Monday, December 31, 2018

Happy New Year


வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க; பட்டாசு பட படக்க; புத்தாடை மினு மினுக்க; கண்ணாடி டம்லர்கள் டிங் டிங் எனச் சிணுங்க; மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்க Happy New year வாழ்த்துக்கள்; கட்டித் தழுவல்கள்; ஆசை முத்தங்களோடு Happy New Year!

 ஓ...2019 பிறந்து விட்டது.

Happy New Year!

பிறக்கும் புதிய ஆண்டு மகிழ்ச்சியாக அமைய வேண்டும். வருடம் பூரா மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பது தான் எம் எல்லோரது ஆசையும். அப்போ மகிழ்ச்சி தானே வந்து விடுமா? அல்லது நாமாக அதை அடைய உழைக்க வேண்டுமா? சந்தேகம் எழ, மனோதத்துவ நிபுணர் தான் என்ன சொல்லுகிறார் எனப் பார்த்தேன்.

Happiness - A Psychiatric Education என Journal of medical Ethics கூறுகிறது. மகிழ்வு ஒரு மனோ நிலை. அதனால், எமக்கு அது வரவேண்டும் என வாழ்த்துகிறோம்.

மக்களை , நீங்கள் எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள் எனக் கேட்டால், நான் பணக்காரனானதும் சந்தோஷமாக இருப்பேன்’, ’எனக்கு நல்ல வேலை கிடைத்ததும் சந்தோஷமாக இருப்பேன்’, ’எனது பிள்ளை படித்து நல்லாக வந்தால் எனக்கு சந்தோஷம்’ இவைதான் பெரும்பாலான பதில்களாக இருக்கும்.

அப்போ நாங்கள் இந்தக் கணம் சந்தோஷமாக இல்லையா? எல்லோரும் ஆரவாரித்து வாழ்த்துத் தெரிவித்த போது சந்தோஷம் வரவில்லையா? ஓ... இப்போ தெரிகிறது எமக்கு மேலே கூறிய அத்தனையையும் பற்றிய எண்ணம். இப்போ ஒத்துக் கொள்ள முடிகிறது எமக்கு சந்தோஷம் வர மேற்கூறியவைகள் எமக்குத் தேவை இல்லை. மாறாக நாமே தான் அவ்வாறு ஒரு கற்பனையைப் பண்ணிக் கொள்ளுகிறோம். சந்தோஷத்திற்கும் கையிருப்புக்கும் சம்பந்தம் கிடையாது. சந்தோஷம் ஒரு மன நிலை தான். நமக்குப் பிடித்ததை முழு மனதுடம் அனுபவித்துச் செய்யும் போது சந்தோஷம் தானே வரும்.

சந்தோஷத்திற்குக் குந்தகமாக இருப்பது கவலை. இதுவும் ஒரு மனோ நிலை தான். இந்த மனோ நிலை எப்போ எற்படுகிறது? ‘ஐயோ நான் கஸ்ரப்படுகிறேன் என தன்னிலே தான் பச்சாதாபப் படும் போது’ இந்தக் கவலை என்ற உணர்ச்சியை நாம் உணர்கிறோம். அதற்குத் தான் மகான்கள் எல்லோருமே ‘சேவை செய்யுங்கள்; உங்களிலும் அதிகம் கஸ்ரப்படுபவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்கள். அதன் மூலம் ஓர் ஏகாந்த; விபரிக்கவொண்ணா அமைதியை  அறிவீர்கள் என்கிறார்கள்.

