Monday, February 04, 2019

பிள்ளை வளர்ப்பும் விளையாட்டுப் பொருட்களும்

இன்று இரு பெற்றோரும் தொழில் பார்க்கும் மத்தியதர குடும்பங்களே பெருகி வருகிறது. கணவன் என்பவன் வருவாய் தேடி உழைப்பவன். இல்லாள் அல்லது இல்லத்தரசி அவன் உழைத்துக் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் வீட்டை நிர்வகிப்பவள்; குடும்பத்தைப் பராமரிப்பவள் என்பதெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டது. இன்று இல்லாள் ( இல்லத்தை ஆள்பவள் ) என்ற பதம் அர்த்தமற்றதாகி விட்டது.

பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் பிள்ளைகளும் அதற்கேற்ப ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள். ஒருவர் உழைக்கும் குடும்பத்தில் ஓரளவு பணப்பற்றாக்குறை இருப்பதற்கு இடமுண்டு. இன்னும் சரியாகச் சொல்வதானால் அதிகப்படியான ஆடம்பரங்களுக்குப் பற்றாமை என்பதே சரியானது. இதனால் ஒருவர் சம்பாதிக்கும் குடும்பங்கள் ஆடம்பரமற்ற வாழ்வை வாழ்ந்து வந்தனர். பிள்ளைகளின் எண்ணிக்கையும் ஒன்றோ இரண்டாகவோ தான் இருந்தது. இதனால் பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய இவர்களிடம் பணம் போதுமாக இருந்தது.

இன்றய தலைமுறைச் சிறார்கள் புதிய வசதிகளை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். இந்தப் புதியத் தலைமுறைப் பெற்றோரிடமும் பணம் இருப்பதால் வேலை விட்டு வந்து பிள்ளைகளின் நன்மை கருதி அவர்களை வெவ்வேறு பட்ட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது வழமையாகி விட்டது. சில 8, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சங்கீதம், உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து, நீச்சல், பரதநாட்டியம் என 4 அல்லது 5 வேறுபட்ட கலைகளைக் கற்று வருகிறார்கள். எனினும் இவைகள் அனைத்திலும் அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாக வருவார்களா என்பது சந்தேகமே.

தாய் என்பவளைப் பொறுத்த வரையில் தான் போதியளவு நேரத்தை பிள்ளைகளுடன் செலவு செய்ய முடியாமையால் அவளுக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையிலே தனது வருவாயின் பெரும் பகுதியைத் தன் வாரிசுகளுக்காகச் செலவு செய்வதில் அவள் திருப்தி காண்கிறாள். மறுபக்கத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சகல வசதிகளையும் கொடுப்பதால் அவர்களின் வருங்காலம் நல்லாக அமையும் என்றும்  அவர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறத்தில் இன்று சிறாரை மையமாக வைத்து பல தொழில்களும் இயங்கி வருகின்றன. முன்பு எப்பொழுதும் கண முடியாத அளவுக்கு இந்தத்துறை நன்கு வளர்ந்து வருகிறது. முக்கியமாகப் பிறந்த தினக் கொண்டாட்டங்கள் பல நூறு டொலர்கள் செலவில் நடைபெறுகிறது. இதை ஒழுங்கு செய்வதற்கென்றே பல ஸ்தாபனங்களும் இன்று உருவாகி வருகின்றன. பல குடும்பங்களிலே இன்று உற்றார் உரவினருக்கு ஒரு விதமான கொண்டாட்ட முறை; தமது தோழ தோழியருக்கு வேறு விதமான கொண்டாட்ட முறை என்றெல்லாம் அது விரிவு பெற்றுச் செல்கிறது. இவை எல்லாம் சந்தோஷம் கருதி மட்டும் நடைபெறுபவை அல்ல. போட்டி பொறாமைகள் மற்றும் ஒப்பீடுகளும் இவற்றுள்ளே கலந்துள்ளன.

அறியாப்பருவத்தில் இருக்கும் தமது வாரிசுகளுக்கு நல்லறிவு புகட்ட வேண்டிய பெற்றோர் அதை மறந்து இந்தச் சிக்கலில் தம்மையும் இணைத்துக் கொள்ளுகிறார்கள்.பெற்றோர் தமது வாரிசுகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்குகிறார்கள். சில சமயம் பெற்றோர் காட்டும் ஆர்வம் தமக்காக அவற்றை வாங்குகிறார்களா அல்லது பிள்ளைகளுக்காகவா என்று சந்தேகப்பட வேண்டி உள்ளது என்கிறார் ஒரு வியாபாரி.

சிறுவர் விளையாட்டுப் பொருட்களைத் தாமாகவே கற்பனை செய்து விளையாடுவது மூளை விருத்திக்கு அத்தியாவசியமாகும். ஒரு அட்டைப் பெட்டியே குழந்தையின் உள்ளத்தில் கார் ஆக மாறுகிறது; அதே பெட்டி பின்னர் பிளேன் ஆக மேலே பறக்கவும் கீழே இறங்கவும் செய்கிறது. அப் பிள்ளையின் விளையாட்டில் கற்பனையும் சிந்தனைகளும் இவ்வாறு வளர்கிறது. ஒன்றைப் பார்த்து அதையே கற்பனையாகப் பாவனை செய்வது சிறுவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைக் கல்வி பற்றிய ஆய்வுகளும் மனோதத்துவ நிபுணர்களும் இதைப் பலவாறாக வற்புறுத்துகிறார்கள். ஆனால் பெற்றோர் அதை சட்டை செய்வது இல்லை என்றே தோன்றுகிறது.

விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவை குழந்தைகளின் மனோ வளர்ச்சிக்கு அத்தியாவசியமா என ஆராய்வதற்கு எந்த ஒரு அமைப்பும் கிடையாது. விளம்பரதாரரும் வியாபாரிகளும் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து விளம்பரப்படுத்தி அவர்களது வியாபாரம் மட்டும் அபாரமாக நடக்கிறது.

இன்று பெற்றோராக இருக்கும் பலரும் பெரும்பாலும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்கள். சிறுவர்களுக்குத் தேவை எது தேவையற்றது எது என நிர்ணயிக்கும் உரிமை பெற்றோரதாகவே அன்று இருந்தது. இன்று நிலைமை மாறி விட்டது. பல வீடுகளில் தமக்கு எந்த வகைக் கார் வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் அல்ல; பிள்ளைகளே நிர்ணயிக்கிறார்களாம். இதை உணர்ந்த விற்பனையாளர்களும் விளம்பர தாரர்களும் சிறுவர்களைக் கவரக்கூடியதாகக் கார் விளம்பரங்களைச் செய்கிறார்களாம். இந்த விளம்பரங்கள் எந்த நம்பிக்கையில் செய்யப்படுகிறது தெரியுமா? பிள்ளைகளின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் அந்தக் காரை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தானாம்.

அது மட்டுமல்ல, வீடு எங்கு வாங்குவது; எப்படியான வீடு வேண்டும் என்பதெல்லாம் பிள்ளைகளால் நிர்ணயிக்கப்படுகிறதாம். இதற்குப் பெற்றோர் தலையசைக்கிறார்கள். அனுபவப்பட்ட மூத்தோர் என்பதற்கு இங்கு அர்த்தமே கிடையாது போலும்!

இத்தனை வசதியும் கொண்ட இளம் வாரிசுகள் சந்தோஷத்தில் மிதக்கிறார்களா? அது தான் இல்லை என்கிறார் Prof. Paula. Barrett.  முந்தய தலைமுறையினருடம் ஒப்பிடும் போது இன்றய தலைமுறைச் சிறார்கள் பல மன உழைச்சலுக்கும் ஆளாகிறார்களாம்.

இதனால் நாம் எமது இளம் வாரிசுகளை வளர்ப்பதில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அன்பின் நிமித்தம் அவர்களுக்கு வாரி வழங்குவது அவர்களின் நன்மைக்கா? தீமைக்கா? முடிவு செய்ய வேண்டியது பெற்றோரே!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சிக்காக ............அன்று ஒலிபரப்பாகியது.)

Sunday, February 03, 2019

மாறுபட்ட சிந்தனைப் பண்பாடு

கடந்த ஞாயிறு ABC அலைவரிசையில் Talk back நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு கார் ஓடிக்கொண்டிருந்தேன். திருமண வாழ்வில் பொன் விழாக் காணும் தம்பதியருடன் ஒலிபரப்பாளர் பேசினார். ஆமாம், இந்தத் தம்பதியர் 1955இல் திருமனம் செய்தவர்கள். தமது பொன் விழாவைக் கொண்டாடும் பொருட்டு Flying boat இல் மெபோர்னில் இருந்து கடல் மூலமாக சிட்னிக்கு வந்துள்ளார்கள். பொன் விழா கொண்டாடும் தம்பதியர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஆனால் அவர்களிடம் வயோதிபத்தின் அறிகுறிகள் கிடையாது. திடகாத்திரமும் துணிச்சலும் மிக்கவர்களாக அவர்கள் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

எனது மனம் எம்மவரை நோக்கித் திரும்பியது. அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின் எம்மில் பலருக்கும் திருமண பொன் விழா நடக்கத் தான் செய்கிறது. பெற்றோரைக் கெளரவிக்கும் பொருட்டு பிள்ளைகள் இதை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். பலரும் வந்து வாழ்த்தி உணவுண்டு களித்துப் போகிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியத் தம்பதிகளைப் போல் திடகாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் இந்த வயதிலும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்?

இவை ஏன்? எமது சிந்தனையின் வேறுபாடா? கலாசார வேறுபாடா? பண்பாடா? ஆம்; அத்தனையும் காரணம் எனக் கூறலாம்.

எமது பாரம்பரியம் பெற்றோரானவர்கள் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதுடன் நின்றுவிடுவதல்ல; தொடர்ந்தும் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு பையனோ பெண்ணோ 18 வயதை அடைந்ததும் அவர்கள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள் தம்மைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அதுவரை அவர்களைச் சீராகக் கவனிப்பது தான் கடமை என்பது மேற்கத்தியச் சிந்தனை. அதற்குப் பின் பிள்ளைகள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்பது மேலைத்தேயப் பண்பாட்டு நியதி. ஆனால் நம் பண்பாட்டிலோ நம் பையனோ பெண்ணோ எம்முடன் தான் வாழ வேண்டும் என அழுங்குப் பிடிவாதம் பிடிக்கிறோம். அவர்களின் சுதந்திரத்தில் தாராளமாகத் தலையிடுகிறோம். இதுவே எமது முழுநேரக் கவனமாகி, எம்மைக் கவனிக்க மறுக்கிறோம். நாம் தனி மனிதர். நாமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதெல்லாம் நம் சிந்தனையில் இருந்து அறவே அகன்று விடுகிறது. பிள்ளைகளின் வாழ்வில் எமது சந்தோஷத்தை தொலைத்து விடுகிறோம்; அல்லது மறந்து விடுகிறோம். பெண்னைப் பெற்று விட்டால் அவளுக்குத் திருமணம், சீதனம் என்றெல்லாம் உழைத்து வயோதிப காலத்தில் தமது சேமிப்பையும் பல பெற்ரோர்கள் இழந்து விடுகிறார்கள். இவை யாவும் எமக்கு வேண்டிய பண்பாடுகளா?

