Thursday, January 31, 2019

இந்தியாவில் பார்சி இனத்தவர்

இன்று மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பொன்னாட்டை விட்டு பிற நாட்டில் வாழ்வது சகஜமாகி விட்டது. இவ்வாறு பிறநாட்டில் போய் வாழ்வதற்கப் பல காரணங்கள் உண்டு. பிறநாட்டில் வசதியான வாழ்வைத் தேடிப் போகிறவர்கள் உண்டு. அதே சமயம் நாட்டில் ஏற்படும் போர் முதலான நெருக்கடி நிலைமைகளால் தம் சொந்த நாட்டில் வாழ முடியாத சந்தர்ப்பத்தில் பிறநாடுகளில் தஞ்சம் புகுவாரும் உண்டு.

இந்தியப் பெருங்கண்டத்தில் இப்படித் தஞ்சம் புகுந்தவர்கள் தான் பார்சி எனப்படும் இனத்தவர். இவர்கள் அன்று பேர்ஷியா எனப்பட்ட பாரசீகத்தில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்தவர்களே!

இவர்கள் யார் என உங்களுக்கு மேலும் தெரிய வேண்டுமா? இந்தியக் கண்டத்தின் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா.காந்தியின் கணவர் Feroze Gandhi ஒரு பார்சி இனத்தவரே. இவர்கள் நெருப்பைத் தெய்வமாக வழிபடுபவர்கள். வழிபாட்டிற்காக நெருப்பை ஏற்றினால் அதனை அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். பண்டைய கிரேக்கர்களிடமும் இத்தகைய நம்பிக்கை இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த பார்சி மக்கள் கப்பலில் ஏறி இந்தியக் கண்டத்தை அடைந்து அங்கு தஞ்சம் கோரிய போது அன்று அந் நாட்டை ஆண்ட மன்னன் தஞ்சம் தர மறுத்தானாம். இதற்கு உதாரணமாக ஒரு பாத்திரத்தில் பாலை இராஜகுரு அவர்களின் முன் வைத்தார். அதன் அர்த்தம் எமது சமுதாயம் பால் போன்றே தூயதாக உள்ளது; இதை நாம் மாசுபடுத்த விரும்பவில்லை என்பதாகும். பிற நாட்டவர் எம்முடன் கலப்பதை நாம் விரும்பவில்லை என்பது அதில் பொதிந்திருந்த உள்ளர்த்தமாகும்.

அதற்குப் பதிலாகக் கப்பலிலே வந்த பார்சிகள் குருவானவரின் பாலில் ஒரு கரண்டி சக்கரையைக் கலந்தனராம். அதன் அர்த்தம் பாலில் சக்கரை கலந்தது போல் உங்களுடன் இனிமையாக நாம் கலந்து வாழ்வோம் என்பதாகும்.,

உடனே அவர்களுக்குத் தஞ்சம் புக இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அது என்னவெனில், எந்த ஒரு பார்சி இனத்தவரும்  தமது சமயத்தை இந்த மண்ணில் பிரசாரம் பண்ணி மக்களை மதம் மாற்ற முற்படக் கூடாது என்பது அந் நிபந்தனையாகும். அதற்கமைய இந்திய பார்சி இன மக்கள் எவரும் தமது மதத்தை இன்றுவரை பரப்ப முற்படுவது கிடையாது.

இவர்கள் இறந்ததும் உடலை எரிப்பதோ புதைப்பதோ கிடையாது. மாறாக, இறந்தவரின் உடலை உயர்ந்த ஒரு கோபுரத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். அந்த இடத்தை ‘டாக்மா’ அல்லது  Tower of  Silence என அழைக்கிறார்கள். கழுகுகளுக்கு அவ் உடல் இரையாகும். இச் செய்கையை அவர்கள் வாழ்க்கையின் கடைசித் தானம் எனக் கருதுகின்றனர். இதற்காக இந்தியாவில் பெரிய நகரங்களிலே உயர்ந்த பெரிய கோபுரங்கள் உண்டு. இந்தப் பழக்கம் இவ் இனத்தவரால் இன்றும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் வாழும் பார்சி இனத்தவருக்காக இது போன்ற கோபுரம் ஒன்று உண்டு.

இந்திராகாந்தியின் கணவர் Feroze Gandhi பார்சிக் காரராக இருந்தும் தனக்கு அத்தகைய சம்பிருதாயம் வேண்டாம் எனக் கூறி இருந்ததால் அவரின் உடல் தகனம் பண்ணப்பட்டது.

மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டாலும் இந்தியா என்ற பெரிய சாகரத்தில் இவர்களும் இந்தியர்களாகக் கலந்து விட்டார்கள். அண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் பார்சி இன இளைஞனைத் திருமணம் செய்து கொண்டாள். இந்த இளைஞனின் பெற்றோர் இந்து முறைப்படி தீ வலம் வந்து திருமணம் செய்ய விரும்பவில்லை. தீயை அவர்கள் தெய்வமாக வழிபடுவதால் தீவலம் வந்து திருமணம் செய்வது அவர்கள் சம்பிருதாயத்தில் ஏற்புடயதாக இருக்கவில்லை.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக ...........அன்று ஒலிபரப்பாகியது)

மாகாளியின் அறைகூவல்

இன்றய காலத்திலே  யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை  சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை  பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது.

அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.

பாரதியாரோ,

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
யென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுனிந்தார்’

என்று பாடி இன்று 80 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் உலகில் இந்தக் கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களின் விசேஷ கொண்டாட்டமாகக் கொள்ளப்படும் இந்த நவராத்திரி நாட்களை நாம் ஏன் பெண்கள் தம் நிலையை; திறமையை; பலத்தை உணரவைக்கும் காலமாகக் கொள்ளக் கூடாது?

பாரதி வாக்கில்,

‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என உயர்ந்து விட்ட பெண்ணினம்’

என்பதற்கிணங்க தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இருந்து விடாது தன் சக இனத்துக்காகக் குரல் கொடுக்கவும் போராடவும் துணியும் போது தான் இந்த பரந்த உலகில் அல்லலுறும் பெண்களைக் காப்பாற்ற முடியும்.

இந்தச் சமய நூல்கள் கூறுவது மகிஷன் உலகுக்கிழைத்த கொடுமையில் இருந்து மக்களைக் காக்க பார்வதியே மாகாளியாகிறாள் என்பதாகும். கைகளிலே சூலம், சக்கரம், வாள் அம்பு வில்லு என்பன சகிதமான ஆயுத தாரியாக மகிஷனைத் தாக்க அவள் புறப்படுகிறாள். ஒன்பது நாள் நீண்ட யுத்தத்திலே கண்களுக்குப் புலப்படாத அந்த அரக்கனை அவள் கொல்கிறாள்.

பெண் அடிமை என்பதும் வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படாத அரக்கனே. மதம், சம்பிருதாயம், கலாசாரம் என்ற போர்வையிலே பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. தம் இனத்துக்கு இழைக்கப்படும் கொடுமையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு பெண்ணுமே மாகாளியாக வேண்டும்.

புறப்படுங்கள் பெண் இனமே புறப்படுங்கள்!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள் நிகழ்ச்சிக்காக ........திகதி ஒலிபரப்பானது)

எங்கள் வேர்

இன்று எமது வாரிசுகள் ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள்.பெரும்பாலும் இவர்கள் தமது பாரம்பரியத்தை அறியாதவர்கள். பிறநாட்டில் நாம் அந் நாட்டு பிரஜைகளாக வாழ்ந்த போதும் அந் நாட்டவரோ எம்மை வந்தேறு குடிகளாகவே கருதுகிறார்கள். இதனால் எமது இளம் சிறார்கள் முற்றுமுழுதாக இந்த நாட்டவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்துடன் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆமாம், சுதந்திரம் என்பது மனோரீதியாக இவர்கள் தாம் எந்த நாட்டவருடனும் சரிநிகர் சமானமாக நிற்கக் கூடியவர்கள் எனக் கருதுவதை உள்ளடக்கி நிற்கிறது. பல இளம் தலைமுறையினர் இந்தக் கறுப்புப் பெற்றோருக்கு பிறந்து நாம் அல்லல் பட வேண்டி உள்ளதே எனப் புளுங்கத்தான் செய்கிறார்கள். காரணம் நம் பாரம்பரியம், நாடு யாவும் அடிமைப்பட்ட பூர்வீகம் உடையது என்ற அவர்களின் மனதில் ஆழ வேரூன்றிப் போயுள்ள எண்ணமே. தொழில்நுட்ப விஞ்ஞான அறிவில் முன்னேறியது மேற்கு நாடுகள். எம்மவரோ எதையும் அறியாதவர் என அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

இந்தப் பின்னணியில் அவர்களுக்கு நமது சரியான பூர்வீகத்தை அறியத் தருவது நமது கடமையாகும். இதன் மூலம் அவர்கள் தமது பூர்வீகம் சிறந்த பின்னணியில் அமைதிருப்பதை அறியும் போது தாழ்வு மனப்பாண்மையை விடுத்து சிறந்த ஒரு பூர்வீகத்தின் வாரிசுகள் என்ற பெருமிதத்துடன் வாழ முடியும். இதை அறிந்து இவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது நமது கடமையாகும்.

இன்று எமது பண்பாட்டின் சின்னமாக ஓங்கி நிற்பது கோயிலும் கோயில் கோபுரங்களும். இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டும் அன்று நிலவவில்லை. இந்தக் கோயில்கள் நாடக அரங்காகப்; பல கலைகளின் இருப்பிடமாக அமைந்திருந்தது. ஏன் வங்கிகளாகக் கூட அவை இயங்கின. கடன் கொடுக்கவும் வட்டி வாங்கவும் கூடச் செய்தன. மொத்தத்தில் அரச பரிபாலனமே கோயிலை மையமாகக் கொண்டு இயங்கியது எனலாம்.

இந்த உயர்ந்த கோயில்களை கட்டுவதற்கான அறிவும் அவர்களிடம் இருந்தது. இதன் அறிவுக் கருவூலம்’ சிற்பசாஸ்திரம்’ என அறியப்பட்டது. இத்தகைய கட்டிடங்களைக் கட்டி எழுப்ப வேண்டிய கணித அறிவும் அவர்களிடம் இருந்தது. கணிதத்தின் பகுதிகளான Geometry, Algebra, Square roots, Fraction  யாவற்றையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.

புகழ் பெற்ற இந்தியக் கணித மேதை ஆரியப்பட்டர் வானியல் நிபுணராகவும் இருந்தார். கிரகங்களின் வழியாக தோன்றும் நாளை வெகு துல்லியமாகக் கணித்துக் கூறினார். இவரது காலம் கி.பி. 476 ஆகும். இது கலிலியோவிற்கு முற்பட்ட காலம். ஆரியபட்டருக்கு பல காலங்களுக்கு முன்பே இந்தியக் கணிதத்தில் சைபர் - அது தான் பூச்சியம் வந்து விட்டது. இந்தச் சைபரைக் கணிதத்தில் புகுத்தியவர் இந்தியரே.

பொறியியல் துறையில் நாடு மிகவும் முன்னேறி இருந்தது. துருப்பிடிக்காத உலோகங்களின் சேர்க்கை அது தான் Steel கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே பாவனைக்கு வந்து விட்டிருந்தது. டெல்லிக்கு அருகாமையில் அமைந்துள்ள குதும்மினார் ( Qutub Minar )கோபுரத்துக்கு அருகாமையில் காணப்படும் உலோகத் தூண் கி.பி. 4ம் நூற்றாண்டுக் காலத்தயது. இன்றும் அது சிறிதும் துருப்பிடிக்காது  காணப்படுகிறது. இந்த உலோகத்தூண் இன்றும் விஞ்ஞானிகளை வியக்க வைக்கிறது.


சுஸ்ருத சமிஹித்த ( Susruta Samhita ) என்னும் நூல் ஆயுள் வேத வைத்திய முறைகளை மட்டும் குறிப்பிடவில்லை. பலவகையான சத்திர சிகிச்சை முறைகளும் இதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மருந்துகளின் தன்மை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. விஷங்களும் அவற்றின் குணங்களும் அவற்றைக் கையாளும் வழிமுறைகளும் அவற்றில் விளக்கப் பட்டுள்ளன. காது, தொண்டை, மூக்கு பற்றி விரிவாக ஆரய்வதுடன் பல வைத்தியங்களைப் பற்றிய தனித்தனியான பிரிவுகளும் இதில் உள்ளன.

பதஞ்சலியின் யோக சூத்திரம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது. இது மனித மனதைச் சரியாக வழிநடத்த வழிவகைகளைக் கூறுகிறது. முறையான சுவாசம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் ஊடாக  மனிதனை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பயிற்சி மூலம் நிரூபித்தார்கள். அதுவே இன்று உலகப் புகழ் பெற்ற யோகா அப்பியாசம்,( Yoga)  தியானம் ( Meditation)  ஆக விளங்குகிறது. இதன் அருமை பெருமைகளை மேலைத்தேயத்தவர்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

இத்தனை இருந்தும் பிற்பட்ட காலத்தில் நாம் ஏன் முன்னிலைக்கு வரவில்லை என்பது ஆராய வேண்டிய ஒன்றே. உடல் மெய்யானது என்னும் பொழுது தான் உடல் பற்றியும் அதனை மேன்மைப்படுத்துவது பற்றியும் ஆராய்ச்சிகள் எழும். இடைக்காலத்திலே இந்த உடல் பொய்யானது என்ற தத்துவம் பரவத்தொடங்கியது. இந்த உலகே மாயம் என்னும் பொழுது இந்த மாயையை விடுத்து அப்பால் தத்துவத்திலும் அதை ஆராய்வதிலும் எம்மவர் நேரத்தை வீணடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அறிவு என்பது பலவிஷயங்களில் பொதிந்துள்ள உண்மையைத் தேடுவதற்கான ஆய்வு. அந்த ஆய்வுகளின் முடிவே சமூக முன்னேற்றத்திற்கு உதவுவது. நாம் வாழும் உலகே மாயமானது; உடல் என்பது பொய்யானது என்ற எண்ணம் வரும் பொழுது நம்மால் பார்த்து உணர முடியாத ஒன்றில் மக்கள் மனதைச் செலுத்தியதால் அறிவு வளர்ச்சிக்குப் பதில் அறிவு எம்மை விட்டு நழுவி விட்டது. வாழாமல் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .............திகதி ஒலிபரப்பாகியது.)

புத்தகங்களின் அறிமுகம்


அன்புடையீர்,

காலம் தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய என்னுடய மூன்று நூல்கள் எதிர் வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின்  ஆலய பின் முற்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

திராவிடத் தமிழுக்கும் நாட்டியக் கலைக்கும் பண்பாட்டு விழுமியத்துக்கும் புதிய வெளிச்சத்தைத் தரும்  இவ் ஆய்வு நூல்களின் அறிமுக  நிகழ்வில் நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

நன்றி.

Wednesday, January 16, 2019

மனிதனும் எழுத்தும்

மனிதனானவன் மிருகநிலையில் இருந்து வேறுபடுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தது அவனது குரல்வளையில் மாற்றம் ஆகும். அம்மாற்றத்தால் அவனால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்பு கொண்டு பேசுவதாலேயே அவன் பல காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

மனித வளர்ச்சி பேசுவதுடன் நின்றுவிடாது தான் கண்டவற்றைக் கைகளைக் கொண்டு  வரைந்தான். அதை இன்றும் நாம் மலைக் குகைகளிலே காணக்கூடியதாக உள்ளது. கையின் உதவி கொண்டு வரையத் தொடங்கிய முயற்சியும் வளர்ச்சியும் மனிதனிடம் எழுத்துருவைத் தோற்றுவிக்க அடிப்படையாக அமைந்தது.

தனக்கு வேண்டியவற்றை நினைவிலே மட்டும் பதித்து வைத்திருந்தால் போதாது; அதனை எழுத்துருவிலும் பதிக்க வேண்டும் என்ற தேவையும் காலப் போக்கில் ஏற்பட்டது. களிமண்ணால் செய்த படிமங்களிலே அவை ஈரமாக இருக்கும் போதே குச்சிகளால் எழுதிக், காயவைத்து அல்லது சூளையில் சுட்டு அவற்றைப் பத்திரப்படுத்தும் பழக்கம் காலஓட்டத்தில் ஏற்பட்டது. இவற்றில் காலத்தால் அழிந்து போகாதவை சில இன்றும் தொல்பொருள் காட்சிச்சாலைகளிலே கப்பாற்றப்பட்டு வருகின்றது. இவை பல ஆராய்ச்சிகளுக்கும் உதவுவனவாகவும் உள்ளன.