கூடவே புது வருஷ சங்கல்பம் - Resolution -  எடுப்பது இந் நாளில் சகஜம். அது காற்றுடன் பறப்பதும் சகஜம். இவ்வருடம் நான் 4 கிலோ எடை குறைப்பேன்; புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுவேன்; இவ்வாறாக அது தொடரும். ஆனால் இந்த சங்கல்பங்கள் எல்லாவற்றுக்கும் எடுக்கப்படும் சங்கற்பம் மட்டும் போதாது. அதற்கு உழைக்கவும் வேண்டும். உழைப்பதற்குத் திட்டம் வேண்டும்; திட்டத்தை அமுல் படுத்த, அதை நெறிப்படுத்த, அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதனை செயற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், நாம் எல்லோரும் செய்யும் இன்னொரு விடயம் திட்டங்கள் எல்லாம் போட்டு வருட இறுதி  வரும் போது, ‘ஓ... இந்த வருடம் எத்தனை வேகமாகப் போய் விட்டது!’ என்கிறோம். பூமி வெகு வேகமாக உருள அது என்ன கிறிக்கெற் பந்தா? எல்லோருக்குமே 24 மணி நேரங்கள் மட்டுமே தான் உண்டு. சாதனையாளர்கள் அவற்றைத் திட்டமிட்டு பயன் படுத்துகிறார்கள். மற்ற வேதனையாளர்கள் நேரத்துடன் இணைந்து அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

2019 எவ்வாறு அமைய வேண்டும் என்பது எம் கையில் தான். வாழ்த்துக்கள் எல்லாம் வருட ஆரம்பத்தில் தான். அதன் பின் எவ்வாறு வருடத்தைக் கொண்டுநடத்த வேண்டும்? அவை எல்லாம் நம் கையில் தான். ஓ... மறந்து விட்டேன்.

"HAPPY NEW YEAR TO YOU"

பழக்க தோஷத்தால் வாயிலே ஆங்கில மொழியிலே வாழ்த்தும் சம்பிருதாயம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. இப்போது தமிழிலே சொல்கிறேன்.

“ புதுவருஷ வாழ்த்துக்கள்”

நண்பர்களே! உங்களிலே எனக்கு அக்கறை உண்டு. அதனாலே புது வருட வாழ்த்தைக் கூறி விடைபெற விரும்பவில்லை. வருடம் பூரா சிறப்பாக அமைய உழைப்போம் எனக்கூறி விடைபெறுவது கார்த்திகா கணேசர்.

( இப் பதிவு விஷேசமாக இன்றய புது வருட நாளுக்காக எழுதியது. 29.12.18)

Saturday, December 29, 2018

ஆணும் பெண்ணும் உரிமைகளும்


சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கிலே பெண் வகித்த பங்குகள் பல. வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கால மனித இனம் பெண்ணைத் தலைமையாகக் கொண்டு வாழ்ந்த இனக்குழுக்களாக வாழ்ந்ததைக் காண்கிறோம்.

இங்கு பெண் தலைவியானதற்குக் காரணம் ஆணால் பெற முடியாத இன்னொரு மனிதனை தன்னுள் வளர்த்து வெளிக்கொணர்பவள் பெண் என்பதனாலாகும். அன்று இருந்த மனித சிந்தனை வளர்ச்சியில் இவ்வாறு தான் பெண் இனம் போற்றப்பட்டது.

இனக்குழுக்களுக்கு மனித சக்தி வேண்டி இருந்தது. நோய் மற்றும் மிருகங்களின் தாக்குதலால் இலகுவில் மனிதன் இறந்து விடும் நிலை அன்று இருந்தது. இதனால் பெரிய கூட்டம் ஒன்று தம்மைப் பெருப்பிக்கவும் பாதுகாக்கவும் வேண்டி இருந்தது. இதனால் மனிதனைப் பெற்றுத் தரும் பெண் போற்றப்பட்டாள். தலைவியும் ஆனாள்.

