர்முகம் காண வானொலி நிலையத்துக்கு வரும் படி கேட்டார். மாலை வாத்தியக் கலைஞர் சகிதம் ஒத்திகை ஒன்று இருப்பதால் வர முடியாது என நான் கூற, ‘ஒரு நண்பனுக்கு இக்கட்டான நேரத்தில் இந்த உதவியைச் செய்ய முடியாதா?’ என அவர் பாணியில் தனது இக்கட்டான சங்கடத்தை விளக்கினார். வேறு வழி? நான் போய் சேர்ந்தேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாசலில் அவர் எனக்காகக் காத்திருந்தார். என்னைக் கண்டதும், ’வாங்கோ வாங்கோ Studio க்கு போவதற்கு முன் என்ன பேச வேண்டும் என ஆயத்தப்படுத்துவோம்’ என்றார். எனது கலை வாழ்வு தொடங்கிய காலத்தில் இருந்து என்னை அறிந்தவர்; நண்பனாக எனது சிந்தனைப் போக்கை நன்றாகவே புரிந்து கொண்ட பேர்வழி அவர். அதனால் பல விஷயங்களையும் பற்றி காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தோம். பின் கார்த்திகா, ’ஸ்ரூடியோவுக்குப் போக நேரமாச்சு வாங்கோ’ என்றார்.

கலை உலகில் நடக்கும் அறியாமைகள், தவறான சிந்தனைப் போக்குகள், கலை வளர்ச்சிக்கு குந்தகமாக இருப்பதை எல்லாம் பேசி நான் வெகு கொதிப்படைந்திருந்தேன். நாம் பேசியதைத் தொடர்ந்து Studio வில் சிவத்தம்பி கேள்விக் கணைகளைத் தொடுத்தார். சாதாரணமாக வெளிப்படையாக விஷயங்களைக் கூறத் தயங்கும் நான்; ஏன் நான் பேச விரும்பாத விஷயங்களைக் கூட -  அன்று நான் வானலையில் கூறி விட்டேன். என்னைக் கொதிப்படைய வைத்து எனது உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர்ந்த சிவத்தம்பியின் சாதுரியம் பிற்பாடுதான் எனக்குப் புரிந்தது.

BBC யிலெ Hot Talk என ஒரு நிகழ்ச்சி நடைபெறும். அதில் நேர்முகம் காண்பவர் பலரைத் திக்கு முக்காடச் செய்யும் பொழுது இவர் எமது சிவத்தம்பி அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என எண்ணுவேன். அன்று எனக்கு சிந்திக்க அவகாசம் தராது அவசரமாக அழைத்த சிவத்தம்பியின் சாதுரியத்தை போற்றாமல் இருக்க முடியாது.

1985இல் தஞ்சைப் பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான சிறந்த நூல் என எனது ‘இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ என்ற நூலைத் தெரிவு செய்திருந்தது. பல எழுத்தாளர்கள் தமக்கு கிடைக்குமா என எதிர்பார்க்கும் பரிசு அது! ஆனால் நான் எழுத்தாளரோ ஆய்வாளரோ அல்ல. ஒரு நாட்டியக் கலைஞர். நான் தேர்நதெடுத்துக் கொண்ட கலையில் நான் கொண்ட ஆர்வம் என்னை ஆயத் தூண்டியது. ஆனால் அந்த ஆய்வுகள் பரிசும் பெற்றது.

நான் பரிசைப் பெறும் சமயம் என்னை அறிந்தவர் யாரும் மண்டபத்தில் இல்லை. பரிசை வாங்கப் போகும் சமயம் பேராசிரியர். சு. வித்தியானந்தன் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு ‘என்னைத் தெரிந்த ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி’ என்றேன். ஆனால் சிவத்தம்பி செய்தி அறிந்து எனது நூல் வெளியீட்டாளரான திரு. கண. முத்தையாவிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். நான் சென்னைக்குத் திரும்பியதும் திரு. கண. முத்தையா அத் தகவலை என்னிடம் தெரிவித்தார். அதன் பின் நான்கே நாட்களில் சிவத்தம்பியிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கார்த்திகா உங்கள் வளர்ச்சியைக் கண்டு சந்தோஷப்படுகிறேன். மேலும் நீங்கள் வளர வாழ்த்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நண்பனாக; கலைஞனாக; கலாவிமர்சகனாக; பேராசிரியராக; துறை போந்த புத்திஜீவியாக; எம்முடன் வாழ்ந்த சிவத்தம்பி என்றும் எம் உள்ளத்தில் வாழ்வார். அவரின் எழுத்துக்கள் அவரை என்றும் தமிழோடு வாழவைத்துக்கொண்டிருக்கும்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் 30.8.2011இல் ஒலிபரப்பானது )

1 comment:

  1. முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.

    உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

    நகுதற் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.

    பேராசிரியர் சிவத்தம்பி மேலேயுள்ள திருக்குறள் வழியொழுகி ஒரு சிறந்த நன்பராக இருந்துள்ளார் என்பது தெரிகின்றது.

    அன்பிற்கில்லை அடக்கும் தாழ்.

    ReplyDelete