நாம் இங்கு வெளி நாட்டில் வாழ்கிறோம். அவர்களின் பண்பாடு எம்மில் இருந்து வேறுபட்டது. இவர்கள் தம்மிலும் வயது கூடியோரைப் பார்த்து எவ்வித தயக்கமும் இன்றி அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். ஒரு 6 வயதுப் பையன் 60 வயது உளளவரைப் பார்த்து ‘ஜோன்’ என அழைப்பது சகஜம்.
எமது வீட்டுக் குழந்தைகளோ அப்படி அல்லாமல் அவரைத் ’தாத்தா’ என்று கூப்பிடுவார்கள். இது எமது பண்பு. பழக்க வழக்கமும் கூட. பெரியோரைப் பெயர் சொல்லி அழைப்பது அவரை மதியாதது போல எம் பண்பாட்டில் கருதப்படும். வயதுக்கேற்ப அக்கா, அண்ணா, மாமா, மாமி, பாட்டா, பாட்டி இப்படி ஒரு உறவு முறையில் அழைப்பது தான் நம் வழமை. மக்களின் பண்பாட்டிலே அவர்களின் பழக்கவழக்கங்களிலே இந்தப் பெயர்கள் படும் பாடு பெரிய பாடு.
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு ’நாமகரணம்’ அதாவது பெயர் சூட்டுகிறோம். ஆனால் அந்தப் பெயர்களோ சில சமயம் வசதிக்காகக் குறுக்கப்படுகிறது. மோகன சுந்தரம் மோகன் என்றோ சுந்தரமாகவோ ஆகி பின்பு சுந் ஆகவோ சுந்தா வாகவோ மாறுகிறது. இது வெகு சகஜம்.
சிலர் இறைவனின் பெயரைக் குழந்தைக்கு வைத்தால் குழந்தையின் பெயரைப் பல முறை அழைப்போம். குழந்தைக்கு ராமா அல்லது கிருஷ்னா எனப் பெயரிட்டால் ராமஜபம் ஆயிரம் தரம் பண்ண நேரம் கிடையாது, அதனால் இப்படிப் பெயர் வைப்பதால் இறைவனின் பெயரை அடிக்கடி கூறிக்கொள்ளலாம் என்பார்கள்.
ஒரே பெயரில் இருவர் இருந்து விட்டால் அதாவது குமார் என இருவர் இருந்து விட்டால் அவர்களைக் குறிக்கும் போது அவர்களின் அங்க அடையாளங்களோடு அவர்கள் பெயர் குறிக்கப்படும். கட்டை அல்லது குண்டு குமார், அல்லது நெட்டை, மொட்டை குமார் என சகஜமாக அழைப்பர். பாடசாலைகளிலோ எனில் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான பட்டப்பெயர்கள் அமைந்து விடும்.
சங்கீத உலகத்திலே தமது பெயருடன் தமது ஊர் பெயரையும் இணைக்கும் வழக்கம் உண்டு. மகாராஜபுரம் சந்தானம், செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர், வழுவூர் இராமையாபிள்ளை... என அவை அமையும். ஆனால் இப்படியான மகா வித்துவான்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவர்களைப் பற்றிப் பேசுவோர் மரியாதை கருதி அவரின் பெயரைக் கூறாது செம்மாங்குடி அவர்கள், வழுவூரார் அவர்கள் எனக் கூறுவது வழமை. இதன் மூலம் இந்த மகான்களைப் பெற்றெடுத்த ஊர்கள் பெருமை பெறுகின்றன. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் பெருமைப்படுவதைக் கண்டிருக்கிறோம். இங்கோ ஊர் அல்லவா பெருமைப்படுத்தப் படுகிறது!