காலத்தின் ஓட்டத்திலே; மனித சமுதாய வளர்ச்சியிலே; இனப்பெருக்கத்தில் ஆணின் பங்கு என்ன என்பதை மனிதன் புரிய ஆரம்பித்தான். இனக்குழுவாக வாழ்ந்த வாழ்க்கையும் மாறத்தொடங்கியது. இனக்குழு உயிர்வாழ சேர்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. ஆனால் நிலையாக வாழத்தொடங்கிய மனிதன் நிலத்தில் உரிமை கொண்டான். இது எனது; எனக்கே உரியது; எனக்கே சொந்தமானது என்ற சிந்தனை வளர, தனக்குப் பிறந்த பிள்ளைகளே தனது வாரிசு மற்றவர்களுக்குப் பிறக்கும் பிள்ளை மாற்றானது, இதன் காரணமாகப் பிள்ளையைப் பெற்றுத் தரும் பெண் தனக்கு உரியவளாக வேண்டும். மனிதனை மனிதன் அடக்கி ஆள வேண்டும் என்ற சிந்தனை முளை விட்டது. அந்தச் சிந்தனையின் அமுலாக்கம் முதலில்  பெண்ணை அடக்குவதில் தான் ஏற்பட்டது. பெண்ணைத் தனக்கு மட்டும் சொந்தமாக்குவதற்கு தோன்றியதே ஆண் ஆதிக்க அடக்கு முறை.

பெண் தலைவியான வாழ்வு போய், பெண் ஒருவனுக்கு மட்டும் உரியவள் என்ற எண்ணம் வளர்ந்தது. அவளின் அழகு, வசீகரம் அத்தனையும் அவனுக்குச் சொந்தமானது. பிறனின் கண்ணில் அவள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பர்தாவால் மறைக்கப்படும் கொடுமையை நாம் இன்றுவரைக் காண்கிறோம். ஆனால் ஆணோ பல தார மணம் செய்து கொள்ளச் சமூகம் அனுமதித்தது. பெண்ணுக்கு மட்டும் கற்பு நிலை என்ற சிந்தனை பரப்பப் பட்டது.

’தெய்வம் தொளாஅள், கொழுநன் தொழுது எழுவாள்
‘பெய்’ என, பெய்யும் மழை’ (55)

இப்படிக் கூடக் கூறப்பட்டது. இது பெண்ணை அடிமைப்படுத்த தீட்டிய அழகிய ஆதாரங்களில் ஒன்று.

எமது வரலாற்றிலே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பயங்கரமான கொடுமை என்னவென்றால் அது கணவன் இறந்து, அவனது உடலை எரிக்கும் போது, அதனுடன் சேர்ந்து அவனது மனைவியையும் எரிப்பது. அவன் மேல் கொண்ட காதலால் அவனுடன் தன் உயிரையும் மாய்ப்பது என்று இதற்கு விளக்கம்  கூறிய போதும்; உண்மை இதற்கு மாறுபட்டதாகவே இருந்தது. வலுக்கட்டாயமாக அவள் கொலை செய்யப்பட்டாள். அதுவும் மதத்தின் பெயரால் தர்மம் என்ற அடைமொழியின் பெயரால் அது நடந்தது.

அவ்வாறு செய்யாமல் பிற்காலத்தில் இருந்த பெண்கள் கனவனை இழந்ததன் அடையாளமாக மொட்டை அடிக்கப்பட்டு அவளின் அழகைச் சீரழித்து வைத்திருந்தார்கள். அது அவள் யாருக்கும் அழகாக இருந்து விடக் கூடாது என்பதற்காகச், சம்பிருதாயம் எனற பெயரில் நடந்தது. இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மொட்டைப் பாட்டிகளைக் காணலாம். ஆனாலும் இப்பொழுது விதவையான இளம் பெண்கள் மறுமணம் செய்து புதிய வாழ்வில் புகுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே.

இவ்வாறாக உடன் கட்டை ஏறும் நிலையில் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்த வாழ்க்கை ஒன்று சமூகத்தால் அவள் மேல் திணிக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணம் அவள் ஓர் ஆணின் விந்தை சுமந்து கருத்தரித்து பிள்ளையைப் பெற்றெடுப்பவள் என்பதே.

வேத உபநிடதங்களிலே பெண் என்பவள் ஆணின் விந்தைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் ஓர் உயிர் என்ற அளவுக்குத் தான் பெண்ணுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. அவளுக்கு ஜாதியும் கிடையாது; குலமும் கிடையாது என்கிறது அது. அவளால் பெற்றெடுக்கப்படும் ஆண் குழந்தையே தகப்பனின் வாரிசு. அவனே தகப்பனுக்கு அந்திமக் கிரியை செய்ய முடியும்.