இந்த எழுத்தின் உருவும் அவர்கள் எதில் அவற்றை எழுதி வைக்கிரார்கள் என்பதைப் பொறுத்து எழுத்தின் உருவும் வளைந்து கொடுக்கவேண்டி இருந்தது. நாகரிகம் வளர வளர யாவற்றையும் எழுத்துக் கணக்கில் வைக்க வேண்டும் என்ற அத்தியாவசியம் ஏற்பட்டது.

நாகரிக வளர்ச்சி ரொக்கட் வேகத்தில் வளரும் போது வியாபாரம் பெருகுகிறது. வியாபாரத்துக்கு முக்கியமாக வேண்டி இருப்பது கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு வழக்கு. கணக்கினைச் சரியாக வைக்க வேண்டுமானால் யாவற்றையும் வாய்மொழியால் வைத்திருக்க முடியுமா? அதனால் எங்கோ எழுதி வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அரசுகள் தோன்றி இராச்சிய பரிபாலனம் போன்ற பல விஷயங்களின் மேம்பாடும் எழுத்தறிவை மேலும் வளர்த்தது. இன்று போல் யாவரும் எழுதப்படிக்கத் தெரியவேண்டும் என்ற நிலை அன்று இருக்கவில்லை. படிப்பது என்பது சமுதாயத்தில் ஒருசிலராலேயே முடியுமான காரியமாக இருந்தது. இன்றுபோல என்ன Ballpoint பேனாவும் தாளும் இருந்த காலமா அது?

எமது முன்னோர்கள் குருத்துப் பனை ஓலையை நறுக்கி எடுத்து, அதற்கு மஞ்சள் பூசி, அதிலே எழுதினார்கள். அவற்றை நூல் கொண்டு கட்டி வைத்தனர். (ஓலைக்கு மஞ்சள் பூசுவது அவற்றைப் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காக) இதை ஏட்டுச் சுவடி என்பார்கள். இதில் எழுத்தாணி கொண்டு தான் எழுத முடியும். இந்த எழுத்தாணியைக் கொண்டு எழுதும் போது க், ட்,ச் போன்ற எழுத்துக்களுக்கு குத்துகள் போட முடியாது. இதற்குக் காரணம் நாம் குத்துகளைப் போடும் போது ஓலையினால் ஆன ஏட்டுச் சுவடியிலே துளை ஏற்பட்டு விடும். இதனால் ஓலையினாலான ஏட்டுச் சுவடியிலே குத்து, முறி எதுவும் காணப்படாது. தமிழ் தெரிந்த யாவரும் ஏட்டுச் சுவடிகளில் இருக்கும் தமிழை படித்து விடலாம் என்றும் சொல்ல முடியாது. குத்து, முறி எதுவும் இல்லாத இந்தத் தமிழ் எழுத்துக்களை வாசிப்பதற்கு ஒரு தனித் திறன் வேண்டும்.

உதாரணத்திற்கு முந்தநாள் என எழுத வேண்டுமானால் ’ந்’ இற்கு இருக்க வேண்டிய குத்து இராது. இதனால் வாசிப்பவர் அச் சொல் என்ன சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கிசைவாக இச் சொல்லை உச்சரித்துப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக நேரடியாக இதனை வாசிக்க நேரின் அது, ‘ முநதநாள’ என்றே இருக்கும்.

இவைகள் எல்லாம் வசன நடை கைவந்த பின்பான நிலை. இவ் வசன நடை பிற்பட்ட காலத்திலேயே வந்தது. அதற்கும் முன்னாலே எல்லாம் மனனம் பண்ணக்கூடிய செய்யுள், கவிதை உருவிலேயே எல்லாம் இருந்தது. இதைப் பாவிப்பவர்கள் பலரும் தமக்குத் தேவையானவற்றை மனனம் பண்ணி வைத்திருப்பர்.

எனது பாட்டியின் தந்தையார் ஓர் ஆயுள்வேத வைத்தியர். இவரிடம் இந்த ஓலைச் சுவடிகள் - வைத்தியத்திற்கு வேண்டியது - இருந்தது. தந்தையாருக்கு கண்ணிலே வெள்ளை பூத்து வந்தது. அதுதான் இந்த 40,45 வயதுகளில் நாம் வாசிப்பதற்குப் பாவிக்கும் கண்ணாடி போடும் காலகட்டம் அது. அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரி கண்ணாடி இருந்ததா? அல்லது அப்படி அந்தக் காலத்து கண்ணாடி கொண்டு இந்த ஏடுகளைத் தான் படித்துவிட முடியுமா?

பாவம், கிழவர் மகளின் உதவியை நாடினார். பாட்டியும் அவற்றை வாசித்து மனனம் பண்ணிக் கொண்டார். பிற்காலத்தில் பாட்டியிடம் பலர் வைத்திய உதவி பெற வருவதுண்டு. பாட்டி பாட்டாகவே மூலிகைகளின் பெயரைப் பாடி, குடிநீர் கடையில் வாங்க வேண்டிய பொருட்களைச் சொல்லி விடுவார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது பாட்டி மனனம் பண்ணி வைத்து பாடியதை. காரணம், ஓலைச்சுவடி பிரதியெடுப்பது என்பது பெரிய கஷ்டமான வேலை. இதனால் பலரும் அன்று மனனம் பண்ணவே கற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைத்த பாடல்களே இன்றும் எமது வழிபாட்டுக்குரிய தேவாரங்கள். பல நூற்றாண்டு காலமாக இதை வாய்வழியாகவே கேட்டு மனப்பாடம் பண்ணி வருகிறோம் அல்லவா? 63 நாயன்மார்களின் வாழ்க்கை கதையான பெரிய புராணத்தை ஏட்டில் இருந்து பெரிய புராணமாகப் நூலிலே பதிப்பித்தவர் ஈழத்து நல்லூரைச் சேர்ந்த ஆறுமுக நாவலரே!

இன்றெல்லாம் நாம் தமிழரின் நாகரிகச் சின்னம் எனப் பெருமை பேசும் கம்பராமாயணமும் திருக்குறளும்; சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு முதலியனவும் புலவர்கள் பண்டிதர்கள் என்போரிடம் இருந்த ஓலைச் சுவடிகளே. பிற்காலத்தில் பலரால் முயன்று சேர்க்கப்பட்டும்  பதிப்பித்தும் நூலுருப்பெற்றன.

தமிழ் தாத்தா எனப் போற்றப்படும் உ.வே. சாமிநாதைய்யர் நூல் நிலையம் ஒன்று அடையாறில் உண்டு. இதை ஒரு நாள் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இவர் சிலப்பதிகாரத்தை பதிப்பிப்பதற்காக கால்நடையாக தமிழ்நாடு முழுவதும் திரிந்து சேர்த்த ஓலச்சுவடிகளை நான் அங்கு கண்டேன். அவற்றை எல்லாம் அவர் ஒப்பு நோக்கி அவர் எடுத்த கையெழுத்துப் பிரதியும் அங்கு இருந்தது. கையெழுத்துப் பிரதி ஒரு பெரிய புத்தகத்தில் தொட்டு எழுதும் மை கொண்டு G nib ஆல் மணி மணியான எழுத்துருவில் அதனை அவர் பிரதி பண்ணி இருந்தார்.

இவ்வாறு ஒரு தனி மனிதனின் உழைப்பாலேயே இன்று எமக்கு சிலப்பதிகாரம் முதலான தமிழ் இலக்கியச் செல்வங்கள் கிடைத்துள்ளன. இதைப்பார்த்ததும் என்கண்ணில் நீர் மல்கியது.

தமிழ் இலக்கியத்தைப் படிப்பவன் எவனும் இந்த தெய்வத்திற்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டவனே.

( இக்கட்டுரை 13.4.2005 அன்று ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. )

மருந்துகளும் மாத்திரைகளும்


’விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு’ என்பது எமது முதுமொழி.

விருந்து எப்படியோ மருந்து என்பது இப்பொழுது மூன்று நாட்களுக்கு அல்ல. 365 நாட்களுக்குமே வேண்டி உள்ளது. இருதயநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்ற சில நோய்களுக்கு 365 நாட்களும் மருந்துகளை அருந்துவதால் தான் அந் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வாறாக நாளாந்தம் மருந்துகளைப் பருகா விட்டால் எப்பொழுதோ பரலோகம் போயிருப்போம்.

இது ஒரு கசப்பான உண்மைதானே?

அண்மையிலே வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது. செய்தி இது தான். வலிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கொடுக்கப்பட்ட vioxx என்னும் மருந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளை வரவழைக்கக் கூடிய பக்கவிளைவுகளைத் தருவதாக கண்டறியப்பட்டது. இதனால் இந்த மருந்து வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டிருக்கிறது. இந்த மருந்தை ஒழுங்காகப் பாவித்த நோயாளிகளிடம் இது திகிலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு வலிநிவாரணம் அளிக்கும் மருந்தே எனக்கு யமனாகி விட முடியுமா? மேற்கொண்டு மற்றய மருந்துகள் குறித்த நம்பகத் தன்மை என்ன அவைகளும் மேலதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தத் தக்கவை தானா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியாவில் நோய் நிவாரணமாகக் கொடுக்கும் மருந்துகளுக்குப் பொறுப்பானவர்கள் Australia's Therapeutic goods & Administration. பலவகையான நோய் தீர்க்கும் மருந்துகள் முதலிலே பரீட்சார்த்தமாக மிருகங்களுக்குக் கொடுத்து அதன் பின் பல ஆயிரம் மக்களில் பரிசோதித்த பின்பே சந்தப்படுத்தப் படுகிறது.

மருந்து கண்டுபிடித்த நாளில் இருந்து சுமார் 5 வருடத்தால் தான் இதை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்ற அத்தாட்சிப்பத்திரம் பெற்றுஅதன் பின் தான் அவை சந்தைக்கு வரவேண்டும் என்பது அரச விதி முறை.  இப்படி வரும் மருந்துகளில் பலவருடங்களுக்கு ஒருமுறை ஒன்றோ அல்லது இரண்டோ மருந்துகள் ஆபத்தானவை என நிறுத்தப்படலாம். அதனால் சகல மருந்துகளுமே ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறிவிட முடியாது.

அலோபதி வைத்தியம்; அது தான் சாதாரண பேச்சுவழக்கில் கூறுவதானால் Western Treatment க்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளால் பக்கவிளைவுகள் சிறிது ஏற்படத்தான் செய்யும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதற்காக நான் மருந்து சாப்பிடாமல் இருங்கோ எனச் சொல்ல வரவில்லை. இந்த மருந்துகள் தாம் எம்மை நோயில் இருந்து காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ வைப்பவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மருந்தியல் நிபுணர்கள் கூறுவதைக் கவனிப்போம். நாம் சாதாணமாகத் தலைவலிக்காகப் பாவிக்கும் Aspirin கூட பக்கவிளவற்றது எனக் கூறிவிட முடியாது. மருந்துகள் பாவிக்கும் ஒவ்வொரு நோயாளியும் தனக்குத் தானே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். தேவையற்றுச் சாதாரணமாக மாறக்கூடிய தலைவலி போன்றவற்றிற்கு மருந்தைத் தவிர்க்க முடியுமானால் தவிர்க்கவும். நீங்கள் முன்பு பாவிக்காத மருந்து மாத்திரைகளை முதல் முறையாகப் பாவிக்கத் தொடங்குபவராக இருந்தால் உங்களை நீங்களே சிறிது கவனித்துக் கொள்ள வேண்டும். வழமைக்கு மாறாக மிகக் களைப்பாகவோ அல்லது சமிபாட்டுச் சிக்கல் ஏற்பட்டாலோ அதைக் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். உங்களுக்கு மூச்சுத் திணறலோ அல்லது தோலில் மாறுதல்கள் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

வைத்தியரிடம் மருந்துச் சீட்டை வாங்கியதும் உடனே எழுந்து வெளியேறி விடாதீர்கள். அந்த மருந்தை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவ்வேளைகளில் சாப்பிட வேண்டும், இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியம் உண்டா போன்ற கேள்விகளை வைத்தியரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் உடல் நலத்திற்கு நீங்களே பொறுப்பாளி. உங்கள் வைத்தியர் இதற்குப் பதிலளிக்காது விட்டால் நீங்கள் தயக்கமில்லாமல் வேறு ஒரு வைத்தியரை அணுகுங்கள். - இவ்வாறு வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு மருந்துகளை விற்பனை செய்யும் Chemist இடம் நீங்கள் கேட்டால் அவர்கள் அழகாகவும் பொறுமையாகவும் இம்மருந்துகள் பற்றிய விபரங்களை உங்களுக்குப் புரிய வைப்பார்கள். மருந்தைப் பாவிப்பதற்கு முன் மருந்துடன் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரத்தை கருத்தூன்றிப் படித்த பின்பே மருந்துகளைப் பாவிக்கத் தொடங்க வேண்டும். மேலும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மருந்தைத் தயாரித்த Company யுடன் நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய அத்தனை விபரங்களும் பற்றுச் சீட்டிலோ அன்றேல் மருந்துப் பெட்டியுடனோ காணப்படும். அவர்கள் உங்கள் சந்தேகங்களை தீர்ப்பார்கள். அது அவர்களின் கடமையும் கூட.

  மருந்தைக் Chemist இடம் இருந்து வாங்கியதும் நீங்கள் கேட்ட மருந்தைத் தான் அவர்கள் தந்தார்களா என்பதையும் நீங்கள் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். உதாரணத்திற்கு சில மருந்துகள்  கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்பில் வருவதால் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. மருந்து தருபவர்களும் மனிதர்கள் தானே! Human error எங்கும் வர வாய்ப்புண்டு. நீங்கள் வேறு ஏதாவது மருந்து மாத்திரை பாவித்து வந்தால் நீங்கள் அதை உங்கள் Doctor இடமும் Chemist இடமும் கூற வேண்டும். சில மருந்துகள் ஒன்றுக்கொன்று முரணான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. எல்லாவற்றுக்கும் மேலாக காலாவதியான மருந்துகளைப் பாவிக்கவே கூடாது.

எம்மில் பலருக்கு மருந்து மாத்திரைகளை தேநீர், கோப்பி, பால், பழரசம், மற்றும் குளிர்பானங்களோடு பருகும் பழக்கம் உண்டு. இவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீர் ( Water ) ஒன்றுடன் மட்டும் தான் மாத்திரைகளைப் பருக வேண்டும். கோப்பியில் காணப்படும் Caffeine குடலைப் புண்படுத்தக் கூடும். பாலில் காணப்படும் calcium மருந்து உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுத்து விடும். தோடம்பழம் போன்ற பழரசங்களில் இருக்கும் புளிப்புத் தன்மை சில மருந்துகளுடன் சேரும் போது வயிற்றில் இரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். வேறு சில பழரசங்கள் மருந்தின் தன்மையைக் குறைத்து விடும். மதுரசம் போன்ற குடிவகைகளோவெனில் மருந்தின் தன்மையை முற்றாகக் கெடுத்துவிட வல்லவை.  அதனால் மருந்தை மிகக் கவனத்துடனேயே பாவிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் நொடிகள் அற்றவர்கள் நோய் வராமல் பார்த்துக் கொள்வதே உசிதம்.

(  Readers Digest , April, 2005 பத்திரிகையில் ' A Dose of Reality ' என்னும் கட்டுரையில் இருந்து மருந்து மாத்திரைகள் பற்றிய இதன் சாராம்சம் எடுக்கப்பட்டது. முடியுமானால் அன்றேல் மேலதிக விபரங்கள் தேவையானால் April 2005 'Readers Digest’ வாங்கிப் பார்க்கவும். )

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .......திகதி ஒலிபரப்பானது. )

Tuesday, January 15, 2019

பரதக்கலையின் வரலாற்று ஒளியில்.... தேவதாசிகளும்; கோயிலும்


இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த ஆடல் பற்றிப் பலரும் அறிய ஆர்வம் காட்டுவது இயற்கையே! இந்தப் பரத நாட்டியம் என நாம் கூறும் இந்த ஆடல்வகை மேடையை நோக்கி வருமுன் எமது கோயில் களிலே ஆடப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.

இவ்வாறாகக், கோயில்களிலே நடந்த சின்னமேளங்களை இரசித்த பெரியவர்கள் இதைக் கதை கதையாகக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கூறியது எல்லாம் நாதஸ்வரக் கச்சேரிகள் போல ஆடல்களும் கோயில்களிலே நடந்ததைத் தான். இதற்கு முற்பட்ட காலங்களிலே இந்த நடன மாதர்களான தேவதாசிகள் கோயில் கிரியைகளில் பங்கு கொண்டிருந்ததை யாரும் கண்டதில்லை.