தற்போது அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வயது வந்தும் பெற்றோருடன் சில பிள்ளைகள் தங்கி விடுகிறார்கள்.முன்பு மாதிரி வயது வந்தும் போகத் தயங்கும் ஒரு சமுதாயம் உருவாகிறது.
இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாக ஆங்கிலச் சஞ்சிகைகளில் எழுதப்படுகிறது. நாமோ அதற்கு எதிர் மாறாக வாழ்கிறோம். இங்கு வந்த பின் பெண்ணோ பையனோ வெளியே தங்க வீட்டை விட்டு வெளியே போய் விட்டால் எம்மவர்கள் அதை விரும்புவது கிடையாது.

பெற்றோரானவர்கள் மெழுகுதிரி மாதிரி எரிந்து ஒளியைக் கொடுத்து தன்னையே அழிப்பது போல தமது வாரிசுகளுக்காக வாழ்ந்து மாள வேண்டியவர் என்பது எமது பண்பாடு. எமக்குக் கிடைத்த அறிவுரை அத்தனையும் பிறருக்காகத் தியாகம் பண்ணுவது வாழ்க்கையில் சிறந்த அம்சம் என்பதே.  தனக்காக வாழ்வது மிகத் தன்னலமான காரியமாகக் கருதப்படுகிறது.

பண்டைய நூல்களும் இல்லறத்தின் பின் துறவறம் பற்றியே போதிக்கின்றது. இல்லற இன்ப வாழ்வு முடிந்ததும்  உலக இன்பங்களை விடுத்து மரணத்தின் பின் வரும் மோட்சத்தை வேண்டி இறை பிரார்த்தனையில் காலத்தைக் கழிக்க வேண்டும் என்பது இந்தியப் பண்பாட்டு நியதி. எம்மவர்கள் துறவறம் போகிறார்களோ இல்லையோ வாழ்க்கை இன்பத்தைத் துறக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பல காலங்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர் ஜெயக்காந்தன் எழுதிய கதை ஒன்றை வாசித்தேன். இப்பொழுது அந்தப் புத்தகம் என்னிடத்தில் இல்லை. கதையின் பெயரும் மறந்து விட்டது. ஆனால் கதையின் சாரம் மட்டும்ஞாபகமாக இருக்கிறது.

கதை சென்னை தமிழ் சமுதாயத்தைப் பற்றியது. தந்தையும் தாயும் கூட்டுக் குடும்பமாக தமது திருமணமான மகன்களுடனும் அவர்களின் மனைவி மக்களுடனும் வசிக்கிறார்கள். 3 வது மகன் ஒரு Doctor. வெளிநாடு ஒன்றுக்கு உயர்படிப்புக்காகச் சென்ற போது அங்கு ஒரு ஐரோப்பியப் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருகிறார். ஆசாரம் மிக்க இந்த பாரம்பரிய தமிழ் குடும்பத்திலே ஆசாரங்கள் எதுவும் தெரியாத வெள்ளைக்காரி! எல்லோரும் மனோரீதியாக அவளை வெறுக்கிறார்கள். பெற்றோருக்குத் தமது கடைக்குட்டிப் பையன் இப்படிச் செய்து மானத்தை வாங்கி விட்டானே என்ற கவலை.

தாயாருக்கு 45, 46 வயது இருக்கும். ஒருநாள் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். Doctor ஆன 3வது பையன் தாயின் நாடியைப் பரிசோதித்து, அவள் கர்ப்பமாகி இருப்பதாகக் கூறுகிறான். அந்தத் தாயின் மூத்த மகன்களும் மருமக்களும் முகத்தைச் சுளிக்கிறார்கள். அந்தத் தாயாரை ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள். ‘இத்தனை வயதுக்கு மேல் இப்படியா ஆசைப்படுவது! வெட்கம் கெட்டதுகள்’ என்றெல்லாம் பேசிக்கொள்ளுகிறார்கள். தாயும் தந்தையும் பிள்ளைகளின் எதிரில் குற்றம் புரிந்தவர்கள் போலத்  தலைகுனிந்து கூனிக் குறுகி நிற்கிறார்கள்.

விஷயம் தெரிந்ததும் புதிதாக வந்த வெள்ளைக்கார மருமகள் மற்றவர்களுக்கு மாறாக அவர்களைக் கட்டி அணைத்துத்  தனது சந்தோஷத்தைத் தெரிவிக்கிறாள். இந்த வயதில் இவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதை அவள் ஒரு சந்தோஷமான விஷயமாகக் கருதுகிறாள். மாமியாரை முற்றுமுழுதாகக் கவனிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்ளவும் செய்கிறாள்.

இந்தியர்களின் சிந்தனைப் பண்பாட்டு மாறுபாட்டை எழுத்தாளர் ஜெயக்காந்தன் அழகாகச் சித்தரித்து எது சிறந்தது என்ற தீர்ப்பை எம்மிடமே விட்டு விடுகிறார்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக 27.9.2005 இல் ஒலிபரப்பானது. )

நோன்பு / விரதம்

விரதம் / நோன்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து உணவை உண்ணாது விடுவது. இத்தகைய உண்ணாநோன்பைப் பல மதத்தினரும் கைக்கொள்ளுகிறார்கள். மதங்கள் போதிப்பதை மத அனுஷ்டானங்களாக அம் மதத்தைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். மதங்கள் வேறுபட்ட தெய்வங்களை வழிபட்ட போதும்; மக்களின் மேன்மைக்கான வழிமுறைகளைக் காட்டி நிற்பதே மதம் ஆகும்.