ஆர்.கே.நாராயணன் என்ற எழுத்தாளர் இந்தியாவின் பண்பாடு அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆங்கிலத்தில் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் படைப்பதில் வல்லவர். ஒரு முறை இவர் தனது வேலையாளைத் தலைவனாக வைத்துக் கதை ஒன்று எழுதி இருந்தார். ஆர்.கே.நாராயணன் வீட்டு வாசலிலே அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெங்கலப் பெயர் பட்டயம் வாசலில் பதிக்கப்பட்டிருந்ததாம். படிப்பு வாசனையறற வேலையாளுக்கு அது என்ன என்பது புரியவில்லை. ஒரு நாள் அவ் வழியே சென்ற பள்ளிச் சிறுவர்கள் அந்தப் பெயரை உரத்து வாசித்தார்களாம். தனது எஜமானனின் பெயரை அவர்கள் உரத்து வாசித்ததை பொறுக்க முடியாத வேலையாள் அவர்களைத் துரத்தி விட்டான். இந்த விஷமக்கார பையன்களோ மறுநாள் திரும்பவும் வந்து ஆர்.கே. நாராயணன் என்ற பெயரை உரக்க வாசித்துள்ளார்கள்.
இதைப்பொறுக்காத வேலையாள் அந்தப் பெயர் இருந்த தகட்டையே பெயர்த்தெடுத்து கொண்டு சென்று, எஜமானனிடம் காட்டி, இது அங்கு இருந்ததால் உங்கள் பெயரைக் கண்ட கண்ட பயல்கள் எல்லாம் சொல்லுகிறார்கள். அதனால் அதைப் பெயர்த்தெடுத்து கொண்டுவந்து விட்டேன்; அது அங்கே இருக்க வேண்டாம் என்றானாம். இதனை எழுதி விட்டு ஆர்.கே. நாராயணன் கூறுகிறார், ’இந்த உலகில் தனது பெயர் எங்கெங்கெல்லாமோ வர வேண்டும் என்று எத்தனை பேர் ஆசைப்படுகிரார்கள்! இந்த அப்பாவியோ இப்படி எண்ணுகிறான்’ எனத் தனக்கே உரித்தான ஹாஷ்ய பாஷையில் கூறுகிறார்.
அந்தக் காலத்து மனைவியர் கனவனின் பெயரை வாய் தவறியும் கூறி விட மாட்டார்கள். இதைச் சில பாட்டிகளிடம் இன்றளவும் காணலாம். Railway station இல் Ticket வாங்கப் போய் நிற்பார்கள். சிதம்பரத்துக்கோ அல்லது பழனிக்கோ அவர்கள் போக வேண்டி இருக்கும், கணவர் பெயர் சிதம்பரம் என்று வைத்தால் பாட்டி, ‘சாமி ஊருக்கு றிக்கற் கொடு’ என்பார். அதிகாரியும் ‘பெரியசாமியா? சின்னச் சாமியா?’ என்பார். பெரிய சாமி என்ரால் சிதம்பரம். சின்னச் சாமி என்றால் பழனி.
நாடோடி மக்களாக இருந்தவர்கள் குறவர். இவர்களைச் சென்னையில் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆங்காங்கே காணலாம். கிளி சாஸ்திரம் சொல்வது, மணிமாலைகள் விற்பது இவர்களின் தொழில். குழந்தை எந்த ஊரில் பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரைத் தம் குழந்தைக்கு வைத்து விடுவது அவர்கள் வழக்கம்,. இதனால் இவர்களின் பெயர் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, மயிலாடுதுறை, குன்றத்தூர் என்றவாறாக இருக்கும்.
வேறு சில ஆதி வாசிகளோவெனில் அமாவாசையில் குழந்தை பிறந்தால் அமாவாசை எனவும்; பெளர்னமியில் பிறந்தால் நிலவு எனவும் பெயர் வைப்பார்கள்.
எம்மவர்களோ குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரை பிள்ளைக்குச் சூட்டுவதும் வழக்கம்.ரோகினி, சுவாதி, விசாகன், அஷிவினி, பரணி போன்ற பெயர்கள் இன்றும் வழக்கத்திலும் புழக்கத்திலும் உள்ளன. குழந்தைக்குப் பேரன் பேத்திகளின் பெயரை வைப்பதும் மரபு. அதனால் தான் போலும்பேரர் என அழைக்கப்பட்டார்கள்!