எம்மில் பலர் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மைலாப்பூர் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் போய் தரிசித்துள்ளோம். இற்றைக்குச் சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு முன் இன்று போல சத்தடி மிகுந்த கார்களும் ஓட்டோக்களும் அன்று ஓடவில்லை. கோயிலின் கோபுரங்களே நகரத்தின் மையமாக வானளாவ நின்றிருந்தன. கோயில் மணியோசையே சுற்றுவாழ் மக்களின் கடிகாரமாக இருந்தது. கோயிலில் எழும் மங்கல வாத்தியங்களின் இசையே அவர்கள் அன்றாடம் அனுபவித்த இசை.

இந்த அமைதியான சூழலில், மாலைக்கதிரவன் ஓங்கி உயர்ந்திருக்கும் கோபுரத்தின் பின்னே மறைகிறான். அவன் மறைவதன் காரணமாக வானம் செம்மை படர்ந்து வண்ண வண்ண  ஜாலம் காட்டி நிற்கிறது. இந்த மங்கிய மாலைப்பொழுதில், நடன ஆசானுடன் மங்கல இசைக்கருவிகள் முழங்க, வாத்திய கோஷ்டிகள் புடை சூழ, தேவ நர்த்தகி வலதுகால் வைத்துக் கோயிலுக்குள் புகுகிறாள். கோயில் மணியோசை அவளை வரவேற்கிறது. காலிலே வெள்ளிச் சலங்கை கலீர் கலீரென ஆடலுக்கான தனிப்பட்ட பட்டாடை (இதுவே இன்றய பரத நாட்டிய உடையின் முன்னோடி) மற்றும் ஆபரணங்கள் அணிந்தவளாக ஆண்டவன் சன்னிதானத்தில் ஒருமுகப்பட்ட பக்தியோடு தனது கலையை அர்ப்பனமாக்க தன் பாதங்களைச் சமனாக வைத்து தயாராக நிற்கிறாள் நர்த்தகி.

ஆலய அர்ச்சகர்களும் மங்கல ஆராத்தியை அவள் கையில் கொடுப்பர். கோயில் மணிகள், சங்கு, திருச்சின்னம், சூரிய சந்திர மண்டல வாத்தியங்கள், சுத்த மத்தளம், பஞ்சமுக வாத்தியங்கள் அனைத்தும் ஒன்றாகப் பேரொலி எழுப்ப, நர்த்தகி சுவாமிக்கு ஆராத்தி எடுப்பாள்.

பின்னர், நர்த்தகி நடுவில் நிற்க, அவளது வலது புறத்தில் சிறிது தூரத்தில் நடன ஆசான் நின்றிருப்பார். அவளின் இரு புறத்திலும் மிருதங்கம், முகவீணை, வேணு முதலான இசைக்கருவிகளை இசைப்போர் நிற்க; சுருதி போடுபவர், தாளம் தட்டுபவர் அருகிலே நிற்க, அடுத்த நாட்டிய அர்ப்பணத்திற்குத்  தயாராக நிற்பாள் நர்த்தகி.

இவ்வாறு,  நர்த்தகி புஷ்பங்களைக் கையில் ஏந்துவதற்குத் தயாரான தல புஷ்பபுடம் எனப்படும் நாட்டிய நிலையில்  நிற்க, அர்ச்சகர் மலர்கள், துளசி, முதலியவற்றை அவள் கையில் இடுவார். இசைக்கருவிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அர்ச்சகர் மந்திர ஒலி எழுப்ப, நர்த்தகி மலர் அஞ்சலியை நாட்டியம் மூலமாக சுவாமிக்கு அர்ப்பணம் செய்வாள்.

பின்னர் மிருதங்கத்துக்கு வணக்கம் செலுத்துவாள். மிருதங்கம் முதலிலே மிக மென்மையான ஒலியினை எழுப்பி, ஒத்திசை வாத்தியங்கள் முழங்க, நர்த்தகி அதற்கேற்ற சொற்கட்டுகளுடன் குறித்த தேவதைகளின் தோத்திரம் இசைக்க அதற்கேற்ப நிருத்தியம் செய்து, தீர்மானத்துடன் தன் நடனத்தை ஆண்டவனுக்கு அர்ப்பனிப்பாள். பிறகு தீபாராதனையுடன் நிருத்திய ஆராதனை நிறைவு பெறும்.

விழாக்காலங்களிலே கோயிலை வலம் வந்து திக்குபாலகர்களை வணங்கும் முறை ‘நவசாந்தி’ அல்லது, ‘ பலிஹரணநிருத்தியம்’ எனப்படும். எட்டு திக்கு பாலகர்களுக்கும் எட்டுவகையான பண்களில் எட்டு வகையான அபூர்வ தாளங்களுடன் நர்த்தகியால் நிருத்தியம் செய்யப்படும். கொடிக்கம்பத்துக்கு அருகில் இந்திரனைக் குறித்து நிருத்தியம் செய்வதற்கு முன்பாக விநாயகருக்கும், குமரக் கடவுளுக்கும்  பூசைகள் செய்யப்படும். மந்தாரை, பாரிஜாதம், வில்வம், அறுகம்புல் முதலான அந்தந்த இறைவனுக்குப் பிரியமான மலர்களால் புஷ்பாஞ்சலி சமர்ப்பணம் இங்கு நட்டியாஞ்சலியாக நடைபெறும்.

இந்திரனுக்கும் விருப்பமான நாட்டியம்’லலிதம்’. தேவகாந்தாரி அல்லது நாதநாமகிரியை விருப்பமான இராகம் ஆகும். இங்கு நர்த்தகி சமதாளத்தில் நிருத்தம் செய்ய வேண்டும். தென்கிழக்கு மூலை அக்கினி பகவானுக்குரியது. இவனுக்குக் கலிங்க நிருத்தியமும் லலித இராகத்தில் வீர விக்கிரம தாளத்திலும் ஆட வேண்டும். இங்கு நர்த்தகி சப்தம், வர்ணம், சுலோகம், பதங்கள், ஜாவளி என ஆடுவாள்.

இன்று நாம் கோயில்களிலே ஒலிக்கும் தேவகானமான நாதஸ்வரத்தின் நாதத்திலே லயித்து அந்த உனர்விலே இறையை உணர்கிறோம்.

‘ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ’

எனத் திருநாவுக்கரசர் எமை எல்லாம் இசையாலே இறைவனைக் காண வைத்தார். இறையை உணர இசை அன்று பக்தர்களை வழிநடத்தியது. இந்த இசைக்கு உருவம் கொடுத்தது தான் அன்றய தேவ நர்த்தகிகள் கோயில்களிலே ஆடிய ஆடல்.

பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கு இந்துக் கோயில்கள் யாவற்றிலும் அனுஷ்டிக்கப்பட்டன. அதன் காட்சிச் சித்திரங்களே நாம் இன்று கோயில்களில் காணும் நாட்டிய நங்கையரின் நடன நிலைகள். அன்றய சிற்பிகள் இந்த நடனங்களை எல்லாம் கல்லிலே வடிவமைத்து எமக்கு அழியாப் பொக்கிஷமாகத் தந்துள்ளார்கள். இவை எல்லாம் அன்றய கோயில்களிலே நாட்டியம் எத்தகைய உன்னத இடத்தைப் பெற்றிருந்தது என்பதைக் காட்டுகின்றது.

இதுவே இன்று நாம் காணும் பரதநாட்டியத்தின் காட்சிப் பின்னணியாகும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ர நிகழ்ச்சியில் ..... அன்று ஒலிபரப்பப் பட்டது. )

தியாகம்


தியாகம் - ஆமாம், இவ்வார்த்தையைக் கேட்டதும் எம் மனக் கண்ணிலே தெரிபவர்கள் தமது சொகுசான வாழ்வை தியாகம் செய்ததால் உலகத்தவரால் போற்றப்படும் சமூக சேவையாளர்கள்.

தியாகம் என்ற மாபெரும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்து வாழ்ந்து காட்டியவர்கள் பலர். யேசுநாதரின் தியாகம் போற்றுதலுக்குரியது. மனிதனாகப்பிறந்து மனித வாழ்வை அவர் மேம்படுத்தினார்.அன்னை திரேசா வாழ்வையே இன்னலுறும் மக்களுக்காக அர்ப்பனித்தார். மகாத்மா எனப் போற்றப்படும் காந்தி வாழ்வு பூராவும் ஏழை இந்தியனுக்காக உழைத்தவர்.

இதை ஏன் செய்தார்கள்? மக்களின் இன்னலை ; கஸ்டத்தை அவஸ்தையை உணர்ந்து, அதற்கு நிவாரணம் தேட அவர்கள் உள்ளம் துடித்தது. மற்றவர்களின் கண்கள் காணாததை அவர்கள் கண்டுவிடவில்லை. நாளாந்தம் பலர் காணும் ஏழைகளையும் அவர்களின் துன்பத்தையும் தான் இவர்களும் கண்டார்கள். ஆனால் அவற்றைக் காணும் மற்றவர்களுக்கு இல்லாத துடிப்பும் பற்றும் பரிவும் பாசமும் அவர்களிடம் பெருகி ஓடியது. அதற்காக அவர்கள் தம் சுகங்களை இழக்கத் தயாரானார்கள். இதைத் தான் தியாகம் என்பது.

தியாகம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் எதையோ துறப்பது அல்லது விட்டுவிடுவது என்பதாகும். ஆமாம், இத்தகைய தியாகிகள் தமது வாழ்வின் சுகங்களைப் பிறர் பொருட்டுத் துறந்தவர்கள். எனது ; என்னுடயது என்ற பற்றை விட்டு விட்டவர்கள்.

ஆனால் இவற்றை எல்லாம் சாதாரண மனிதன் செய்துவிட முடியுமா? இல்லைத்தான். ஆனால், ’அத்தனையும் எனக்காக’ என்ற வாழ்வு நின்மதியைத் தந்துவிடுமா? சந்தேகம் தான். பேராசையின் நிமித்தம் பணத்தைச் சேர்ப்பவன் நின்மதியை அடைகிறானா? பணத்தைத் தேடி அலைவதால் ஏற்படும் இரத்த அழுத்தம், உடல் நோய், மனநோய், தீராக்க்கவலை என எத்தனை எத்தனை....

அதனால் தான் உழைப்பின் ஒரு பகுதியைத் தான தர்மங்களில் செலவு செய்ய உலகம் வலியுறுத்துகிறது. திருப்பி வட்டியாக நீ செய்யும் தர்மம் உன்னைத் தேடி வராது. இதற்கு வட்டியாகக் கிடைப்பது மனநின்மதி, அமைதி, திருப்தி போன்ற விலைமதிக்கவியலாத செல்வங்களே! எந்தவித பதிலுபகாரத்தையோ நன்றியையோ கைமாற்றையோ எதிர்பாராது செய்யப்படும் காரியமே மனநின்மதியைத் தரவல்லது. மன நிறைவுடன் கொடுப்பதே தர்மம். இந்த மன அமைதியை ஏற்படுத்தவே மதங்கள் ‘தர்மம் செய்’ எனப் போதிக்கிறது.

ஜைன மதம் குடும்பத்தாருக்கு நான்கு வகையான தர்மங்களைப் போதிக்கிறது. ஆகார தானம்; பசித்தவனுக்கு ஆகாரம் - உணவு அளிப்பது, அபய தானம் - வாழ்விடம் அளிப்பது, ஒளஷ்டத தானம் - நோய்தீர்க்கும் மருந்தும் மருத்துவ சேவைகளும் வழங்குவது, ஞான தானம் - அறிவைத் தானமாக வழங்குவது. என்பவையே அவையாகும்.

இங்கு குறிப்பிட்ட இந்த நான்கு தானங்களும் இன்று எமது சமூகம் வேண்டி நிற்கிறது. ஆமாம், போரினால் பாதிக்கப்பட்ட எமது சமுதாயம் அத்தனையையும் வேண்டி நிற்கிறது. அதை மனதார அளிக்க வேண்டியது எமது கடமையும் தர்மமுமாகும். எமக்குத் தந்தது பத்தாது என எண்ணி மேலும் ஆசையால் ஆண்டவனை வேண்டி, அவனைப் பிரீதி செய்யாமல் மேலை நாடுகளில் சொகுசு வாழ்வு வாழும் நாம் எமது சமூகத்தில் ஏற்பட்ட அவலத்தில்; மக்களின் துன்பத்தைத் துடைக்க, தமது கண்ணை அவர்கள் பால் திருப்புவதே இன்று நாம் செய்யவேண்டிய தர்மம்.

எமது அற்ப சுகங்கள் சிலவற்றை நாம் தியாகம் செய்தாலே அங்கு பலர் நின்மதியாக வாழலாம். வளர வேண்டிய வயதிலே போஷாக்கு அற்றுத் தவிக்கும் குழந்தைகளைப் பாருங்கள்! குண்டுவீச்சில் கால்களை இழந்தவரைச் சற்றே சிந்தியுங்கள்! அனாதையாகிவிட்ட குழந்தைகளை ஒரு கணமேனும் நினைத்துப் பாருங்கள்! வாழ்வதற்குக் குடிசைதன்னும் அற்று கூடாரத்தில் வாழ்பவர்கள் எத்தனை பேர்? நாம் எமது சுகத்தில் சிலதையேனும் தியாகம் செய்தால் நிச்சயம் அவர்களின் குடும்பம் கொடிய மாரிக்கு ஒதுங்க குறைந்த பட்சம் ஒரு கூரையாவது கிடைக்கும். பட்ட கஷ்டங்கள், காயங்கள், ஊனங்கள், நித்திய வேதனை ... இவைகளுக்கு ஒரு சிறு மாற்றாவது கிடைக்கும். இவை எல்லாம் எமக்குத் தெரியாததா என்ன?

எமது பிள்ளைகள் இன்று விளையாட்டுப் பொருட்களை வாங்கி எறிந்து விடுகிறார்கள். அந்தப் பணத்தைத் தன்னும் நாம் சிறிது சிந்தித்து ஊருக்கு அனுப்பினால் நாதியற்ற குழந்தை ஒன்று நாளை தனது சொந்தக் காலில் நிற்க உதவியவர்கள் ஆவோமல்லவா? தியாகம் என்பது உயர்ந்த ஒன்றைப் பெறுவதற்காக தன்னையே இழப்பது என்கிறார் ஒரு தத்துவ ஞானி. இயற்கையை உற்று நோக்கினால் அங்கும் நாம் அவற்றைக் காணலாம் என மேலும் அவர் கூறுகிறார்.

இறைவனைத் தேடித் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்குக் காசியிலே அர்ச்சகர் உணர்த்துவது எமக்கு அதிகமாகப் பிடித்த ஒரு உணவை நாம் இறைவனுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அதாவது எமது காசியாத்திரையின் பின் உயிர் உள்ள வரை நாம் அதை உண்ண மாட்டோம் என்ற சங்கபம் அது. இது எதற்காக? ஏன் நாம் எம் ஆசையில் ஒன்றையேனும் தியாகம் செய்யவேண்டும் ? அப்பொழுது தான் காசியாத்திரையின் புண்ணியம் எம்மை வந்தடையுமாம். நீ எல்லாவற்றையும் உனக்காகவே கொள்ளாமல் தியாகமும் செய் என்பதையே இந்தச் செய்கை உணர்த்தி நிற்கிறது. இதைப் போன்ற செய்கையை; இந்துக்கள் காசியிலே செய்வது போன்று பெளத்தர்கள் புத்தகாயாவில் மேற்கொள்ளுகிறார்கள்.

இவ்வாறு தியாகம் செய்யாமல் நாம் அதிகப்படியாக உண்போமானால் இயற்கையே எமக்கு எமது தவறை உனர்த்தி விடும். வேறு என்ன! அதிகப்படியாக நாவுக்கடிமையாகி உண்பவருக்கு நிச்சயமாக உடல் நலம் பாதிக்கப்படும். சக்கரை வியாதி,- இனிப்பு ஆகாரத்தை அதிகப்படியாக உண்ண முடியாது போகும். இரத்த அழுத்தம் வரும். அது உப்பே இல்லாமல் சாப்பிட வலியுறுத்தும். மேலும் இதியாதி இத்தியாதி.... அதிக உணவை உண்பவருக்கு மட்டுமல்ல, அதிக பணத்தைத் தேட வேண்டும் என்ற அவாவும் நோய்க்கே கால்கோளாகும்.