உண்ணா நோன்பு எமக்கு உணர்த்துவனவோ பல. நோன்பு இருக்கும் போது பசி, தாகம் போன்ற உனர்வுகளை நாம் அந் நேரம் கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு பசியுணர்வை அனுபவித்தால் தான் எமக்குப் பசி என்றால் என்ன என்பது புரியும். நாமே பசியின் இயல்பை அறியும் போது அதன் தாக்கம் எத்தகையது என்பதை அனுபவித்து உணர்கிறோம். இவ்வாறு உணர வைப்பதால் பசிக்கொடுமையால் வாழுபவரின் துன்பத்தை நாமும் உணருகிறோம் அல்லவா? அதன் பின்பும் பசியால் வாடுபவனுக்கு உணவளிக்காமல் இருப்போமா? இதை உணர்த்துவதே மதங்களின் உயர்ந்த நோக்கம்.

அதை விடுத்து, நாம் உண்னாமல் பட்டினி கிடந்தால் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பான் என எண்னுவது எத்தனை மடமை! இதையே யுகக்கவி பாரதியும் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்’ என ஆவேசமாக ஆர்ப்பரித்தான். உணவில்லாதவர் படும் துன்பத்தை மத அனுஷ்டானமாக நாசுக்காக நம்மை உணர வைப்பதல்லவா மதம்! இதுதான் மதம் மனிதனை மனிதனாக்கும் யுக்தியோ?

விரதம் அல்லது உண்ணா நோன்பு எம்மை பசி என்றால் என்ன என்பதை மட்டும் உணர வைக்கிறதா? இல்லை, எமது உடலையும் மனதையும் திடப்படுத்துவது இந்த நோன்பு. அதன் மூலம் எமது சிந்தையும் உடலும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால் நாம் திடசித்தம் பெறுகிறோம்.

நோன்பு / விரதம் என்பது நாம் களைத்து, சோர்ந்து உட்கார்ந்து விடுவதல்ல. எமது நாளாந்த வேலைகளை நோன்பின் போதும்  நாம் உற்சாகமாகக் கவனிக்க வேண்டும். நாம் விரதம் இருக்கிறோம் எனப் பிறரிடம் கூறி அவர்களின் அனுதாபத்தை பெறுவதற்கல்ல நோன்பு. உற்சாகத்துடன் மிளிரவே நோன்பு. இதுவே எமக்குத் திடத்தைத் தருவது.

மத அனுஷ்டானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் சேர்ந்து திடமளிப்பது. உண்ணாமல் இருப்பதால் உடல் பல நன்மைகளைப் பெறுகிறது. எமது வாயில் இருந்து உடலின் அனைத்து சீரணிக்கும் சீரன உறுப்புகள் யாவும் ஓய்வு எடுக்கும் போது அதன் மூலம் உடல் புத்துயிர் பெற முடிகிறது. உணவு எமக்கு ஊட்ட சக்தியை வழங்கும் அதே நேரம் கழிவுப் பொருட்களும் அதனுள் உண்டு. இதுவே மலசலமாகவும் வியர்வையாகவும் வெளியேறுகிறது. இருந்த போதும்  எமது உள் உறுப்புக்கள் இவ்வாறான வேண்டாதவற்றையும் அவ்வப்போது  தம்முள் உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. எமது உபவாசத்தால் இத்தகைய அசுத்தமும் நீங்க வாய்ப்புண்டு.

எமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் தானியங்கி நமக்குச் சக்தியை வழங்குகிறது. தொடர்ந்து அவை பெறும் ஊட்டம் அவற்றுக்கு அதிகப்படியாகும் ஆபத்தும் உண்டு. இதனால் உபவாசம் இத்தகைய ஆபத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும் செயலையும் செய்கிறது எனில் மிகையாகாது.

அது மட்டுமா? உபவாசத்தின் போது எமது உடலின் வேண்டாத நிறை குறையவும் வாய்ப்புண்டு. இரத்த அழுத்தம் சீரடையும். கொலஸ்ரோல் மற்றும் சீரான தூக்கமின்மை, இருதய நோய், சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறு, பாரிசவாதம் போன்றவை வராது எமது உடலைச் சீராக வைத்திருக்கவும் இவ்வகை நோன்புகள் / விரதங்கள் / உபவாசங்கள் உதவும். மொத்தத்திலே உபவாசம் என்பது வாழ்வை வளம் படுத்தும். இன்னும் என்ன யோசினை? வெகு விரைவில் நாம் உண்ணா நோன்பைக் கைக்கொள்ளலாம்.

மகாத்மா காந்தி பல நோக்கங்களை அடைவதற்கு; சாதிப்பதற்கு உண்ணா நோன்பை அனுஷ்டிப்பது வழக்கம். இதனால் அவர் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதும் உண்டு. அவருக்கு உண்ணா நோன்பு ஓர் ஆயுதமே. தான் நேர்மையாகச் சரி என எண்ணுவதை சாதிப்பதற்கு இவர் பட்டினி கிடக்கத் தொடங்கி விடுவார். இவரே அரசியல் காரனங்களுக்காக உண்ணா நோன்பு அனுஷ்டித்த முதல் பிராகிருதியாக இருக்க வேண்டும்.

போர் என்பது மற்றவர்களைத் தாக்குவது; அழிப்பது. அதனைச் செய்யாது சாத்வீகப்போராட்டத்தால் தன்னைத் தானே வருத்தி மற்றவர்களை மசிய வைப்பது மகாத்மாகாந்தியின் அரசியல் போராட்ட பாணியாக இருந்தது. இதில் அவர் வல்லவராக விளங்கினார்.அவரது சத்தியாக்கிரகம் என்ற ஆயுதம் உலகையே வியக்கவைத்தது.