இதைப் பின்னணியாக வைத்து ஜெயக்காந்தன் ஒரு கதை எழுதி இருந்தார். கதையின் சாரம் இது தான். தனது சொந்த மனைவி மூலம் ஒருவருக்குப் பெண் குழந்தைகள் மாத்திரமே உண்டு. பெண் குழந்தைகளை மட்டும் வாரிசாக பெற்ற பிராமனன் தனக்கு ஒரு தாசி மூலம் பிறந்த ஆண் மகனுக்கு பூனூல் சடங்கு செய்து வைக்கிறான். இதை அவனது பிராமன சமூகம் எதிர்க்கிறது. ஆனால் அந்த வேதங்களை மெத்தப்படித்த பிராமணனோ வேதங்களை ஆதாரம் காட்டி தான் செய்தது தவறு அல்ல என்று வாதாடுகிறார். தனது அந்திமக் கிரியை செய்ய ஆண் வாரிசு வேண்டும். அவன் பிராமனனாக இருக்க வேண்டும். அதற்காகவே அவனுக்குப் பூனூல் சடங்கு செய்கிறான். ஆமாம் பிராமண சமூகத்திலே பூனூல் போடாதவன், அதாவது, பிராமணன் ஆக்கப் படாதவன் சிரார்த்தம் செய்ய முடியாது.

எமது பிராமண குலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அகாலமாக மரணமடைந்தார். அவர் பிராமன சம்பிருதாயங்களை வெறுப்பவர். மகனுக்கு அப்பொழுது வயது 18. தகப்பனார், மகனுக்குப் பூனூல் சடங்கு தேவை இல்லை என எண்ணி அவனுக்குப் பூனூல் போடவில்லை. அதன் காரணமாக அவரது மரணச் சடங்கை நடத்த அவரது மகன் அனுமதிக்கப்படவில்லை. தந்தையின் தம்பியே கிரியைகளைச் செய்தார். பையன் சித்தப்பாவிற்குப் பின்னால் ஒரு தடியை ஒரு பக்கம் பிடிக்க,  தடியின் மறு முனையை  பிடித்துக் கொண்டு சித்தப்பா சகல காரியங்களையும் செய்தார். இப்படியாகச் செய்வது பையனுக்காகச் சித்தப்பா கிரியை செய்வது ஆகுமாம். வைதீக பிராமணர் என்பதால் பூனூல் அனியாத பையன் சிரார்த்தம் செய்ய முடியாது எனத் தடுத்து விட்டனர் சுற்றத்தார். தந்தையின் அருமை மகனால் வளர்ந்த பையனுக்கு இந்த நிலை ஏற்பட்டதை கண்டு கலங்குகிறோம். இங்கு நாம் ஜெயக்காந்தன் எழுதிய கதையின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டோம்.

பெண் என்பவள் தந்தையின் வாரிசு இல்லை என்பதை பிராமணர் அல்லாத மற்றச் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. பெண் தந்தைக்கு அந்திமக் கிரியை செய்வது கிடையாது. அது மட்டுமா? பெற்ற தந்தை இறந்தால் துடக்குக் காக்கும் வழமை கூட அவளுக்குக் கிடையாது. கணவன் வீட்டு விவகாரங்களே இனி அவளது. தாரை வார்த்து ஒரு பெண்ணைக் கொடுத்து விட்டால் கை கழுவி விட்டோம் என்பதா? இவ்வாறான ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது தான் எம் சமூகம்.