இங்கு இந்த நாட்டில் ஒரு பெண் தனது Middle name பன்றி எனக் கூறிச் சிரித்தார். மும்பொரு காலத்தில் எத்தனை பன்றி வைத்திருக்கிறார்களோ அதை வைத்தே அவர்களின் செல்வம் மதிக்கப்பட்டது. பன்றி செல்வத்தின் அறிகுறியாக அன்றய நாட்களில் இருந்தது. அதனால் பன்றி எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும்! நாம் தான்யா, தானியலக்ஷ்மி எனப் பெயரிடுவதில்லையா? அது மாதிரி!.
பிரபல நாடக ஆசிரியார் Shake Spair . shake என்றால் சுழட்டுவது. Spair என்றால் ஈட்டி. அந்தக் காலத்து ஆங்கிலேயர் அரச செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்பவன் அரச பட்டயம் தாங்கிய ஈட்டியை சுழட்டிக் கொண்டு சென்று செய்தியை மக்களிடம் சொல்வானாம். இந்தத் தொழில் பெயரே நாடகாஆசிரியர் ஷேக்ஷ்பியரின் குடும்பப் பெயராயிற்று.
இன்று எம்மவர் Family Name ஐ வைத்துக் கொள்வதை நாகரிகமாகக் கருதி தமது தந்தையாரின் பெயரை பிள்ளைகள் வைத்துள்ளார்கள். இது ஒரு மேற்கத்திய நாகரிகத்தை பின்பற்றிய செயலே. அதற்கு மேலும் சிலர் சென்று தமது பிள்லைகளுக்கு தமிழ் பெயருடன் மேற்கத்தியப் பெயரையும் சூட்டி விடுகிறார்கள். மேற்கத்திய நாட்டில் வளரப்போகும் பிள்ளை தமிழ் பெயரைச் சொல்ல கேட்கும் ஆங்கிலேயர் அதைத் தவறாகக் கூறாமல் இருக்கட்டுமே! அதனால் ஒரு மேற்கத்திய நாமம்.
காலத்திற்கேற்ப, வாழும் இடத்திற்கேற்ப எமது கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமே இது. எனது மகனுக்கு அமிழ்தன் எனப் பெயரிட்டோம். பலர் அழகான பெயர் என்றார்கள். அவன் Scotland இல் படித்த போது Scotland பிரபல கவிஞர் Hamilton என அவனை ஆசிரியர் அழைத்தார். அதைத் தொடர்ந்து வகுப்புச் சிறுவர்களும் அவனை அவ்வாறே அழைத்தனர்.
இந்தியாவின் வட புறத்தில் உள்ள Rookie University யிலும் அங்குள்ள மாணவர்களுக்கு அவனை அமிழ்தன் எனக் கூற முடியவில்லை. அங்கும் அமிழ்தன் மில்ரன் ஆனான். ’Is Milton there' என தொலைபேசி அழைப்பு வரும் பொழுதே எனது மகன் மில்ரன் ஆனதைத் தெரிந்து கொண்டேன். Milton உம் பிரபல ஆங்கிலக் கவிஞரே. இது இந்திய மாணவருக்குப் பழக்கப்பட்ட பெயர்.
பின் நாளின் Company யில் அவன் வேலை பார்த்த போது Kanesar Amilthan என்ற பெயரைக் குறுக்கி Kam.என ஆனான். அது Kanesar இலிருந்து Ka யும் Amilthan இலிருந்து Am உம் சேர்ந்து Kam ஆனது. அது இங்கு மிக வசதியாகி விட்டது. ஆனால் சில சமயம் 'kam here'எனத் தொலைபேசியில் கூறினால் மறுபக்கத்தில் உள்ள சீனப் பேர்வழி சீனன் என எண்ணித் தனது மொழியில் பேசத்தொடங்கி விடுவாராம்.
இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கும் நிறைய ஏற்பட்டிருக்குமே!
( இக்கட்டுரை 19.11.2005இல் ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )
No comments:
Post a Comment