தன் நாட்டு மக்களிலே அன்பு கொண்ட மகாத்மாகாந்தி எப்பொழுதும் தான் உண்ணும் உணவு பற்றி மிக மிக அவதானமாக இருப்பார். அதிகப்படியாக உண்ணுவதை; பிறிதொரு மனிதன் உண்டு பசியாறக் கூடிய உணவை தான் உண்டுவிடக் கூடாது என அவர் எப்போதும் எண்ணினார். ஒரு வாழைப்பழத்தை உண்டால் அது ஒரு நேர உணவுக்குச் சமனானது,  அதனால் ஒரு வாழைப்பழத்தை உண்டால் வேறு எதுவும் உண்ணத் தேவை இல்லை என்ற எண்ணம் உள்ளவராக அவர் இருந்தார்.

இயற்கை வைத்திய முறை உணவு உண்ணாமல் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை உடையது. நான் இந்திய கர்நாடக மானிலத்தில் ஓர் இயற்கை வைத்திய நிலையத்தில் சில நாட்கள் தங்கி இருந்தேன். இங்கு முதலிலே அந்த வைத்தியர் என்னைக் கேட்டது 3 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா என்பதே! முயன்று பார்க்கிறேன் என்றேன். அவ்வாறு இருக்கும் மூன்று நாட்களும் நீத்துப் பூசணிச் சாறு வழங்கப்பட்டது. அதுவும் 3 நேரம் மட்டுமே. மற்றம்படி பச்சைத்தண்ணீர் மட்டும் தான். ஆனால் அந்த மூன்று நாட்களும் எனது உடல் களைப்பையோ சோர்வையோ உணரவில்லை. காலையும் மாலையும் யோகாசனப் பயிற்சி செய்தேன். நான்காம் நாள் திரும்பவும் வைத்தியர் என்னை மேலும் 2 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா எனக் கேட்டார்.  இது எனக்கு ஒரு பிரச்சினையாக இல்லை; தொடர்கிறேன் என்று கூறினேன். 5ம் நாள் இரவு எனக்கு நல்ல காச்சல் வந்தது. எனது உடலில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறுகிறது என்றார்கள்.

இயற்கை வைத்தியம் இயற்கையோடிணைந்த எமது உடலை இயற்கை இயல்புகள்  மூலமாகவே சீர் செய்வது. உண்ணாது இருக்கும் போது எமது உள் உறுப்புக்கள் ஓய்வு பெறுவதுடன் பலகாலமாக நாம் உண்ட உணவின் மூலம் சில அசுத்தத் தன்மையும் எமது உடலில் தங்கி எமது உடல் நலத்தைக் கெடுக்கிறது. இவ்வாறு உண்ணாது இருந்து, நீர் மட்டுமே அருந்துவதால் எமது உடல் இயற்கையாகவே சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உலக மதங்கள் யாவும் உண்ணா நோன்பைப் போதிக்கின்றன.

நீங்களும் முயன்று பாருங்கள். உங்கள் உடல் சீரடைவதை நீங்கள் உணரலாம்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 20.10.10 அன்று ஒலிபரப்பாகியது.)

Friday, February 01, 2019

அரங்கேற்றங்கள்


இன்று தமிழர்கள் வாழும் நகரங்கள் அனைத்திலும் அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழரின் கவின் கலைகள் எனப் போற்றப்படும் நடனம், வாய்ப்பாட்டு, வாத்தியங்களான புல்லாங்குழல், மிருதங்கம், வீணை போன்றவற்றைக் கற்றுக் கொண்ட இளைஞர்கள், யுவதிகள் தனித்து ஒருவராக மேடையேறி தமது திறமையை வெளிப்படுத்துவது அரங்கேற்றமாகிறது.

அரங்கேற்றம் என்ற சொல் அரங்கத்தில் ஏறுவது எனப் பொருள் படும். ஒரு கலைஞர் தனித்து இயங்கக் கூடிய திறமையைப் பெற்றதும் அத் திறமையைச் சபையோருக்கு எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றமாகிறது. ஆக மொத்தத்தில் ஒரு கலைஞன் உருவாகி இருப்பதை எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றம் என்ற சடங்காகும்.

இந்தமாதிரியான அரங்கேற்றங்கள் எமது தந்தையர் காலத்திலோ அல்லது எமது பாட்டனார் காலத்திலோ நடைபெற்றதாக நாம் அறியவில்லை. ஆமாம், இந்த வளர்ந்து வரும்; மாறிவரும் நாகரிகத்தின் ஓர் அங்கமே அரங்கேற்றம்.

முன்பெல்லாம் தொழில்கள் யாவும் ஜாதி அடிப்படையிலே நடந்து வந்தன. ஆடல் மற்றும் இசைத்தொழிலும் இவ்வாறே ஜாதி அடிப்படையில் நடந்தது. இந்தக் கவின் கலைகளை வளர்ப்பதற்கு இசை வேளாளர் என ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். இவர்களே இந்தத் தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்களை ஊர் வழக்கில் ‘நட்டுவர்’ என அழைத்தனர். இலங்கையைப் பொறுத்தளவில் இவர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியத்தை வாசித்து வந்தார்கள்.