அண்மையிலே ஒரு ஹிந்திப்படம் Provoked என்ற பெயரில் வந்தது. இது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Kiranjit. Ahluwalia என்ற உண்மையான பெண்ணின் கதையே அது. இவர் திருமனமாகிக் கணவனுடன் லண்டன் போய் விட்டார். அவரது கணவர் தொடர்ந்து அவளை பல வகையாகக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பொறுமையை இழந்த Kiranjit கோபாவேசத்தில் அவளது கணவரைத் தீ மூட்டி எரித்து விடுகிறாள். பிரித்தானிய அரசு இவள் செய்தது கொலை எனத் தீர்ப்பு வழங்கியது.

ஆமாம், இப்படி எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்? மனைவி என்பவள் தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வந்தவள் என்பதைப் புரியாத ஆண்களை இன்றும் சமூகத்தில் காணலாம். மனிதாபிமானம் அற்ற ஆண்களிடம் பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இம்சைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எதோச்சதிகாரம் கொண்ட கணவனிடம் வாழ்க்கை முழுவதும் அல்லல் படும் பெண்களின் வாழ்வு இன்றும் சமூகத்தில் நடைபெறும் ஒன்றே.

ஆண்கள், பெண்ணை இம்சிக்கும் போது ஆத்திரம் கொண்டு பெண்ணை அடிக்கவும் உதைக்கவும் செய்வார்கள். இதனால் ஏற்படும் காயங்கள் வெளிப்படையாகத் தெரிபவை. இதற்கான சிகிச்சைக்கு வைத்திய நிலையம் வரை போக வேண்டி உள்ளது. இந்த நிலை பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

இது ஒருவழிப்பாதையா? அல்லது இரு வழிப்பாதையா? அதாவது பெண்கள் மட்டும் ஆண்களிடம் இம்சைப்படுகிறார்களா ஆல்லதுஆண்களும் பெண்களிடம் இம்சைப்படுகிறார்களா? என்ன? இதைக் கேட்டதும் சிரிக்கிறீர்களா? என்ன, ஒரு பெண் ஆணை இம்சைப்படுத்துவதா? அது முடிகிறா காரியமா? உடல் பலத்திலே பெண்ணிலும் உறுதி வாய்ந்தவரைப் பெண்ணால் இம்சிக்க முடியுமா? ஆம் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆமாம்! பெண்ணால் ஆண் இம்சிக்கப்படுவது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஒளவையார் காலம் தொட்டு இந்த இம்சை உண்டு. ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்று பாடிய ஒளவையார் தான் ’கொடிது எது?’ என்ற பட்டியலிலே ’கொடிது கொடிது அன்பிலாப் பெண்டிர்’ எனவும் பாடினார்.

நான் சிறுமியாக இருந்த போது ஒளைவையார் படம் பார்த்தேன். இதில் கே.பி. சுந்தராம்பாள் ஒளவையாராக நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சியில் கணவனுக்கு இலையில் உணவு பரிமாறும் மனைவி அவனைக் கன்னாபின்னா என்று வைத படியே உணவு பரிமாறுகிறாள்.அவனோ பசியுடன் சாதத்தில் கை வைத்தவன் உண்ண முடியாது திண்டாடுகிறான். சாப்பாட்டைத் திட்டித் தீர்த்த படியே பரிமாரினால் யாரால் தான் உண்ண முடியும்? இதைக் கண்ணுற்ற ஒளவையார் ‘அதனிலும் கொடிது இன்புற அவர்  கையால் உண்பது தானே’ எனப் பாடுகிறார். ஒளவையார் பாடிய காலத்தில் இருந்து நாம் பல நூற்றாண்டைத் தாண்டி வந்து விட்டோம்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனது சிந்தனையையும் மாற்றுகின்றது. இது தவிர்க்க முடியாத நியதி. 3 தலைமுறைகளுக்கு முன் பெண் போதிய கல்வியறிவைப் பெற வில்லை. இந்த அறியாமையில் வாடிய பெண்ணின் பரிதாபத்தைப் பார்த்த பாரதி பெண் விடுதலை பற்றிப் பாடினான். முன்னர் தந்தையால் பராமரிக்கப்பட்டு பெண் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டாள். கணவனின் பின் பெற்ற மகன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நியதி இருந்தது. இவை எல்லாம் இன்று பழங் கதை.