பெளத்த சங்கக் கோட்பாட்டின் படி வீட்டிலே பிறந்த முதல் ஆண்மகவை சங்கத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிறது. அன்றய காலகட்டத்தில் பெளத்த சங்கம் அறியாமையில் உழன்ற மக்களுக்கு அறிவை வழங்கி சேவை செய்த இயக்கம். மக்களின் கண்களைத் திறக்க; அவர்கள் வாழ்வை மலர வைக்க; உங்கள் மகனைத் தியாகம் செய்யுங்கள் என்பதையே பெளத்த சங்கம் அன்று வேண்டி நின்றது.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ உண்மைத் தியாகம் என்பது தன்னை இழப்பது என்றார்.அது நான் செய்தது என்ற மமதை அற்றது என்றார். அது தன் நலம் அற்றது; இவ்வாறு செய்வதால் நாம் அன்பின் உருவாக முடியும் என்கிறார். அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர் அவர். மேலும், அவர் உலகில் உள்ள அத்தனையும் ஆண்டவனதே! என்ற எண்ணம் வரும் போது அதைக் கொடுப்பது என்பது எங்கே? அது தானே ஆண்டவன் யாவருக்கும் அளித்தது! அப்படி இருக்க, அதை எப்படி நான் கொடுத்ததாகக் கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்புகிறார். இது ஞானியருக்கே வரத்தக்க அதி உயர் சிந்தனையா?

அண்மையில் ஒரு கதை வாசித்தேன். ஒரு ஆதிவாசி அல்லது காட்டுமனிதன் அவன். ஒரு நாள் அவன் மனித நாகரிக நகரத்துக்குள் புகுந்து விடுகிறான். அங்கு ஓடும் பஸ் கார் போன்றவற்றைப் பார்த்து ஏதோ தனக்குப் பழக்கப்படாத பெரிய மிருகங்கள் போலும் என அவற்றை அவன் எண்னணுகிறான். பசிவர கண்ணில் பட்ட மரத்தில் இருந்து கொய்யாப்பழத்தை கொய்து உண்டான். சிறிது அப்பாலே போய், நல்ல மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு,  அதையும் பிடுங்கி உண்டு பசியாறுகிறான். தூக்கம் கண்களைச் சுழற்ற அந்த மாமரத்தடியிலேயே தூங்கியும் விட்டான். அவனை யாரோ அதட்டி எழுப்புகிறார்கள்.

அது தான் நம் நாகரிக உலகத்தின் பொலிஸ்காரர். அவனை இழுத்து ஜீப்பில் போட்டுக்கொண்டு போகிறார்கள். அவனுக்கும் அந்த பெரிய மிருகத்தில் பறப்பதைப் போன்ற ஒரு உல்லாச உணர்வு! பொலிஸ்நிலயம் போய் சேர்ந்ததும் அவனைக் கூண்டில் அடைக்கிறார்கள். அவனோ ஏனெனெப் புரியாது முளிக்கிறான். மறுநாள் நீதினம்றம் அழைத்துச் செல்லப்படுகிறான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அத்து மீறி பிறருக்கு உரிமையான நிலத்தில் பிரவேசித்தது முதல் குற்றம். அங்குள்ள அவர்களுக்குச் சொந்தமான கனி மரத்தில் பழங்களைப் பறித்து உண்டது இரண்டாவது குற்றம். பிறருக்குச் சொந்தமான நிலத்தில் அவர்களின் அனுமதி இல்லாமல் படுத்துறங்கியது மூன்றாவது குற்றம். என அதில் கூறப்படுகிறது.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை. நான் கனிகளைப் பறித்துச் சாப்பிட்டது பசிக்குத் தானே! அது தப்பா என யோசிக்கிறான். மேலும் அவன், அத்துமீறி நுழைந்ததா? அப்படி என்றால் என்ன? என அவன் நீதியரசரை வினவுகிறான். அதற்கு நீதி அரசரோ அங்கு அவர்களின் நிலம் என்பதைக் குறிக்க எல்லைக்கு வேலி உண்டு. அது அவர்களின் நிலம். அதை மீறி நீ அவர்களின் நிலத்துக்குள் புகுந்தது மட்டுமன்றி, அங்கேயே தூங்கவும் செய்திருக்கிறாய், அது குற்றம் என்கிறார். அவனுக்கு எதுவுமே புரியவில்லை. எனினும் அவனுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

ஆமாம் அவனை நாம் நாகரிகம் அற்ற மனிதன் எனக் கூறுகிறோம். ஆனால் உலகில் உள்ள யாவையும் யாவருக்கும் சொந்தமான இயற்கை அளித்த செல்வம் என்பது தெரியாத கொடியவர்கள் அல்லவா நாம்? சமூகமும் உலகமும் நாகரிகம் என்ற பெயரிலே வாழும் வாழ்வைச் சித்தரிக்கும் கதை அது!

இந்த ‘நாகரிக’ சமூகத்தில் தான் தனது; தனக்கு; என்னுடயது எனற சிந்தனைகள்  உள்ளன. அதன் பின், ’அதைக் கொடு’ என அறம் வேறு பேசுகிறோம். தியாகம், அறம் என்பதெல்லாம் பின் தோன்றிய கருத்துருவாக்கங்களே. இருந்த போதும் ‘அறம் செய்ய விரும்பு’ என்றால் கொடுத்து விடுகிறானா மனிதன்? ஒளவை சொல்லி எத்தனை காலமாயிற்று! ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி! அத்தனையும் சொத்துரிமை கொண்டாடும் சமூகத்தின் வெறும் இலக்கியமாகவன்றோ போயிற்று!

கார்ல்மார்க்ஸும் ஏங்கலிஸ் உம் தோன்றி பலகாலம் ஆராய்ந்து தனியுடமையே சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம் எனக்கண்டறிந்து எடுத்து விளக்கினார்கள். அதை உலகம் கேட்டதா? அவர்கள் தத்துவங்களும் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன.

யாவருக்கும் பொதுவான செல்வம் போதியளவு உலகில் உண்டு. ஒவ்வொருவரும் செல்வந்தராக முயலும் போது மற்றவருக்கு தேவைப்படுகிற ஒன்று பறிக்கப்படுகிறது. இதை உணர பெரிய பெரிய தத்துவங்களோ தத்துவ ஞானிகளோ தேவை இல்லை.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் .... அன்று ஒலிபரப்பானது. )

Monday, January 14, 2019

பறை - நம் பாரம்பரியத்தில் அதற்கு நாம் கொடுத்த இடம்


இந்தப்பாடல் கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெறுகிறது.

நந்தனன் ஒரு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவன் என்ற சமூகத்தில் இருந்து வந்தவன். இவனுக்கோ சிதம்பரம் போக வேண்டும்; தில்லை, சிதம்பர நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. தாழ்த்தப்பட்டவர்கள் சிதம்பரம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத கால கட்டம் அது.

பேயாண்டி, மாயாண்டி, சின்னக்கறுப்பன் போன்ற காவல் தெய்வங்களையே தாழ்த்தப்பட்டவர்கலள் வணங்கிய காலம். இவன் வேலை செய்த பண்ணையாரோ ‘சிதம்பரமோ உனக்குச் சிதம்பரம்?’ எனத் திட்டுவார். தாழ்த்தப்பட்டவர்களின் எளிமையான ஆசைகளின் வெளிப்பாடாக இந்த நந்தனார் கதை கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது.

புலவர்களும் கவிஞர்களும் அக்காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த அரசனையோ அல்லது அதற்கு நிகராக வாழ்ந்த பெருங்குடியினரையோ பாடிப் பரிசில்களைப் பெறுவது வழக்கம். அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்களை; அவர்களது உனர்வுகளை தன்னையே அவனாகப் பாவித்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கோபால கிருஷ்ண பாரதி.

அழகாகவும் அதே நேரம் ஆழமாகவும் ஓர் அறிஞர் இந்தச் சமூகக் கட்டமைப்பை கீழ்வருமாறு விளக்குகிறார். ‘ இந்தச் சமூகத்தை ஓங்கி நிற்கும் கோயிலுக்கு ஒப்பிடலாம். கோயில் கோபுரத்தின் உச்சியிலே மினுங்கும் வெங்கலக் கலசமாக இருப்பவன் அரசன். அதை அடுத்து கோபுரம் போல் பார்ப்பதற்கு உயர்ந்திருப்பவர் வைசியர் என்ற வணிக குளாத்தினர். அதாவது வியாபாரிகள். வேளாளர் என்ற நிலத்தை வைத்திருப்பவர்கள் இந்தக் கோபுரத்தைத் தாங்கும் கட்டிடமாக இருப்பவர்கள், கட்டிடக் கலைஞர், நெசவாளர், கைவினைஞர்களான தங்கம், பொன், பித்தளை வேலை செய்யும் தொழில்நுட்பவியலாளர்கள்; மரவேலையாளர்கள் இப்படியே சொல்லலாம். 

ஆனால் அத்திவாரமாக யாரைச் சொல்லலாம்? சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் அவர்கள்! பழுவைத் தாங்கி கண்ணுக்குத் தெரியாமல் ஒதுங்கி வாழும் தீண்டத்தகாதவர்கள்.

சாதிப்பாகுபாடு என்பது ஒரு பொருளாதார அடக்கு முறை. தனது நிலபுலன்களில் வேலையாட்களாக இருப்பவனை உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அளவும் ஊதியம் கொடுத்து வேலை வாங்குவது அதன் இயல்பு. உயர் மட்டத்தில் இருப்பவன் சொகுசாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அடக்கு முறை. 

இதற்காகவே மறுபிறவித் தத்துவம் ஏற்படுத்தப்பட்டது. முற்பிறப்பில் நீ செய்த பாவத்திற்காக இப்பிறவியில் கஷ்டப்படுகிறாய். நீ நல்லவனாக இருந்தால் மறு பிறவியில் நல்லபடியாக வாழ்வாய் என்ற தத்துவத்தின் வாயிலாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்தச் சமூகம். இல்லாத ஒன்றை ஒரு காலமும் விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத ஒன்றை கற்பனை பண்ணி அந்த எண்ணத்தை சமுதாயத்தில் பரப்பி இன்றும் வாழ்பவர்கள் பலர்.

நான் சிறுமியாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலும் சாதிப் போராட்டங்கள் நடைபெற்றன. கோயில்களிலே தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர் அனுமதிக்கப்படாத காலம் அது! இவர்கள் கோயில்களில் காலடி எடுத்து வைத்தால் அவர்களைத் தடுத்துத் தாக்க உயர் சாதிக்காரர் சைக்கிள் செயின், திருக்கை வால் முதலியவற்றுடன் ஒழிந்து நிற்பார்களாம்.

இவ்வாறு, நாமும் வரலாறு படைத்த சமூகம் தான்.

அன்றய மரணச்சடங்குகளிலே வாசிக்கப்படும் வாத்தியத்தின் பெயர் பறை. இந்த வாத்தியம் எழுப்பும் நாதத்துடன் மன்னர்கள் போருக்குப் போனார்கள் எனக் கலிங்கத்துப் பரணி கூறும். சங்கப் பாடல்களில் இந்த வாத்தியம் எமது சமூகத்திற்கு வீராவேசம் ஊட்டியதாகக் கூறும்.

சாதி சண்டைகளில் ஏற்பட்ட முரண்பாட்டில் பறை என்ற வாத்தியத்தை வாசித்த கலைஞர்கள் இனிமேல் இந்த வாத்தியத்தை வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து சுடலையிலே இந்த வாத்தியங்களைப் போட்டு எரித்து விட்டார்கள்.

இந்த வாத்தியம் எழுப்பும் ஒலியால் மரணம் நிகழ்ந்து விட்டதை ஊரார் அறிவர். மேலும் மரணச் சடங்கில் நடக்கும் வெவ்வேறு கிரியைகளுக்கேற்ப வாசிக்கும் விதங்களும் மாறுபடும். மரணம் அடைந்தவருக்கு இரத்த உறவாக உள்ளவர் வரும் போது கூட வாசிப்பின் தொனி மாறு படும்.

இவ்வாறு தமது வாசிப்பில் வல்லவராக இருந்தவர்கள் இந்தக் கலைஞர்கள்.கோயில் கிரியைகளிலே நாதஸ்வர, தவில் வாத்தியகாரர் கிரியைகளுக்கேற்ப வாசிப்பது போல இங்கும் மரணச் சடங்குகளில் இந்த வாசிப்பின் வகைகள் மாறுபடும். இவை யாவற்றையும் பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

பின்னர் நான் கொழும்பில் வாழ்ந்த போது இதே பறை வாத்தியம் தான் சிங்களவரின் நாட்டிய வாத்தியமாக இருந்ததைக் கண்டு இத்தனை அருமையான வாத்தியமா என நான் வியந்ததுண்டு. கீழ் மாகாண அதாவது சப்பிரகமுவா நாட்டிய நாடக வகையிலே இந்த வாத்தியத்தை வைத்துக் கொண்டு அதனை ஒரு உரையாடலைப் போல வாசிப்பார்கள். அந்த வாசிப்பு மூலம் நடிகர் உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாடுவது போல நடிப்பார். அப்பொழுது இந்தப் பறையின் மகத்துவத்தை நான் உணர்ந்ததுண்டு.

நாம் எமது பறை வாசிக்கும் கலைஞர்களைச் சாதி என்ற பெயரால் அவமதித்ததால் இதனை நாம் இழந்து விட்டோம். சங்க காலம் தொட்டு தமிழனின் தனிப்பெரும் வாத்தியமாக வளர்ந்து வந்த இந்த இசைக்கருவியை சாதிப் போராட்டத்திற்கு பலி கொடுத்து விட்ட தமிழர்கள் நாம்.

அது மட்டுமா, நான் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் நாட்டின் தெருக்கூத்து - இப்படி நான் கூறியதும் ஏதோ தெருவில் நடக்கும் வேடிக்கைக் கூத்து என எண்ணி விடாதீர்கள். இதன் பெயர் தான் தெருக்கூத்து. இதுவே தமிழனின் பாரம்பரியக் கதை கூறும் ஆடல் வகை. கதகளி போன்று முகத்திற்கு வண்ணம் பூசி ஆடம்பரமான உடை அலங்காரத்துடன் கோயில் முற்றங்களிலே இந்தத் தெருக்கூத்துக்கள் நடைபெறும்.

இந்தக் கலைஞர்களின் வரவை முன் கூட்டியே அறிவிப்பதற்காக கோயிலிலே கூத்திற்கு முதல் நாள் மாலை ஒரு கலைஞர் கோயிலைச் சுற்றி ஆடுவார். அப்பொழுது அவருக்கு பக்க இசை வழங்கும் வாத்தியமாக அமைவது இந்தப் பறையே. நட்டியகாரர் வெவ்வேறு தாள வேறுபாட்டை கூற, பறை வாசிக்கும் கலைஞன் அதனை அழகாக வாசிப்பார்.

காஞ்சிபுரத்திலே நாட்டுப்புறக் கலைக்கான விழா ஒன்று நடைபெற்றது. இலங்கையின் கூத்தைப் பற்றிப் பேசி விளக்குமாறு என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். பகல் பூராகவும் பல தேர்ந்த அறிஞர்களின் உரைகளும் கலந்துரையாடல்களும்; மாலையிலே கிராமியக் கலையாடல்கள். இவ்வாறு மூன்று நாள் அந்த விழா நடைபெற்றது. விழாவின் இறுதி நாள் இந்தப் பறையை வாசிக்கும் கலைஞர்கள் வெவ்வேறு வகையான பறையை வைத்துக் கொண்டு ஒரு தாள வாத்திய நிகழ்ச்சியை நடாத்தினார்கள். தமிழனின் பெருமைக்குரிய வாத்தியத்தின் பெருமையையும் மேன்மையையும் அன்று நான் கண்டேன்.எதையோ இழந்து விட்ட உணர்வில் என் மனம் கனத்தது.

இன்று 14.1.19 தைப்பொங்கல் திருநாள்; இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருநாள். இந் நாளில் நன்றி கூறிப் பேண மறந்து, சிதைத்து விட்ட இந்த பண்பாட்டுப் பொக்கிஷத்தையும்  நாம் நினைவு கூர்வோம். 

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 21.3.2006 அன்று ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

Saturday, January 12, 2019

மனத் தடை; பெண் விடுதலை குறித்து....


ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த விருந்தொன்றில் இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த இருவரின் உரையாடல் கேட்பதற்கு மிகவும் சுவாரிசமாக இருந்தது. அதனால் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணின் வயது 21. ஒரு காரியாலயத்தில் வேலை பார்க்கிறாள். இவளைக் கமலா என அழைப்போம். மற்றவளைச் சங்கரி என வைத்துக் கொள்வோம். சங்கரிக்கு வயது 24. இவள் ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியை.