ஆனால் எமது கலைகளின் இருப்பிடமான தென்னிந்தியாவிலே இசை வேளாளர் பரம்பரையில் சிலர் நாதஸ்வரக் கலையை வளர்த்தனர். வேறு சில குடும்பங்கள் நாட்டியத்திலே சிறந்து விளங்கினார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்ட காலம் வரை இந்த நட ன நங்கையர் கோயில்களிலே ஆடி வந்தார்கள். இவர்களுக்குக் கோயில்களிலே பல்வேறு கடமைகள் இருந்தன. கொடிஸ்தம்பத்தின் முன் ஆடுவது, சுவாமி புறப்பாட்டின் போது ஆடுவது, சுவாமி ஊர்வலம் வரும் போது ஆடி வருவது போன்ற பல கடமைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. இவர்கள் தேவ தாஸிகள் என அழைக்கப்பட்டனர்.( தேவ = இறைவன், தாஸி= அடிமை. ) நாதஸ்வரக் கலைஞர்களின் கடமைகள் போன்றே அன்றும் இவைகள் நடனத்துக்குக் கடமைகளாக விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஓதுவார்கள் தேவாரங்களைப் பாடி இறைவனின் புகழைப் பாடுவார்கள். ஆடல் நங்கையரோ இறைவனின் மேன்மைகளை ஆடல் மூலம் வெளிப்படுத்தினர். அதற்காகக் கோயில் இவர்களுக்கு மானியம் கொடுத்து வந்தது.

இப்படியான ஆடல் நங்கையர் கோயில்களில் ஆடுவதுடன் இவர்களின் கடமை முடிந்து விடவில்லை.அரச சபைகளிலும் இவர்களின் நாட்டியங்கள் இடம்பெற்று வந்தன. கவிஞர்களையும் புலவர்களையும் ஆதரிப்பது போன்றே அரசன் ஆடல் கலைஞர்களையும் போஷித்து வந்தான்.

இவ்வாறாக, ஆடல் கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு அரசன் பரிசில்கள் வழங்கினான். உறவாக்கி நல்லூர் என்ற கிராமம் அரசனால் உறவாக்கி என்ற ஆடல் நங்கைக்கு கொடுக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது.

அன்றய சமுதாயத்திலே குடும்பப் பெண்ணானவள் ஆடல் பாடல் எதுவும் தெரியாதவளாகவே இருந்தாள். ஏன் கல்வியறிவு கூட அற்றவளாகவே விளங்கினாள். இவற்றை அறிந்திருப்பது இல்லாளுக்கு அழகல்ல எனக் கருதிய காலம் அது. ஆனால் இந்த ஆடல் நங்கையரோ கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக; கீதங்கள் பாடுவதிலும் வாத்தியங்கள் இசைப்பதிலும் நிருத்தம் ஆடுவதிலும் சிறந்து விளங்கினர். இத்தகைய நங்கையர் அரசன் முதற்கொண்டு உயர் வர்க்கத்தினரின் ஆசை நாயகிகளாகவும் இருந்தனர்.

அன்றய சமுதாயக் கட்டுக்கோப்பில் இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே விளங்கியது. இந்த ஆடல் நங்கையருக்கு அன்று சமூகத்திலே போதியளவு செல்வாக்கும் அந்தஸ்தும் கூட இருந்தது.

இப்படியான ஆடல் நங்கை ஒருத்தியே சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரமான மாதவி. மாதவியின் ஆடல் அரங்கேற்றம் அரசனின் முன்னிலையில் நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கி.பி. 4ம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படும் சிலப்பதிகார காலத்திலே அரங்கேற்றம் என்ற சொல் வருகிறது. இதில் ஆடல் நங்கையான மாதவி அரங்கேற்றத்தின் பின் தனது தொழிலை ஆரம்பிக்கிறாள்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் தாஸி குலத்தைச் சாராத பிற குலத்தினரும் நாட்டியத்தை ஆடி அரங்கேற்றம் செய்கிறார்கள். இத்தகைய அரங்கேற்றங்கள் தொழில் முறையில் தாம் கற்ற கலையைப் பயன் படுத்தி  கலைவளர்க்க உதவுகின்றன.

எமது இலக்கியச் செல்வமான சிலப்பதிகாரத்திலே மாதவிக்கு அரங்கேற்றம் நடந்ததாகக் கூறப்படுவதால் அன்றும் இந்த அரங்கேற்றங்கள் வழக்கில் இருந்ததை அறிகிறோம். ஆனால், இசை வாத்தியக் கலஞருக்கு அரங்கேற்றம் அன்று நடந்தமைக்குச் சான்றுகள் கிடையா.

இன்று முன்னணியில் நிற்கும் ஆடல் கலஞர் யாவரும் மாதவியைப் போன்று அரங்கேற்றம் செய்தவர்களே. ஆனால் முன்னணிப் பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் யாவரும் அவ்வாறு அரங்கேறி முன்னணிக்கு வந்தவர்களல்லர். இவர்கள் சபாக்களிலே இளம் கலைஞர் வரிசையில் பாட வந்து தமது திறமையால் உயர்நிலைக்கு வந்தவர்கள்.

நித்தியஸ்ரீ, செளமியா, உன்னிகிருஷ்ணன் போன்று முன்னணியில் நிற்கும் இளம் இசைக்கலைஞர்களும் சரி  முன்னாளில் பிரபலமான டீ.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, செம்மாங்குடி போன்ற பெரிய வித்துவான்களும் சரி அரங்கேற்றம் செய்யாது முன்னணிக்கு வந்தவர்களே. வாத்தியக் கலைஞர்களும் அவ்வாறே! இசைக்கலைஞர்களுக்கு அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம்  அன்று இருக்கவில்லை.