பேச்சுவாக்கில் கமலா தான் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பையனையே மணந்து கொள்வேன்; காதல் எதுவும் பண்ண மாட்டேன்; காதலிப்பது என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறான செயல் என்றாள். 24 வயது சங்கரியோ ‘ அப்போ உனக்கு ஆணின்மேல் பெண்ணுக்கு இயற்கையாகத் தோன்றும் கவர்ச்சி அது தான் Attraction வருவது இல்லையா என திகைப்புடன்  வினவினாள். Attraction வருவதால் மட்டும் திருமணம் புரிந்து விட முடியுமா? திருமணத்துக்கு வேறு சில விஷயங்களும் உண்டே! அவன் நம் கலாசாரத்துக்கு ஒத்து வருபவனாகவும் இருக்க வேண்டுமில்லையா? என்ற கேள்வியைக் கேட்க, சங்கரி, முதலிலே Attraction இருக்க வேண்டும். இந்த Attraction இல்லா விட்டால் திருமணம் செய்து கொள்வது தப்பு; அத்தோடு இருவரும் பழகி ஒத்து வருமா என்பதையும் முடிவு செய்ததன் பின்பு தான் திருமணம் செய்யலாம் என்றாள்.

கமலா, அது எல்லாம் சரி அல்ல. எனது அம்மா முடிவு செய்வதே எனக்குச் சரியாக இருக்கும் என்றாள். அதற்கு சங்கரி, அப்போ உனது அம்மாவுக்குப் பிடித்தவர் தான் உனக்குப் பிடித்தமானவராக இருக்கும் என்கிறாய் எனக் கூற, கமலா மேலும் ஒரு தனது வாழ்க்கைத் திட்டத்தைக் கூறினாள். தான் திருமணம் ஆன பின் வேலைக்கு; அதுதான் தொழில் பார்க்கப் போவதில்லை என்றாள். மனைவியானவள் வேலை பார்த்தால் அவளால் குடும்பத்தைச் சீராக நடத்த முடியாது என்று சொல்ல, சங்கரி திகைத்துப் போய், உனக்கு Financial Independence வேண்டாமா எனக் கேட்டாள். அதற்குக் கமலா, Financial Independence என எண்ணுவதால் தான் குடும்பங்கள் பிரிகின்றன என்றாள்.

கமலாவோ இந்திய மண்ணில் பிறந்து 12 வது வயதில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெண். சங்கரியோ லண்டனில் குடியேறி வாழ்ந்த இந்தியப் பெற்றோருக்கு பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்த பிரித்தானியக் குடிமகள். நிறத்திலே இருவரும் இந்தியர் தான். ஆனால் சிந்தனையில் இருந்த இந்த மாறுபாட்டை என்னால் அவதானிக்க முடிந்தது.

இவர்களின் பேச்சை உற்றுக் கவனித்ததால் அவர்களை இடைமறித்து, சங்கரியிடம், ‘முன்னய இந்திய  சமுதாயத்தில் பெண்கள் வேலைபார்த்து சம்பாதிக்காததால் அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது கனிசமான தொகை பணம், மேலும் காணி நிலம்,வீடு, பொருள்கள் எனக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. காரணம் அவளுக்கு ஒரு Economical Strength இருக்க வேண்டும் என்ற அடிப்படையில். ஒரு சமயம் நமது கமலாவிற்கும் பெற்றோர் அப்படிக் கொடுக்கக் கூடும்’என்றேன்.

லண்டனில் பிறந்த சங்கரி இதனை வெகுவாகச் சாடினாள். வயோதிப காலத்தில் பெற்றோர் சேர்த்து வைத்த பணம் அவர்களுக்கு உதவுவதற்காகவே தவிர பெண்ணுக்குக் கொடுப்பதற்கல்ல. அப்படி ஒரு பெண் தன் பெற்றோரிடம் பணத்தையோ சொத்தையோ பெறுவது மகா பாவமான காரியம். அப்படிச் செய்யும் பெண் பெற்றோருக்குப் பெரும் துரோகம் இளைப்பவள் என்றாள். மேலும்  சங்கரி, தனக்கு வயது 24 என்றும்; 2 அல்லது 3 வருடத்தில் தான் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்றும்; கூற கமலா இதற்கு, திருமணத்தை அவ்வளவு காலம் பிற்போட்டால் எப்பொழுது நீ பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வாய் என்று கேட்டாள்.

சங்கரி அதற்கு, மேலும் ஓரிரு வருடங்களின் பின்பே என்றாள். யாராவது திருமணம் பண்ணியதும் பிள்ளை பெற்றுக் கொள்வார்களா என்ற ஆச்சரியம் அவளின் பதிலில் மறைந்திருந்தது. திருமணத்தின் பின் இருவருமாக எமது வருங்காலத்திற்கு வேண்டிய பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி ஆராய வேண்டும்; அதன் பின் பிள்ளையை வேண்டிய போது பெற்றுக் கொள்வோம் என்றாள்.

இதிலிருந்து நாம் காண்பது என்ன? பெண்விடுதலை வேண்டும் எனப் பாரதி கோரினான். அதை ஆண்களிடம்  கேட்டு அந்த ‘பெண்விடுதலையை’ வாங்கித் தர அவன் முயற்சி செய்தான். ஆனால் பெண் ஒருத்தி தனது அறிவைப் பெருக்கி சம்பாதிக்கத் தொடங்கியதும் சுதந்திரம் என்பது அவளுக்குப் போராடி பெற வேண்டிய ஒன்றல்ல; அது தானாக வருவது என்பது புலனாகிறது.

பெண்னானவள் மெல்லியலாள்; ஆணின் ஆதரிப்பில் வாழ வேண்டியவள் என்பது எல்லாம் பெண் தொழில் புரியாத கால கட்டத்துச் சிந்தனையே! பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா? எத்தனை பிள்ளைகள் வேண்டும் எப்பொழுது பெற்றுக் கொள்ல வேண்டும் என்பதனைத்தும் இன்று அவளால் திட்டமிடப்படுகிறது.இதுவே பெண்னை முற்றாக விடுதலையை அடையச் செய்த விஞ்ஞான வளர்ச்சி.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி புவியீர்[ப்பு சக்தியை எதிர்த்து மனிதனைச் சந்திரமண்டலத்திற்கும் அண்டவெளிக்கும் கொண்டு சென்றது. அதே விஞ்ஞான வளர்ச்சி தான் குடும்பத்தையும் திட்டமிட்டு நடாத்தப் பெண்ணுக்குக் கை கொடுத்து பெண்விடுதலையையும் அளிக்கிறது.

என்ன நேயர்களே! இங்கு நான் கூறிய பாத்திரம் ஏதோ என் கற்பனையில் தோன்றியவர்கள் என்று எண்ணி விட்டீர்களா? இந்த 21ம் நூற்றாண்டிலும் இப்படியொரு 19ம் நூற்றாண்டுச் சிந்தனையுடன் ஒருத்தி வாழ்கிறாள். இந்த சம்பாஷனை நான் நிஜமாகக் கேட்டது தான்.

பெண்கள் சுதந்திரமாக வாழும் இந்தக் கால கட்டத்தில் கூட சில பெண்கள் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாது வாழ்வதை நாம் காண்கிறோம். சுதந்திரம் என்பது மற்றவர் கொடுத்துப் பெறுவதல்ல; அது நாமாகத் தேடிக் கொள்ள வேண்டியது. அதற்கும் அறிவு வேண்டும்.

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார்
என் உடையரேனும் இலர்’

என்பதை இங்கு நாம் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

( இக்கட்டுரை 8.9.2006 அன்று ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

அடியாத மாடு

’அடியாத மாடு படியாது’ என்று ஊர் வழக்கில் கூறுவார்கள். அன்று கற்றுக் கொடுப்பவர் தனது மாணவரின் தப்புகளைத் திருத்தும் போது அடிப்பது வழக்கம். அப்படி அடிப்பது முறை என்று கருதிய காலம் ஒன்று இருந்தது. இன்று போல பிள்ளைகளை அடிக்கக் கூடாது; அடிப்பது அவர்களின் மனோ வளர்ச்சியைப் பாதிக்கும் என யாரும் அன்று கருத வில்லை. அல்லது அன்று அடி வாங்கிப் படித்தவர்கள் யாரும் அடி பட்டதால் மனத்தாங்கல் ஏற்பட்டுப் பின் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களின் வாழ்க்கையை அது பாதித்து விட்டதாகவும் யாரும் கூறவில்லை.


இவ்வாறு திண்ணைப்பள்ளிக் கூடத்திலே அடி வாங்கிப் படித்தவர் தான் டாக்டர். உ.வே.சாமிநாதய்யர். பிற்காலத்திலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மேதை அவர். இவர் தனது சுயசரிதையில் தான் ஆரம்பகாலத்தில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் கற்றதை விளக்குகிறார்.

அதிகாலையில் எழுந்து திண்ணைப்பள்ளிக் கூடம் போக வேண்டுமாம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன். இருட்டாக வேறு இருக்கும்; அச் சமயத்தில் ஆசிரியருக்கு யார் வந்தனரெனத் தெரியாது. இப்போது மாதிரி என்ன மின்சார விளக்குகளா அந்தக் காலத்தில்? ஆசிரியர் சிறிது செருமுவார் - தான் இருப்பதை அறிவிக்க. அப்போது மாணவர் தனது பெயரைக் கூறுவார். ஓரிரு மாணவர்கள் வந்து சேர்ந்ததும் அடுத்து வரும் மாணாக்கருக்குக் கையை நீட்டச் சொல்லி ஆசிரியர் பிரம்பால் தடவுவார்.

பிரம்பாலே முதலில் கையில் தடவிய ஆசிரியர் அடுத்து வரும் மாணவருக்கு சிறிது உரமாக அடிப்பார். இவ்வாறு ஒவ்வொரு மாணவருக்கும் படிப்படியாக அடியின் வேகம் கூடும். கடசியாக வருபவருக்கு நல்ல அடி கிடைக்கும். ஏன் இப்படி அடிக்கிறார் என எண்ணுகிறீர்கள்? மாணவர் யாவரும் விடியற்காலை கருக்கல் பொழுதாக இருக்கும் பொழுதே திண்ணைப்பள்ளிக் கூடத்துக்கு வந்து விட வேண்டும். இது தான் படிக்கும் மாணவருக்கு இருக்க வேண்டிய பண்பு எனக் கருதப்பட்ட காலம் அது!

இதே போல் தான் இசை, வாத்தியம் போன்ற நுண்கலைகலையும் கற்றுக் கொண்ட மாணவர்கள் தம் ஆசிரியர்களிடம் அடியும் உதையும் பெற்றுத்தான் கலையைக் கற்றார்கள். நாதஸ்வரச் சக்கரவர்த்தி என யாவராலும் போற்றப்பட்டவர் நாதஸ்வர வித்துவான் ரீ. என். ராஜரட்ணம் பிள்ளை. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த வித்துவானாகப் போற்றப்பட்ட இந்த மேதையும் உ.வே. சாமிநாதய்யர் காலத்திலேயே வாழ்ந்தவர். இந்த இசைமேதையில் வாழ்விலிருந்து:-

நடேசபிள்ளையின் ( இவர் ரீ.என். ராஜரட்ணம் பிள்ளையின் மாமா ) நாதஸ்வர இசையை அள்ளிப் பருக பெருங் கூட்டம். நடேசபிள்ளையின் வாசிப்பு தேனாக ஊற்றெடுத்துப் பாய்கிறது. ஷண்முகப்பிரியா நாதப் பிரவாஹமாக பெருகுகிறது. கூட்டம் உன்மத்த போதையில் கிறங்கிக் கிடக்கிறது. நடேசபிள்ளையின் அருகில் 16 வயதுச் சிறுவன். அவரது ஸ்வீகார புத்திரனும் கூட. அவன் தான் அவருக்கு இரண்டாவது நாதஸ்வரம். இப்போது பிள்ளைவாள் சற்றே ஓய்வு கொள்ள, அந்தப் பையனின் வாசிப்புத் தொடர்கிறது.

அவர் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வருகிறார். ஷண்முகப்பிரியாவின் சஞ்சாரத்துக்கு இடையே ஒரு சின்ன அபசுரம். நடேசபிள்ளையின் கண்களிலே தீப்பொறி பறக்கிறது. நாதஸ்வரத்தை இடது கைக்கு மாற்றி விட்டு, வலது கையால் பையனைப் பளீர் பளீர் என நன்கு அறைந்து விடுகிறார். தொடர்ந்து சாராமாரியான வசவுகள். பையன் அவ்வளவு அடியையும் திட்டையும் வாங்கிக் கொண்டு பொறுமையாகத் திரும்ப வாசிக்கிறான். இம்முறை வாசிப்பு சுத்தமாக இருக்கிறது. இவ்வாறு கற்றுக் கொண்டவர் தான் பிற்காலத்திலே யாவராலும் போற்றப்பட்ட நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ரி.என். ராஜரட்ணம் பிள்ளை அவர்கள்.

இதே ராஜரட்ணம் பிள்ளை ஆரம்ப காலத்திலே ஒரு வாய்ப்பாட்டு வித்துவானாக வர ஆசைப்பட்டாராம், திருக்கோடிக்காவல் கிருஷ்ணஐயரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார் ராஜரட்ணம். பிற்காலத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் தன் நண்பர்களிடம் இவ்வாறு விபரித்தார் ராஜரட்ணம். ‘ ஒரு நாளைக்குப் பாருங்கோ, பாடும் போது ஒரு ஸ்வரம் மொட்டயாய் போச்சிது. அய்யர் என்ன பண்ணாங்க தெரியுமா? கையில் இருந்த பிடில் வில்லால் மூக்கில ஒரு குத்து குத்தினாரு; ரத்தம் பீச்சி அடிச்சிது. அண்ணிலருந்து இன்னிக்கி வரைக்கும் நம்மகிட்ட ஒரு மொட்ட ஸ்வரம் பேசாது தெரியுமோ’ என ராஜரட்ணம் பிள்ளை பெருமையுடன் கூறுகிறார்.

பிற்காலத்திலே தமிழ் தாத்தா எனப் போற்றப்பட்ட ஊ.வே. சாமிநாதய்யரும் 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த இசைமேதை எனப் போற்றப்பட்ட திருவாவடுதுறை ராஜரட்ணம் பிள்ளையும் தாம் சிறுவயதில் பட்ட அடியும் உதையும் தமது வருங்கால வளர்ச்சிக்கு இட்ட உரமாகவல்லவா கருதுகிறார்கள்!

அடியும் உதயும் திட்டும் அவரவர் பார்க்கும் பார்வையில் தான் நன்மையையோ தீமையையோ அளிக்கிறது.

ஆனால், உ.வே. சாமிநாதய்யரும் ரீ. என். ராஜரட்ணம் பிள்ளையும் அடி உதை வாங்கித் தான் மேதை ஆனார்கள் என்றெண்ணி நீங்கள் சிறுவர்கள் யாரிலும் கை வைத்து விடாதைங்கோ. அப்புறம் நீங்கள் Child Abuse வழக்கில் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்ள நேரும். ஜாக்கிரதை!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ..... அன்று ஒலிபரப்பானது )

Friday, January 11, 2019

Health, Wealth & Ayurvedic; ஆரோக்கியம், செல்வம் மற்றும் ஆயுள்வேதம்


இன்றய மனித சமுதாயம் பணத்தையும் பொருளையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் பத்தும் செய்யும். அந்தப் பத்து மட்டும் இருந்து விட்டால் யாவற்றையும் பெற்றுவிட்டவர் ஆவோம் என்ற சிந்தனை மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சம்பாதிப்பதால் ஏற்படும் திருப்தி முழுச் சந்தோஷத்தையும் கொடுக்கிறதா? சந்தேகமே!. இதனால் ஏற்படும் மன உழைச்சல் நீண்ட நாள் உபாதைகளைக் கொண்டுவரக் கூடியவை.

இந்த மன உழைச்சலால் ஏற்படக் கூடியவை இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, வயிற்றுப் புண், மூட்டு வாதம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். மன அழுத்தத்தால் உடலில் பல நோய்கள் ஏற்படக் கூடும்.

கொஞ்சம் முன் யோசினையாக இருந்தால் இவற்றை வருமுன் தடுக்கலாம். எமது பண்பாட்டில் தோன்றிய யோகாப்பியாசம், தியானம், மேலும் சில ஆயுள்வேத முறைகளைக் கையாள்வது எமக்குப் பயன் தரக் கூடியவை. ஆயுள் வேத முறையைக் கடைப்பிடிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. அவை பற்றிச் சிறிது பார்ப்போம்.

ஆயுள் வேதம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் ‘ வாழும் வழி’ என்பதாகும். அது வாழ்க்கைக்கான அறிவு எனப் பொருள் படும். ஆயுள் என்பது வாழ்க்கை; வேதம் என்பது அறிவு. அதனால் இது வாழ்க்கையை வாழ்வதற்கான அறிவு எனக் கொள்ளலாம்.

ஆயுள் வேதம் சுகபலத்துடன் வாழ்பவரின் நலத்தை காப்பது. நோயுற்றவரின் நோயை தீர்ப்பது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு கையாளும் முறை சிறந்த உணவு, போதிய தூக்கம், அதற்கு மேல் நோயுற்றால் குடிநீர் மற்றும் மாத்திரை.

ஆயுள் வேத வைத்தியரான Raghwanand Sharma , ’இன்றய ஐரோப்பிய அலோபதி  வைத்திய முறை கசநோய், தொழுநோய், பெரியம்மை போன்று கிருமிகளால் ஏற்படும் நோயைத் தீர்க்கவல்லது. அதே சமயம் உடலில் உள்ளே ஏற்படும் சீரான சமநிலை தவறுவதால் ஏற்படும் நோயைத் தீர்ப்பதற்கு ஆயுள்வேத வைத்திய முறைசிறந்தது’ எனக் கூறுகிறார்.

ஆயுள்வேதம், யோகாசனம் போன்றவை எமது பாரம்பரியக் கலாசாரமான வேதங்களில் இருந்து தோன்றியவை. இவை வாழும் வழியை அதாவது எமது நாளாந்த வாழ்க்கை முறையைச் சரியாக நடைமுறைப்படுத்துவதால் பல நோய்களில் இருந்து உடலைக் காப்பாற்றும் வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது.

இங்கு 3 வகையான உணவு அனுஷ்டானங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. முதலாவதாக நீங்கள் முதலில் உண்ட ஆகாரம் முற்றாகச் சமிபாடு அடைந்த பின்பே அடுத்த ஆகாரம் உண்ண வேண்டும். இதனை நாம் எத்தனை பேர் கைக்கொள்ளுகிறோம்? அதன் பின் அளவோடு வேண்டியதை மட்டும் உண்ண வேண்டும்.

எம்மைச் சுற்றி உள்ள இயற்கை ஒன்றுடன் ஒன்று இனைந்து ஒன்றுக்கொன்று அனுசரணையாக இயங்குகின்றது. இந்த இயற்கையினின்றும் வேறுபட்டதல்ல நமது உடல். எமது சரீரம் இந்திரியம், மனம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் அதே நேரம் இணைந்தும் செயல் படுபவை. அதாவது சரீரம் என்பது உடல். இந்திரியம் என்பது உள்ளுறுப்புகள். மனம் என்பது உடலை இயக்கும் சிந்தனைச் சக்தி. இவை ஒன்றுக்கொன்று இணைந்து இயங்காத பொழுது நாம் நோய்வாய்ப்படுகிறோம். இவற்றைச் சரிவரப் பராமரிப்பது நல்வாழ்க்கைக்கு உதவும்.

மேலும் ஆயுள் வேதம் கூறுவதாவது, தினமும் உடற்பயிற்சி அவசியம். ஆகாரத்தை  காலை, மதியம், இரவு ஆகிய 3 நேரங்களிலும் உண்ண வேண்டும். நாக்கைக் கட்டுப்படுத்தி அதனை வழிநடத்த வேண்டும். எமது மனநிலை எமது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமானது. இன்று பல நோய்களுக்குக் காரணம் மன உழைச்சலே. உங்கள் மனநிலையே உங்கள் உணர்வுகளுக்குக் காரணமானவை. நீங்கள் யோகப்பயிற்சியால் உங்கள்  இந்திரியங்களை - அது தான் உங்கள் உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீர்படுத்தி அதன் மூலம் உணர்வுகளை வழிநடத்தலாம். இதனால் மனநிறைவடைந்த மனநிலையுள்ளவராக ஆகலாம்.

முறையாகத் தினமும் யோகப்பயிற்சி, பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி இவற்றால் நோய்கள் குணப்படும். மனநின்மதி ஏற்படும். இதனால் நீங்கள் சுகபலத்துடன் நீண்ட ஆரோக்கிய வாழ்வை வாழலாம்.

Sprite of Ayurveda என அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுள்வேத, யோகப்பயிற்சி நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இறுதியாக வழங்கிய அறிவுரை என்னவென்றால், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தான். இதை அடைவதற்குக் குறைந்தது 6 மணி நேர நித்திரை அவசியம். இது உடலுக்கு வேண்டிய ஓய்வைக் கொடுக்கிறது. நோய் தீர்க்கும் மூலிகைகள்  மூலம் தயாரிக்கப்பட எண்ணை மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இது எமது உரோமத்தை மிருதுவாக்கி இரத்த ஓட்டத்தைக் கூட்டுகிறது. அதேசமயம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி உடலுக்கு சுவாதீனம் அளிக்கிறது. முறையான நல்ல உணவு, சுத்தமான பழக்கவழக்கங்கள், நல்ல தூக்கம், தியானம் ஆகியவை நல்வாழ்வுக்கு முக்கியமானவை. என மேலும் அவர்கள் கூறினார்கள்.

தினமும் நாம் செய்யும் உடற்பயிற்சி எமது உடலைக் கட்டாக வைத்திருக்க உதவும். எமது தசைநார்களை அது பலப்படுத்தும். எமக்குப் பசியை வரவளைக்கும். உடல்நிலையைச் சீராக வைத்திருக்கும். யோகப்பயிற்சி, நீச்சல், சுத்தமான காற்றுள்ள இடத்தில் நடப்பது, ஏன் நன்றாக மனம் விட்டுச் சிரிப்பது கூட ஒரு அப்பியாசம் தான். இதே போன்று காலை, மதியம், இரவு சாப்பாட்டை நேரம் தவறாமல் உண்ண வேண்டும்.

இதுவரை ஆயுள்வேதம் கூறியவற்றைக் கண்டோம். இத்தனையும் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்துவதும் கடினமாகத் தோன்றவில்லை. ஆனால் என்ன என்கிறீர்களா? ஆமாம், அன்று கிராமிய வாழ்விலே சனிக்கிழமைக்குச் சனிக்கிழமை நல்லெண்ணை தேய்த்து சீயாக்காய் வைத்து தலைமுழுகியவள் தான் நான். காலையில் அப்பாவுடன் சேர்ந்து யோகப்பயிற்சி அதன் பின் சாப்பாடு, பணிக்கன் வளவு என்றெல்லாம் நீண்ட நடை பயின்றோம். இன்று அன்று அனுபவித்தவை எல்லாம் ஒரு சுகபோக வாழ்க்கையாகத் தெரிகிறது. நேரம் தவறாத சாப்பாடு வித விதமாகப் படைக்க அன்பே உருவான பாட்டி. நினைக்கும் போதே கண் கலங்குகின்றது. இத்தனையும் இனி எமக்குக் கிடைக்குமா?

காலையிலே முடிந்த வரைக்கும் Tai Chi என்ற பயிற்சி செய்கிறேன். இன்றய எமது வாழ்க்கையில் இதுவே ஒரு பெரிய விஷயம். நாலாவட்டம் நேரத்துடன் ஒரு போராட்டம். எப்போ பார்த்தாலும் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற குறை. நேரம் தான் கிடைக்கிறதா? ஏன் என்னைப்பற்றி நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? என்னைப் போன்றே உங்களுக்கும் வாழ்ந்து முடிந்த / வாழும் வாழ்க்கை உண்டல்லவா?

நாம் விரும்பாவிட்டாலும், இந்த அவசர வாழ்க்கை தான் நமது. நகரத்தின் சந்தடியுடன் வாழ்கிறோம். ஆனால் எம்மையெல்லாம் மிரட்டுவது ஒன்று உண்டு. அது தான் எமது உடல் நலம். இதை இழக்க நாம் தயாரா? இல்லவே இல்லை. அதனால் மேற்கூறியவற்றைச் செய்யக் கட்டாயமாக முயல்வோம்.

உங்கள் / என் / முயற்சி வெற்றிபெற எமக்கு நாமே நல்வாழ்த்துக் கூறுவோம். இனியும் தாமதம் வேண்டாம். செய்கையில் இறங்குவோம். 

( இக்கட்டுரை 9.3.2006 அன்று ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )

Monday, January 07, 2019

எனது இராமாயணம்


நான் இந்த நாட்டிற்கு 1995ல் வந்தேன்.

எனது நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபல்யமாக இருந்ததால் இங்கு வந்த என்னை ’ஈழத்தமிழர் கழகம்’ எனது இராமாயணத்தை மீண்டும் இங்கு மேடையேற்றும் படி கேட்டார்கள். இந்த இராமாயணம் முன்னர் கொழும்பு, யாழ்ப்பாணம், சென்னை ஆகிய இடங்களில் மேடையேற்றம் கண்டிருந்தது.

இன்று ATBC வானொலியில் பிரபலமாக இருக்கும் பத்மஸ்ரீ. மகாதேவா, சிவசம்பு.பிரபாகரன், ஸ்ரீபாலன் மற்றும் எனது மகன் அமிழ்தன், போன்ற பிரபல நடிகர்கள் இத்தனை பேரும் இராமாயணத்தில் ஆண் பாத்திரம் எடுக்க, பல இளம் பெண்கள் பெண் பாத்திரம் ஏற்று ஆட,  நான்கு மாதங்களில் இராமாயணம் தயாரானது. Blacktown Theater இல் இது அமோக வெற்றியுடன் நடைபெற்றது. இதை உங்களில் பலரும் கூட இதைப்  பார்த்திருக்கலாம்.

ஆமாம், இராமாயணம் என்ற கர்னபரம்பரைக் கதை வாய் மொழியாக இந்தியா பூராவும் இருந்து வந்தது. இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் திருமாலின் அவதாரம் என இராமனைப் பூஜிக்கிறது. இதே போன்று இந்தோனேஷிய இந்துக்கள் இராமனையே தம் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

எனது இராமாயணம் முதன் முதலில் 1974ம் ஆண்டு முதன் முறையாக மேடையேறியது. இதன் பின் 2வது தடவையாக மேடையேறப்போவதாகப் பத்திரிகையில் விளம்பரங்களும் விமர்சனங்களும் வெளியாகின. இதனால் இந்தோனேஷிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இருந்து இந்தோனேஷிய High Commissioner அதைப் பார்வையிட விரும்புவதாகவும்; மேலும், அந்த நாட்டியத்தை இந்தோனேஷியாவில் காட்டுதற்கு முடியுமா என்று கேட்டும் ஒரு அழைப்பிதழ் வந்திருந்தது. எனக்கும் என் குழுவுக்கும் வந்திருந்த அந்த அழைப்பைப் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது போயிற்று என்ற வருத்தம் எனக்கு இன்றைக்கும் உண்டு.

பின்பொருகால், சென்னையில் நான் இருந்த சமயம் இந்தோனேஷிய இராமாயனம் ஒன்று வந்து மேடையேறியது.  இது, இந்தோனேஷிய இந்துக் கோயில்களிலே எமது சுதேச கூத்துக்களைப் போல திறந்த வெளி அரங்கில் பத்து நாட்கள் நடைபெறும். இதில் வரும் வாலி, சுக்கிரீவன் யுத்தம் யாவும் மல்யுத்தமாகவே நடைபெறும்.

இந்தோனேஷிய ஆடல் கலைஞர்கள் இதைச் சென்னையில் உள்ள Music Academy யில் ஆடிக் காட்டினார்கள். திறந்த வெளியானால் போர் காட்சிகள் எல்லாம் மிக மிக விறுவிறுப்பாக இருந்திருக்கும். இங்கு மேடையில் ஆடுவதால் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுகிறது என்றார்கள்.

எனது இராமாயணத்தில் இராம இலக்குவர் வானரப் படையை திரட்டிப் போருக்குச் செல்வது, மற்றும் இராம இராவண யுத்தம் இவை யாவற்றையும் இலங்கையில் கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்புக்கே உரித்தான வடமோடி ஆடல் வகையில் அமைத்திருந்தேன். இந்த ஆடலைச் சென்னையில் பார்த்த கலைஞர்கள், ’இது என்ன ஆடல் வகை? வெகு அருமையாக இருந்தது அந்த யுத்தக் காட்சி’ என வினவினார்கள். மிகப் பெருமையுடன் இது இலங்கைத் தமிழரின் ஆடற்கலை என எடுத்துக் கூறினேன்.


( இது வடமோடி நாட்டுக்கூத்து மரபின் தன்மையை எடுத்துக் காட்டும் இராவணேசன் நாட்டுக் கூத்தின் ஒரு சிறு பகுதி)

பிற்பாடு தமிழ்நாட்டு அரசின் பண்பாட்டுத் துறை இந்த ஆடல் - அது தான் எமது வடமோடி ஆடல் பற்றி ஒரு Work Shop நடாத்தித் தரக் கோரியது. இருந்த போதும், இந்த ஆடல் முறை சாஸ்திரிய அதாவது, Classical Art என்ற அந்தஸ்தைப் பெறவில்லை.  ஏதோ கிராமியக் கூத்து என்றே பலராலும் விமர்சிக்கப்பட்டது. கருதப்பட்டது என்றும் கூடச் சொல்லலாம். ஏன் இப்பொழுதும் அப்படி எண்ணுபவர்கள் உண்டு. ஆனால் இந்த ஆடல் முறையை ஸாஸ்திரியக் கலையாக்கி அதாவது Classical Art ஆக்கிClassical மேடைகளில் ஆடியது எனது தயாரிப்பான இந்த இராமாயனத்திலேயே! எமது கையிலே சரக்கை வைத்துக் கொண்டு, அதை நாமே சரியாக மதிப்பீடு செய்யாதது எம்மவரின் குறையே. கையிலே வெண்ணையிருக்க நெய்யிற்கு நாம் அலைவானேன்?

எனது இராமாயணத்தைப் பார்ப்பதற்கு முன் தம்மைக் கலையில் பாதுகாவலர் என எண்ணிய சிலர் வழுவூராரிடம் அழகிய பரதத்தைப் பயின்றதன் பின் ஏன் இப்படி நாட்டுக்கூத்தை ஆட வேண்டும் என விமர்சித்தனர்.  நாட்டிய நாடகத்தைக் கண்டு உண்மையாகவே மெய் சிலிர்த்ததாக வேறு சிலர் கூறினர்.

இராவணனும் அனுமானும் பரதம் ஆட முடியுமோ?

சென்னையிலே நான் வாழ்ந்த காலத்தில், நான் அறிந்து கொண்டவை பல. இந்த இராமாயணம் பற்றியும் பல விஷயங்களை நான் அறிந்து கொள்ள முடிந்தது. அதில், மகாராஷ்டிரத்தில் இராமாயணத்தைக் கணவனும் மனைவியுமாக சேர்ந்து கதையாகக் கூறும் பழக்கம் உண்டு என்பதும் ஒன்று.

ஒரு பெரிய திரைச் சீலையிலே, நல்லதொரு நாளிலே, ஒரு சிறுமியின் கையில் தூரிகையைக் கொடுத்து இராமாயணக் காட்சிகளை வரையச் சொல்வார்கள். இதைத் தொடர்ந்து இராமாயணக் காட்சிகள் அதில் வரையப்பட்டு பத்திரப்படுத்தப்படும். இந்தத் திரைச் சீலையில் வரைந்த காட்சிகள் இடமிருந்து வலமாக போகும். கணவன் மனைவியான இந்தக் கலைஞர்கள் இரவு நேரத்தில் எண்ணையில் எரியும் தூண்டாமணி விளக்கை இந்தக் காட்சியின் முன் பிடிப்பார்கள். காட்சி தெரியும். கணவனும் மனைவியும் பாத்திரங்களாக மாறி சம்பாஷனை செய்து அந்தக் கட்டத்தை நடித்துக் காட்டுவார்கள்.

ஆமாம், அந்த இருளில் குரல் தான் கேட்கும். ஆனால் திரையில் வரைந்த படம் தெரியும். இந்தக் கலைஞர்கள் மிகவும் கைதேர்ந்த நடிகர்கள். இவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் திரளாகக் கூடுவார்கள். இந்தத் திரையிலே வரையப்பட்ட படம் மங்கிக் களை இழந்ததும் அதற்குப் பல பூஜைகள் செய்து கடலிலே கொண்டுபோய் போடுவார்கள். தங்கள் உயிரின் ஒரு பகுதியைக் கடலில் போடுவதைப் போல இதைச் செய்வது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கும். இதை நான் எங்கு கண்டேன் என்கிறீர்களா? இந்திய தொலைக்காட்சி - அதுதான் தூரதர்ஷனில் தான் இதை நான் பார்த்தேன்.