ஆனால், ஆடல்கலைஞர்களின் கதை அரங்கேற்றத்திலேயே ஆரம்பமாகிறது. ஆடல் கலைஞர் ஒருவர் முன்னணிக்கு வரவேண்டுமானால் அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் உண்டு. வெளிநாடுகளில் மாத்திரமன்றி தமிழ்நாட்டிலும் இத்தகைய நிலைமையே  இன்றும் உள்ளது.

இங்கு எமது பெண்கள் பலர் அரங்கேற்றம் முடிந்ததும் பெரும்பாலாக ஆடுவதை நிறுத்தி விடுகின்றனர். அரங்கேற்றத்தில் தான் ஒரு கலைஞர் உருவாகிறார் என்றால் அரங்கேற்றத்தின் பின் தான் கற்ற கலையை விருத்தி செய்யாது விடுவது கருவிலேயே சிதைந்து போன நிலை தான்.

அரங்கேற்றம் என்பது Car Driving இல் ’P’ License கிடைத்த மாதிரித் தான். ஆனால், மேலும் பல வருடங்கள் Car ஓட்டும் போது தான் நீங்கள் தேர்ந்த திறமையுடைய Driver ஆக முடியும். அதே போல பலவருடங்கள் நீங்கள் கற்ற கலையைப் பயிற்சி செய்யும் போது தான் அந்தக் கலையின் நுணுக்கங்களை எல்லாம் அறிந்து அதை விரிவு செய்ய முடியும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 13.4.2005 அன்று ஒலிபரப்பாகியது.)

மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் அதனால் ஏற்பட்ட அழிவில் இருந்து தம்ம நிவர்த்திக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரழிவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய போதும் சில புதிய தகவல்களும் எமக்குக் கிடைக்கின்றன.

அண்மையிலே வெளிவந்த ஒரு செய்தி எம்மை வியப்புக்குள்ளாக்கியது. சென்னைக்கு அருகில் உள்ல மகாபலிபுரம் என்னும் கடற்கரை கடல் அனர்த்தம் ஏற்பட்ட சமயத்தில் 100 மீற்றர் வரை உள்வாங்கியதாம். இவ்வாறு உள்வாங்கிய சமயத்தில் மகாபலிபுரத்துக் கடலுக்குள் பல சிற்பங்களைக் காணக்கூடியதாக இருந்ததாம்.

இது வரை இப்படியாகக் கடலின் அடியில் இருந்த சிற்பங்கள் யாராலும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஒரு சுனாமி ஏற்பட்டிராவிட்டால் மேலும் பலகாலம் இது யாரின் கண்ணிலும் பட்டிருக்காது. சுனாமி அனர்த்தத்தின் போது இதைக் கண்டதால் தற்போது இவை பற்றி அறிவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வாளர்களும் கடற்படையினரும் ஆய்வில் மூழ்கியுள்ளதாக அறிகிறோம். இந்த ஆய்வு எத்தனை வியப்பான செய்திகளை அளிக்குமோ என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களில் பலர் இந்த மாமல்லபுரத்திற்குப் போயிருக்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சிற்பங்களைக் காண்பதற்குப் பலர் போவது வழக்கம். இன்று தமிழரின் நாகரிகச் சின்னமாக உயர்ந்து நிற்கும் கோயில்கள் கட்டுவதற்கு இந்த இடம் தான் பயிற்சிக்களமாக அமைந்தது. சிற்பிகள் தாம் அமைக்கப் போகும் சிற்பவடிவங்களை இங்கு காணும் பெரிய பாறாங்கற்களிலே செதுக்கிப் பழகினார்கள். இங்கு 5 இரதம் போன்ற வடிவங்களைக் காணலாம். இதைப் பாண்டவர் இரதம் என்பார்கள். இதுவே கல்லிலே எப்படிக் கோயில் அமைப்பது என்ற எண்ணத்தை உருவகப்படுத்திப் பார்த்ததாகக் கருதப்படுகிறது.

வேறு சில கற்கள் குடையப்பட்டு அதற்குள் சிற்பவடிவங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு பெரிய கல்லிலே குரங்கு பேன் பார்ப்பது போன்ற காட்சி. அதை அடுத்து அர்ச்சுணன் தவம் செய்வது போன்ற காட்சி. இது யாவரையும் கவர்ந்தது. தவம் செய்யும் சிற்பக்காட்சியில் அர்ச்சுணன் ஒற்றைக்காலிலே நிற்கிறான். நீர், ஆகாரம் எதுவுமில்லாமல் அவன் தவம் செய்வதால் அவனது விலா எலும்புகள் யாவும் புடைத்து தாடியுடன் அச் சிற்பம் கானப்படுகிறது.

நான் சென்னையில் படித்த காலகட்டத்திலே மாமல்லபுரம் இன்று இருப்பது போல அல்லாமல் அதை அடுத்து அருகாமையில் புல்லும் புதருமாகக் காணப்பட்டது. அங்கெல்லாம் நந்தி வடிவில் அமைந்த சிலைகள் விரவிக் கிடந்தன. சில முழுமை பெற்றிருக்கும் சில முழுமை பெறாது பாதியிலே நிறுத்தப்பட்டிருக்கும். ஆம், இவை யாவும் சிற்பக்கலை கற்றுக் கொண்ட மாணவர்களது கைவண்ணம் என்பது இவற்றைப் பார்த்தவுடனே புலனாகும். தற்போது அவை யாவும் சேகரிக்கப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன.