இங்கு கணவன் மனைவியான ஜோடி முழுக் கதையையும் நடித்துக் காட்டுவதாகக் கூறினேன் அல்லவா? எம் எல்லோருக்கும் இராமனுக்கு லவ, குச என இரு குழந்தைகள் இருந்தது தெரியும். அவர்களே இராம கதையைக் கூறினார்கள் என்பது அவர்களது ஐதீகம்.  நாடகவியலாளர்களின் கருத்துப்படி, நாடகம் என்று வேஷம் போட்டு நடிப்பதற்கு முன் இந்த லவன் குசன் என்ற இருவரே நடித்தும் பாடியும் இராமாயனத்தை கூறி வந்தார்கள்; அதாவது இருவர் சேர்ந்து கதையைக் கூறுவதும்; அவர் தம்மை இராமனின் பிள்ளைகள் எனக் கூறுவதும் அன்றய சம்பிருதாயமாக இருந்திருக்கும் எனக் கருதுகிறார்கள்.

குகன் என்ற காட்டுவாசி இராமனில் அளவில்லாத அன்பு கொண்டவன் என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஒரிஸா மாநிலத்தின் இராமாயணத்தில் குகன் இராமனில் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு காட்சி கட்டாயமாக அமைந்திருக்கும். இராமன் குகனிடம் விடை பெறப் போகிறார். குகனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இராமனின் கால்களை வருடுகிறான். உணர்ச்சி மேலீட்டால் திரும்பத் திரும்ப இராமனின் கால்களிலே முத்தங்கள் கொடுக்கிறான். கால்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ளுகிறான். கண்ணீரும் கம்பலையுமாக இராமனை வழியனுப்பியவன், பிரிவுத் துயர் தாங்காது இராமன் நடந்த பாதத்தின் அடி பதிந்த இடத்திலேல்லாம் அழுது புரளுகிறான். ஆமாம், ஒரு அப்பாவியான காட்டுவாசியின் அன்பை அது ஆழமாக; அழகாக எடுத்துக் காட்டியது.

ஒடிசி நாட்டியத்தில் பிரபலமாக விளங்கிய மகாபத்திரர். அவர்  தனது மனைவியான மிருனாள் சென்னுடன் இதை ஆடிக் காட்டினார். இருவருமே தேர்ந்த ஆடல் விற்பன்னர்கள். பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவைக்க வல்லவர்கள். ஆமாம், இப்படியான ஒரு கட்டம் கம்பராமாயணத்தில் இல்லை. இது ஒரிஸாவின் இராமாயணம்.

ஆமாம், பாரத மாதா செப்பு மொழி 18 உடையாள் எனப் பாரதி பாடினான் அல்லவா? அத்தனை மொழிகளிலும் இராமாயணம் உண்டு. அது அவரவர் இராமாயனம். அவரவர் பிரதேச வழக்குகளுடன் அது அமைந்திருக்கும்.

சிங்களத் தீவினிலே பிரபலமாக இருப்பது கண்டி நடனம். மற்றயது கீழைத்தேய நடனம். இந்த சப்பிரகமுவ ஆடல் வகையில் பல நாடக அம்சத்தைக் காணலாம். இவர்கள் இராமாயணத்தையும் விட்டு வைக்கவில்லை. சீதை கற்புடையவளா இல்லையா என துணி துவைக்கும் துறையில் ஒரு வண்ணான் பேசியதாகவும்; அதனால் இராமன் அவளது தூய்மையைப் பறைசாற்ற அவளைத் தீக்குளிக்க வைத்தான் என்பதும் நாம் கேட்டு வளர்ந்த கர்னபரம்பரைக் கதை. இதை இந்த சப்பிரகமுவ மாகாண ஆடல் வகையில் அவர்கள அழகாகக் காட்சிப்படுத்திக் காட்டுவார்கள்.

இந்தியாவிலே படியாத பாட்டியும் இராமர் கதை அறிவாள்.ஒருத்தியைப் பிடிக்கா விட்டால் சூர்ப்பனகை என்பார்கள். சூழ்ச்சிக்காரி என்றால் அவளைக் கூனி என்பார்கள்.  செட்டி வீட்டிலே ஆண்கள் பர்மாவில் சென்று தங்கி வியாபாரம் செய்து சில வருடங்களிலே நாடு திரும்புவது வழமை. ஒருநாள் இப்படியான செட்டி ஆச்சியிடம், குசும்பாக, ‘ஆச்சி இந்தச் செட்டிமார்கள் இப்படிப் பலவருடம் தங்கி வருகிரார்களே! அங்கு நல்லவிதமாக நடந்து கொள்வார்களோ?’ என்று கேட்டேன். ஆச்சிக்கு கணவரை நேராகக் குறை கூற மனம் வருமா? ’இவர்கள் என்ன இராமச் சந்திர மூர்த்திகளா?’ என்றார்.

ஆமாம் இராமச் சந்திரன் ஏக பத்தினி விரதனல்லவா?

( இது இந்தோனேஷிய இராமாயணத்தில் அனுமான் சீதையிடம் செல்லும் காட்சி)

( இக் கட்டுரை 30.6.2005 அன்று ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )

Tradition in Modernity - பழமையும் புதுமையும் -


 ( என் கணவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையில் தமிழாக்கம் இது )

பழையன மாறவும்; 
புதியன தோன்றவும்!

குறள் போன்ற வரிகள்
ஒரு கவிஞனின் குரலிசைகள்!

மெல்ல மெல்ல சருகாகும் பழைய இலைகள்
அங்கெல்லாம் தோன்றும் புதிய புதிய துளிர்கள்!

புதிய மொட்டுக்கள்; பசுமைக் கிளைகள்
நாளைய வைரக் கொப்புக்கள்!

வயதான கிளைகள், சுள்ளிகள் அகலும்.
இளமைக் காம்புகள் அங்கெல்லாம் தோன்றும்....

பாரிய அடிமரம் ஓங்கி உயர்ந்திட
உச்சியில் பச்சிலை பந்தல் விரித்திட....

(அதனை) கதிரவன் ஒளிக்கதிர் வாரி அனைத்திட
(இவ்வாறு) பெருகும் மரமதன் திரண்ட வேர்கள்!

பற்றிப் பிடித்து மண்ணில் தாவி வேர் விரிய, 
ஓங்கி வளர்ந்த ஒய்யார மரமது;
எம்மை நோக்கி, 
பாரிங்கே,
பழசும் புதுசும் குலவிடும் யுக்தியை!
எனும்.

பார்! அங்கெலாம் இளமையின் கோலம்
அது,
பழமையும் புதுமையும் காட்டிடும் ஜாலம்.

உச்சிப் பந்தலை மொட்டையடித்தால்
மெல்லச் செத்திடும் அடி மரம் அங்கே! - அதுபோல்
ஓங்கி நிற்கும் நவீனம் அழிய, மடிந்திடும் பழமை!

பழமைத் தூண்களில் படர்வதே நவீன பந்தல்.
கருவறை பழையது; புதியதோ அதன் சிசு!

பழையன கழிதலும் புதியன புகுதலும்
ஒரு வாட்போரின் விளைவல்ல;
இரண்டும் கொஞ்சிக் குலவிடும்
இளமைக் கலவியின் பேறே அன்றோ!

நவீனம் என்பது தானே தோன்றிய
இளமைக் கொடியே அல்ல;

பழமை என்பதும் புதுமையைப் படைத்து 
என்றும் அதனடி வாழும் யுக்தியைக் கொண்டதே!


( 21/ 21. 7.2007 அன்று ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற  நிகழ்ச்சிக்காக மொழிபெயர்த்த கவிதை )


புலம்பெயர்ந்தோரின் அடையாளங்கள்


எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பிறந்து, வளர்ந்தோம். ஆம், நாம் சுவாசித்த அந்தக் காற்று, ஓடி விளையாடிய நிலம், படித்த பள்ளிக் கூடம், பேசிப்பழகிய உறவுகள் அத்தனையும் இன்று எம்மிடம் இல்லை. எமது பாரம்பரியம் என்பது; நமது பண்பாடு என்பது; நாம் வாழ்ந்த நாட்டு பழக்க வழக்கங்களே. அந்தப் பேசிய மொழி, உண்ட உணவு, அந்த உறவுகள் அத்தனையும் எம்மை உருவாக்கியுள்ளன.

ஆம், நாம் இத்தனைக்கும் வாரிசுகள். பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த தொடர்பு அறுந்து போகாது எம்முடன் வாழ்ந்த ஒன்று. நாம் மண்வீடுகட்டி விளையாடிய அந்த மண்ணினை உதறி விட்டு, இன்று புதிய சூழலில் வந்து நிற்கிறோம்.

பொருளாதார முன்னேற்றத்தால் ஏற்பட்ட சொகுசுகள் அத்தனையும் எம்மை முற்றாக மாற்றி விடவில்லை. நாம் விட்டு வந்த நிலத்தின் பாரம்பரியம் அத்தனையும் எமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் ஆர்வம் காட்டுகிறோம். அதை முற்றாக நாம் இங்கு நம்மால் கொண்டுவரமுடியாவிட்டாலும் எம்மால் முடிந்த அளவுக்கு அதை நாம் செய்து வருகிறோம். தமிழ் பாடசாலைகள், இந்துக் கோயில்கள், இவையாவும் நமது பாரம்பரியத்தில் நாம் கொண்ட பற்றின் வெளிப்பாடு.

எமது பிள்ளைகளுக்கு நாம் எமது பாரம்பரியத்தைக் காட்டும் திறவுகோலாக இவற்றை ஆக்கி உள்ளோம். Multicultural சமுதாயத்தில் வாழும் எமது வாரிசுகளுக்கு, நாமும் ஒரு சிறந்த பண்பாட்டின் வாரிசுகள் என்ற எண்ணத்தை; அதனால் ஏற்படும் சுயமரியாதையை; இது வளர்க்கும் என நம்புகிறோம்.

பல இன மக்கள் வாழும் சமுதாயத்திலே, உனக்கான ஓர் அடையாளம் இல்லாவிட்டால் நீ மதிக்கப்பட மாட்டாய். ஆனாலும் நாம் மாறிக் கொண்டும் இருக்கிறோம். இதை மறுக்க முடியாது. இந்த நிலையிலே இங்கு வாழும் எமது வாரிசுகள் ; இவர்கள் எமது வாரிசுகள் தான். ஆனால் எமது பாரம்பரியம் பண்பாடு இத்தனைக்கும் வாரிசுகளா? என்ரு கேட்டால்  கவலையுடன் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் என்பது அந்த மண்ணுடன் ஒட்டி உறவாடும் போது வருவது.

எமது பிள்ளைகள் நாம் வாழும் இந்தப் புதிய பண்பாட்டின் வாரிசுகளா? சந்தேகமில்லை; அவர்கள் வாழ்ந்து அனுபவிப்பது தான் அவர்களை உருவாக்குகிறது. அப்படியானால் அந்தப் புதிய பண்பாடுதான் என்ன? வீட்டிலே தமிழர். இன்னும் சரியாகச் சொல்வதானால் மாறிவரும் தமிழ் கலாசாரம், வெளியிலே பல்லினக்கலாசாரத்துக்குரிய பாடசாலை. இவைகள் எல்லாம் கலந்த இப் புதிய சமுதாயம் உருவாக்குவது தான் எமது வாரிசுகள்.

அண்மையில் எனது தம்பி - லண்டனில் வாழ்பவர் - அவர் ஒருதடவை, ‘எனது பிள்ளை Robinhood ஐப் படிப்பதை விட, ராஜராஜ சோழனைப் பற்றிப் படிப்பதை நான் விரும்புகிறேன்’ என்றார். காரணம், இது அவனுக்கு தனது முன்னோரும் பெரும் அரசுகளை அமைத்து ஆண்டவர்கள்; பெருமைக்குரிய சமுதாயம் ஒன்றின் வாரிசுகள் தான் நாம் என்ற தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று மேலும் அவர் கூறினார்.

இந்தப் புதிய சமுதாயத்தில் பிறந்து வளரும் வாரிசுகள் சிலருக்கு அந்த சமுதாயத்தில் இயற்கையாக வாழ்ந்து வந்தவருக்கு ஏற்படாத பற்றும் பாசமும் ஏற்படுவதும் இயற்கை. இலங்கைத் தமிழ் தந்தைக்கும் French தாயாருக்கும்  பிறந்த கலாயோகி. ஆனந்த குமாரசாமி தனது பாரம்பரியத்தை அறியத், தந்தையின் தேசத்துக்குள் புகுந்தார். அங்கு அவர் கண்டடைந்து உலகுக்கு கொண்டு வந்து சேர்த்த நாட்டின் கலைப் பொக்கிஷங்களும் தொண்டுகளும் அளப்பரியது. அதன் மூலம் அவர் ஐரோப்பியர்களின் மத்தியிலே எமது பண்பாட்டின் சிறப்பைப் பெருமைப்படுத்தினார் அல்லவா?

அண்மையில் Geography Channel இல் ஒரு நிகழ்ச்சி, லண்டனில் சீக்கியத் தாயாருக்கும் இந்து பஞ்சாபி தந்தைக்கும் பிறந்த ஒரு பெண், லண்டனிலேயே பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் பாரம்பரியத்தை அறிய விரும்பி, அவர்கள் பிறந்த கிராமத்தை நோக்கிச் செல்கிறாள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஓரளவு அறிகிறாள். தாயார் அந்த அறையில் தான் பிறந்தார் என ஒரு மூதாட்டி காட்டுகிறாள். தாயாரின் தந்தை, தாய்வழிப்பாட்டன்; சீக்கியர், சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர், அவர்கள் நடத்திய போராட்ட விபரங்கள் மற்றும் அது குறித்த படங்கள் யாவும் சீக்கியரின் அமர்ததசரஸில் உள்ள பொற்கோயிலின் ஆவணங்களில் காணப்பட்டன. ஷேஷ்திர யாத்திரை செல்பவல் போல் இந்தப் பெண் அங்கு சென்று, பார்வையிட்டு, பின் இறுதியாகத் தன் அம்மா வாழ்ந்த வீட்டின் நிலத்தில் இருந்து ஒரு கல்லை ஞாபகார்த்தத்துக்கு எடுத்துக் கொண்டு தன் தேசம் திரும்புகிறாள். அத்துடன் பாட்டனாரின் சுதந்திரப் போராட்ட படங்கள் மற்றும் எவ்வளவு காலம் சிறைவாசம் அனுபவித்தார் என்ற விபரங்கள் யாவும் பார்ப்பதற்கு நெஞ்சைத் தொடுவனவாக இருந்தன. எமது பிள்ளைகளும் இவர்களில் ஒருவர் தான்.

எமது பண்பாடு என எமக்கு எமது முன்னோர் விட்டுச் சென்றவை எவை? வானளாவ உயர்ந்து நிற்கும் கோயில்கள்,எமது இலக்கியச் செல்வம், இவையே எமது பாரம்பரியத்தின் வரலாறு. சங்க நூல்களான அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். ஏன் எமது தேவாரங்கள், பிற்பட்ட காலத்திலே ஆறுமுகநவலர் தந்த சைவவினாவிடை, மற்றும் ஒரு சுதந்திரப்போராட்டத்தின்  எழுச்சியும் வீழ்ச்சியும் இவைகள் எல்லாமும் தான் நமது வரலாற்றுப் பாரம்பரியச் செல்வங்கள்.

இன்றய உலகக் கிராமத்தில் எம்மைப் போல பல சமுதாயங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன. பாரதி அன்று, ’தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கனும் காணோம்’ எனத் தமிழுக்கு ஆக்கம் தேடினான். அதே தீர்க்கதரசி சுதந்திர மண்டலத்தைக் கண்டு களிப்போம் என்றும் பாடினான். இன்று அவன் உயிரோடு இருந்திருந்தால்  பூலோகக் கிராமமாகி விட்ட இன்றய சமுதாயம் ஒன்றாக வாழ்வதைப் பார்த்து என்ன பாடி இருப்பானோ?