இன்று சிற்பிகளுக்கான அரச கலைக்கல்லூரி மாமல்லபுரத்துக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பங்கள் குறித்த சிந்தனைகலோடு அமைவாக கோயில்கள் தமிழ்நாட்டில் எப்போது கட்டப்பட்டன என்ற எண்ணம் எமது மனதில் தோன்றுவது இயல்பு. பல்லவ அரசர் காலத்திலேயே (கி.பி.300 - 900) கோயில் கட்டும் கலை உருவானது. குறிப்பாகக் கூறுவதானால் மகேந்திரவர்மன் காலத்திலேயே இது தொடங்கப்பட்டது எனலாம்.

இது பக்தி இயக்கம் வளர்ந்த காலம். சமணப்பள்ளிகளுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் எதிராக சைவ வைணவ பக்தி இயக்கம் போர் தொடுத்தது. இந்த சமயத்திலே பக்தி நெறியை வளர்க்க கோயில் வழிபாடு இன்றியமையாததாக கருதப்படலாயிற்று.

சிவனை லிங்க முறையில் வழிபடுவது இந்தியா பூராகவும் இருந்தது. ஆனால் சிவனை நடராஜ மூர்த்தியாக வழிபடும் முறை தமிழ் நாட்டிற்கே உரியது. தெய்வங்களுக்கும் நடனத்திற்கும் இருந்த உறவால் நடன உருவங்கள் பல கோயிகளில் அமைக்கப்பட்டன. இதனால் நடனத்தைப் போலச்  சிற்பக்கலையும் ஒரு லலித கலையாக வளரத்தொடங்கியது. சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்ட கோயில்களே சகல கலைகளையும் வளர்க்கும் இடமாக இருந்தன. இதனால் கோயில்கள் அழகிய சிலைகளுடன் கூடிய கலா மண்டபங்களாக காட்சியளித்தன. அழகிய நடன மங்கையரின் உருவங்களும் சிற்பவடிவு பெற்றன. பண்டைய ஆடற்கலையின் சிறப்பை நாம் இந்தச் சிற்பங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் சிதம்பரம் தலத்தின் கோபுரச் சிற்பங்கள் முதன்மை பெற்றவை. இங்கு காணப்படும் மேற்கு கோபுர வாயிலில் 93 நாட்டிய நிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோபுரம் அந்தக் காலத்தில் ஆடற்கலைக்கு அளிக்கப்பட்ட சிறப்பை எடுத்தியம்புகிறது..

இவ்வாறு, தென்னகம் முழுவதும் விரவிக் கிடக்கும் கோயில்கள் அன்று சிற்பக்கலைக்கு அளித்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. இந்த அழகிய சிற்பங்கள் தமிழனை நாகரிகத்தில் உயர்ந்த ஒரு சமுதாயமாக உலக அரங்கில் நிலைநிறுத்த உதவுவன எனில் அது மிகையில்லை.

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றிய ஓர் உண்மையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். யான் சென்னையில் படித்த காலத்தில் இன்றுபோல் சுற்றுலாத்துறை பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. பலரும் சென்னையில் உள்ள தமது நண்பர்களின் தயவில் தான் பலவற்றையும் சென்று பார்ப்பது வழக்கம். நான் அங்கு இருப்பதன் துணிவில் எனது நண்பர் ஒருவர் சென்னைக்கு முதன் முறையாக வந்தார். எனது கணவரின் பல்கலைக்கழகத் தோழனான அவர், திரைப்பட காட்சி எடுக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினார். அதனால் எனது குருவின் சிபாரிசில் AVM  studio க்கு அவரை அழைத்துச் சென்று காட்டினேன். பின்னர் மாமல்லபுரத்துக்குப் போனோம். அச் சிற்பங்களைப் பார்த்த நண்பர், ‘என்ன கார்த்திகா, சும்மா கற்பாறைகளாகத் தெரிகிறது’ எனச் சப்புக் கொட்டினார். யாவுமே பொய் என்பதை வலியுறுத்துவதற்கு எனக்கு வேதாந்திகள் சொல்லும் இரு வரிகள் தான் அன்றைக்கு ஞாபகத்துக்கு வந்தன. அது,

‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை’

என்ற வாசகம் தான் அது.

அதாவது மரத்தையே நோக்கிக் கொண்டிருப்பவனுக்கு அதில் செதுக்கியுள்ள யானையின் உருவம் தெரிவதில்லை. மறுபுறத்தில் யானைச் சிற்பத்தையே நோக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு அது செதுக்கப்பட்ட மரம் தெரிவதில்லை என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

இது போலவே எனது நண்பருக்கும் மாமல்லபுரம் பூராவும் கற்களாகவே தென்பட்டது போலும்! ஆனால் எனது நண்பர் அழகியற்கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆயினும் தனக்குத் தோன்றியதை அவர் ஒழிவு மறைவின்றி கூறுவதில் அவர் மன்னர்.  ஆயினும் இவர் ஏன் இவ்வாறு கூறினார் என நான் வினா எழுப்பத் தொடங்கினேன். வீடு திரும்பியவுடன் எனது கார்டியனான அரிஞர் கண. முத்தையா அவர்களிடம் நடந்ததைக் கூறினேன்.

‘ஆம் கார்த்திகா, உனது நண்பர் கூறியதிலும் ஓர் உண்மையுண்டு. மாமல்லபுரத்துச் சிற்பங்களும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முறையும் கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலத்தைக் காட்டுகிறது’ என அவர் விளக்கினார்.

ஆகவே, சிற்ப வரலாற்றுக் துறைக்கு மாமல்ல புரத்துச் சிற்பங்களும் வேண்டியவையே! ஆகவே தான் அவையும் பேணிப்பாதுகாக்கப் படுகின்றன போலும்!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சிக்காக ..........அன்று ஒலிபரப்பானது.)