ஆனால் இன்று நாம் இலங்கையர் என்றதும் cricket team முத்தையா முரளிதரன் கண்முன்னே வருகிறார் என்கிறார்கள். ஆமாம், சாதனை படைத்தால் எம்மை மதிப்பார்கள். நாம் யார் என்பதும் உலகுக்குத் தெரிய வரும். கணித மேதை சீ. வி. ராமன் தமிழ் மண்ணில் பிறந்தவர். Astronomar சந்திரசேகர் பாரதி வாழ்ந்த திருவல்லிக்கேணி வாசி. இவர்கள் Nobel பரிசை வெல்லவில்லையா? எம்மவர் சாதனை புரியும் போது அவர் எந்த நாட்டின் வாரிசு என்பதை உலகம் அறியும்

இவை மூலமாக நாம் அறிவது என்ன? எமது மூதாதையர் எவ்வாறு வாழ்ந்தார்கள்; அவர்கள் எத்தகைய பண்பாட்டுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் என்பதே. எம்மவரை எமக்கு அறியத்தரும் காலக்கண்ணாடி இது.

இன்றய எழுத்துக்களும் வாழ்வும் நாளைய சமுதாயத்திற்கு நமது வாழ்க்கையைக் காட்டி நிற்கும்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் 19.5.2006 அன்று ஒலிபரபாகியது. )

Sunday, January 06, 2019

ஒளவை

யாவரும் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். ஆனால் காலத்தால் அழியாதவர்கள் ஒரு சிலரே. தமக்கென வாழ்ந்தவர் எல்லாம் மாண்டார். ஆனால் பிறர்க்கென வாழ்ந்தோரோ காலத்தால் அழியாதவர். என்றும் மக்களின் மனதில் நிற்பவர்.

பல்லக்கும் பரிவாரத்துடனும் வாழ்ந்த மன்னனின் புகழ் பாடி பரிசில் பெற்ற பாவலர் பலர். அனால் ஒளவையாரோ வருங்கால சமுதாயமான குழந்தைகளுக்கு அரிச்சுவடி மூலம் அறிவுரை கூறினார். அன்று ‘அறம் செய்ய விரும்பு’ எனத் தொடங்கி ஒளவையின் அறிவுரையை மனனம் பண்ணினோம். வளர்ந்ததும் அதன் பொருள் பொருள் புரிந்தோம். அதன் அர்த்தம் அதன் படி ஒழுகு என்பதே.

அன்றய சமுதாய அமைப்பில் பெண்கள் கல்வி பெற்றவர்கள் அல்ல. அதற்கு விதிவிலக்காக இருந்தார் இந்த அம்மையார். அரசர்களுக்கும் அறிஞர்களுக்கும் அறிவுரை கூறினார். போர்களை நிறுத்தத் தூது போனார். அவர் செய்தவை யாவற்றையும் பார்த்தால் இன்றய 21ம் நூற்றாண்டு பெண்கள் தோன்றுகிறார்களல்லவா?

நம்முன் ஒளவைப்பாட்டி என்று ஒரு கிழ உருவமே ஒளவையார் எனப் படைக்கப்பட்டது. காலம் காலமாக எமது கலைஞர்கள் அவரை இப்படித் தான் உருவகித்து வருகிறார்கள் .பாடப்புத்தகங்கள்,டீ கே.எஸ். சகோதரர்களுடய ஒளவை நாடகத்திலே டீ.கே.சண்முகம் ஒரு கிழவியான தோற்றத்திலே வந்தார். அது மட்டுமா ஒளவையார் படத்தில் ஒளவையார் ஒரு கிழவியாகவே கே.பி. சுந்தராம்பாள் மூலமாகத் தோன்றினார்.

ஆனால் தமிழ் நாட்டில் ஒளவையாருக்காகப் பல கோயில்கள் ஸ்தாபிக்கப்படுள்ளன. அவை எதிலும் அவர் வயோதிபத் தோற்றத்தில் இல்லை. பகுத பாண்டி ஒளவை அம்மன் கோயிலிலே அவரின் திருவுருவம் ஓர் இளநங்கையாகவே படைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஒளவை அம்மன் கோயில் என்கிறார்கள்.

நாஞ்சில் நாட்டில் நாஞ்சில் பொருணன் என்ற மன்னனால் அமைக்கப்பட்ட கோயிலிலும் ஒளவை பாட்டியாகக் காட்சி கொடுக்கவில்லை. அங்கு ஒளவையின் திருவுருவம் ஒரு நெல்லி மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஸ்தலத்தை நெல்லியடிஒளவை அம்மன் என அழைக்கிறார்கள். ஒளவையாருக்கும் நெல்லிக்காய்க்கும் இருந்த தொடர்பாலோ என்னவோ நெல்லி மரத்தடியில் இத் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் ஒளவையார் தனது பூதவுடலை விட்டு புகழுடம்பு எய்தினார் என்கிறார்கள்.

ஒளவையார் ஒரு திருமணம் நடத்தி வைத்தாராம். அதற்கு சேர, சோழ, பாண்டிய மூவரசர்களையும் அழைத்திருந்தாராம். இங்கு அந்த மூன்று மண்டபங்களின் இட்டிபாடுகள் கானப்படுகின்றன. இந்த இடத்தை முப்பந்தல் என அழைக்கிறார்கள். இங்கு ஒளையாரின் திருவுருவம் அவர் வீரக்கோல் ஏந்தி இருப்பதாக அமைக்கப்படுள்ளது. இது ஊன்றுகோல் அல்ல. இங்கும் அவர் ஓர் இள நங்கையாகவே படைக்கப்படுள்ளார்.

திருவள்ளுவரும் ஒளவையாரும் ஓர் சமூக சீர்திருத்த வாதிகளே. தாம் வாழ்ந்த சமுதாயத்தில் இருந்த குறைபாடுகளை அவர்கள் திருத்த முயன்றார்கள். இலகு மொழியிலே மக்கள் புரிந்து கொண்டு செயற்பட கருத்துக்களை வழங்கினார்கள்.

ஒளவை வாழ்ந்த கால கட்டத்தில் தாசி பரம்பரையைச் சேர்ந்த பெண்களே கல்வி அறிவில் சிறந்து விளங்கினார்கள். கல்வி கற்கும் உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. இவர்களே அரசனது நம்பிக்கையையும் பெற்றிருந்தனர். அரசனின் ஆசை நாயகிகளாகவும் இவர்கள் இருந்தனர். இதனாலே இவர் அரசனுக்காகத் தூதும் போய் இருக்கலாம். அதனால் போலும் தமிழ் நாட்டில் இருக்கும் ஒளவையார் சிலைகளும் இள நங்கையாகவே படைக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் வந்தவர்கள் ஒளவையாரை அறிவில் உயர்ந்தவர், மன்னனுக்காகப் பல காரியங்களைச் செய்தவர் என்னும் போது அவர் தாசி பரம்பரையை சேர்ந்த இள நங்கையாகக் காட்டாது; மூதாட்டியாகப் படைக்க முற்பட்டனர்.

அதாவது,  அவர் இளநங்கையாக இருந்த போதும்  பிற்காலத்தோர் தமது கருத்தை நிலை நாட்ட; மேலும் ஒளவையார் ஒரு தாசி என்பதை மறைக்க; அவரை ஒரு மூதாட்டியாகப் படைத்ததாகவே இன்றய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஒளவையாரும் இளநங்கையாக வாழ்ந்து வயோதிபராகி இருப்பார். இப்படி எண்ணி இவர்கள் ஒளவையாரை மூதாட்டியாக்கி இருக்கவும் கூடும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 3.2.2005 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )

Saturday, January 05, 2019

பரதம்: நம் பாரம்பரிய நடன வடிவம்

இன்று நாம் காணும் பரதம் அன்று கோயில்களிலே ஆடப்பட்டது. ஆகம விதிப்படி நடைபெறும் கோயில் பூஜைகளிலே நர்த்தகியானவளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆடலும் இசையும் அற்ற பூஜைகள் அன்றய காலங்களில் கோயில்களிலே நடைபெறவில்லை. ஆகம விதிகள் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் பூஜைகள் பற்றி விரிவாக விளக்கும். இவ் ஆகமங்களில் ’சோடோப உபசாரம்’ என இசையும் ஆடலும் விபரிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு தெய்வங்களுக்கு, வெவ்வேறு வகையான இராகங்களில், தாள வேறுபாடுகளில் ஆட வேண்டியது நர்த்தகியின் கடமை. நர்த்தகியானவள் கோயில் வழிபாட்டு முறையை அறிந்து அதற்கேற்ற நடன முறையில் தேர்ச்சி பெற்றிருப்பாள். நாள் தோறும் வழிபாட்டு முடிவிலும் விழாக்காலங்களிலும் நர்த்தகியானவள் கும்பாலாத்தி எடுத்தல், சாமரம் வீசுதல், சுவாமி திருஉலா வரும் போது சந்நிதி முன் நடனம் புரிதல் போன்றவை நர்த்தகியின் கடமைகளாகவும் விதிகளாகவும் இருந்தன.

சிவாலயங்களில் நடைபெறும் நடனங்கள் வீரம், வேகம், கம்பீரம் கொண்டவையாக இருக்கும். நாராயணன் கோயிலில் நடைபெறும் நடனங்களிலே நளினமும் மென்மையும் மேலோங்கி இருக்கும்.

இந்த நடனங்களைப் புரியும் நர்த்தகிக்கு நடனப் பயிற்சி ஐந்து வயதில் ஆரம்பமாகும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்றொரு பழமொழி உண்டு. இது இந்த நாட்டியத்தை ஆடிய தேவதாசிகளுக்காகத் தோன்றியதாக இருக்குமோ?

இனி, இவளது நாட்டியாரம்பம் எப்படி நடைபெறுகின்றது என்று பார்ப்போமா? சிறந்த ஒரு நன் நாளில் ஆசிரியர் ( குரு) வின் வீட்டுக் கூடத்தில் கோலமிடப்பட்டு தாமரைக் கோலத்தின் நடுவிலே கலசம் வைத்து பூஜை செய்வார்கள். சந்தனம் வெற்றிலை பாக்கு, ஐந்து வகையான பழங்கள், ஐந்து வகையான மலர்கள், நறுமணப் பொருட்கள்முதலியவற்றைக் கொண்டு மரபு முறைப்படி பூஜைகள் நடைபெறும். பிறகு அறுகோணமுளள கோலத்தில் அரிசியை அல்லது நெல்லை சதுரமாகப் பரப்புவார்கள். குளித்து, புத்தாடை அணிந்த சிறுமியை பரப்பியுள்ள நெல் அல்லது அரிசியின் மேல் சம அடி வைத்து நிற்க வைத்து, நட்டுவ ஆசிரியர் ’தெய்யா, தெய்’ என முதல் பாடத்தை ஆரம்பிப்பார். இது ஆரம்ப நாள்.

இதைத் தொடர்ந்து தினமும் அச் சிறுமியை குப்புறப் படுக்க வைத்து புயம், முழங்கை, விலாப்பகுதி, இடுப்பு, முழங்கால் இணைப்புகள், பாதம் எல்லாவற்றுக்கும் மூலிகை மருந்துகள் இட்டு காய்ச்சிய எண்ணையால் மசாஜ் செய்யப்படும். ஒரு மனி நேரம் மசாஜ் செய்த பின் நடனத்துக்கு வேண்டிய அப்பியாசம் சொல்லிக் கொடுக்கப்படும். பின் மூச்சைச் சாந்தப்படுத்தும் பிரணாயாமம் கற்றுக் கொடுக்கப்படும்.

இன்று இந்த தாசி குலத்தினர் பெரும்பாலும் ஆடாத நிலையில்; இந்த எண்ணை மசாஜ் அப்பியாசம் யாவும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதை மனதில் வைத்து எனது மாணவிகளுக்குக் கட்டாயமாக நாட்டியத்திற்கான உடற்பயிற்சிகளைச் செய்வித்து வருகிறேன்.யான் கற்ற யோகப் பயிற்சியும் அதற்கு எனக்கு உதவுகிறது. இதனாலே எனது மாணவிகள் நாகநிருத்தியம் போன்ற கடினமான ஆடல்களை இலகுவாக ஆட முடிகிறது. இந்த அப்பியாசத்தின் அவசியத்தைப் பலர் உணராதது கவலைக்கிடமான ஒன்றே.

இவரது பயிற்சி, நாட்டியம் ஆடுவதற்கான அடவுகள், முத்திரைகள், தாளங்கள் எனப் பலவாறாக விரிவடையும். இன்று போல வாரம் ஒன்றோ இரண்டோ மணி நேர வகுப்பு என்பது இல்லை. தினமும் காலையும் மாலையும் பயிற்சிகள் நடைபெறும். இதனை நட்டுவனார் வீடுகளில் காண்பது வழமை. யான் குருகுல முறையில் நட்டுவனார் வீட்டில் இருந்து கற்றுக் கொண்டதால் பல விஷயங்களை அறிய முடிந்தது. 

நர்த்தகி இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். வாத்தியங்கள் இசைப்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். கோயில்களிலே பூசையின் போதும்;  கீதங்களுக்குத் தக்க அபிநயம் செய்யும் போதும்; மலர் அஞ்சலி, அர்ப்பணம் செய்யும் போதும்; நர்த்தகி தானே பாடி ஆட வேண்டும்.

இவள் பாடலின் அர்த்தங்களைப் புரிந்து ஆடல் வேண்டும். அதனால் இவள் வடமொழி அதாவது சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவஞ்சி அவள் கற்றுக் கொள்ளும் வெவ்வேறு வகையான நடனங்களை இங்கு விபரிக்காது விடுகிறேன்.

இத்தகைய பயிற்சி 6 முதல் 12 வருடங்கள் வரை நடைபெறும். பயிற்சி முடிந்ததும் ஒரு நன்நாளில் கோயில் குருக்கள் நர்த்தகிக்கு முறைப்படி சங்கு சக்கர முத்திரைகளை அணிவிப்பார். அன்று முதல் அவள் கோயில் வழிபாட்டில் நாட்டியம் செய்யும் தகுதியைப் பெற்றவளாவாள். இத்தகையை தகுதியைப் பெற்றவுடன் நர்த்தகியின் கல்வி முடிந்து விடுவதில்லை. அவள் மேலும் திறமை மிக்க நர்த்தகி ஆவதற்கான பயிற்சி தொடரும்.

எமது பாரம்பரிய நாட்டியத்தை அழகுற விளக்குவது சிலப்பதிகாரம் என்ற தமிழ் காப்பியம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையிலே மாதவி என்ற ஆடல் நங்கையின் அரங்கேற்றம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு நாட்டிய நங்கைக்கு ஐந்து வயது தொடக்கம் 12 வயது வரைக்குமான ஏழு வருடங்கள் பயிற்சி நடந்ததாகக் கூறப்படுள்ளது.

மாதவியின் அரங்கேற்றம் அரசனின் முன்னிலையில் நடைபெற்றது. அரசவையிலே அரங்கேற்றம் நடைபெற்றதும் நாட்டியம் ஆடிய நங்கைக்கு பொன்னும் மணிகளும் பரிசாக வழங்கப்பட்டன. ‘தலைக்கோல்’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. இந்தத் ’தலைக்கோல்’ என்பது ஏழு சாண் நீளம் கொண்டதாகும். இது மூங்கிலால் செய்யப்பட்டுக் கணுக்கள் தோறும் நவரத்தின மணிகள் பதிக்கப்பட்டிருக்கும். இடையிடையே பொன் கட்டு இடப்பட்டிருக்கும்.

இந்திரவிழாவின் துவக்கத்திலே தலைக்கோலுக்கு பூஜை நடைபெறும்.  அக் கோலைப் பட்டத்து யானையின் துதிக்கையிலே கொடுத்து அரசனும் மற்றய பிரதானிகளும் சூழ அது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேர் மேல் நிற்கும் ஆடல் ஆசானிடம் கையளிக்கப்படும். ஆடல் ஆசான் அதைப் பெற்று, வலம் வந்து, அதை அரங்கில் வைப்பான். அத்தகைய கோலைப் பெற்ற நாட்டியக் காரி ‘தலைக்கோலி’ எனப்பட்டாள். நட்டுவனார் ’தலைக்கோல் ஆசான்’ என பட்டம் பெறுவார்.

அன்றய எமது தமிழர்களின் வாழ்விலே நாட்டியம் வகித்த உன்னத இடத்தைக் கண்டோம். கோயில்களிலே வழிபாட்டு முறையாகவும், அரச சபைகளிலே தேர்ந்த கலையாகவும் இந்த நாட்டியம் விளங்கியது. இத்தகைய ஆடலின் பரிநாமமே இன்று நாம் காணும் பரத நாட்டியம் என்ற ஆடல் முறையாகும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 14.6.2005 அன்று ஒலிபரப்பாகியது )