இன்றய பெண் கல்வியிலும் தொழிலிலும் ஆண்மகனுக்குச் சமனாக வாழ்கிறாள். எவரெஸ்ட் மலை உச்சியை அடைவதில் இருந்து ஆழ்கடல் ஆய்வு வரை எங்கும் பெண்களைக் காணலாம். இது வரவேற்கப்பட வேண்டியதே. வீட்டிலே சண்டை சச்சரவு என வரும் போது பெண் சளைத்தவள் அல்ல. இங்கு நான் எல்லாக் குடும்பங்களும் சண்டை போட்டுக் கொள்ளுவதாகக் கூற வரவில்லை. காரியாலயத்திலும் பொறுப்புள்ள வேலை பார்த்து, வீட்டையும் சிறப்பாக நிர்வகிக்கும் திறமை கொண்ட பெண் நிச்சயமாக அன்றய சமூகப் பெண்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டவளே!

இன்று புதிதாகப்பேசப்படும் விஷயம் பெண்களால் ஆண்கள் துன்புறுத்தப்படுவது. இவ்வாறு இம்சைப்படும் ஆண்கள் சமூகத்தில் தாம் பெண்ணால் இம்சிக்கப்படுவதாக வெளியில் கூறவும் தயங்குகிறானாம். இது தமது ஆண்மைக்கு இழுக்கு; சமூகம் தம்மை மதிக்காது என அஞ்சுகிறானாம். இவ்வாறு பெண்களால் இம்சிக்கப்படும் ஆண்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதில்லை. இவற்றைச் செய்யும் பெண்கள் ஆண்கள் போல் அடி, உதை என இல்லாது உளவியல் ரீதியாக அவர்களை இம்சிக்கிறார்களாம்.

இது மிகவும் திட்டமிட்ட செயலாக இருக்கும். இது வரை மறைக்கப்பட்டு வந்திருந்த இந்த விஷயம் இன்று வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமது பிள்ளைகளையும் கொண்டு வெளியேறி விடுவேன் என மிரட்டுவது இன்று சர்வ சாதாரணமாம். குழந்தைகளைப் பிரிய முடியாத கணவன் எதையும் சகிக்கத் தயாராகுகிறான். பல ஆண்கள் மெளனமாக இதைச் சகித்து வருகிறார்களாம். சகிக்க முடியாத ஆண் சட்டத்துறையை நாடினாலும் அங்கும் அவர்களின் முறைப்பாடுகள் தகுந்த அங்கீகாரம் பெறுவதில்லை. பெண்னால் கொடுமைப்படுவது மட்டுமல்லாது முறையீடு செய்யப்போன இடத்திலும் ஆணைச் சந்தேகக் கண்ணுடன் நோக்குகிறார்களாம்.

இறுதியில் மனைவி விவாகரத்துக் கோரி குழந்தைகள் பராமரிப்பு, வீடு, கார் அத்தனையையும் தனதாக்கி கணவனை மிகுந்த பரிதாப நிலைக்கு ஆளாக்குகிராளாம்.

இன்றய சட்டங்கள் என்றோ ஆக்கப்பட்டவை. அவை பெண் மெல்லியலாள் ஆக இருந்த காலத்தயது. அதனால் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆணின் சொத்து அத்தனையும் அவளது உரிமையாக்கப் பட்டது.

அன்றய சமூகம் பெண் கணவனை விட்டுப் பிரிவதை பெரிய அவமானமாகக் கருதியது. இன்றோ இது சர்வ சாதாரணமாகி விட்டது. இவற்றால் பாதிக்கப்படுவது இவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளே. அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களாக வளர்வதை மனவியல் அறிஞர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

கெளதமர் ‘தாய் குழந்தையை நேசிப்பது போன்று உலகை நேசியுங்கள்’  என்றார். ஆனால் இன்று சொத்தும் சுகமும் பெறுவதற்காக மட்டும் விவாகரத்துக் கோரும் பெண்களை என்னவென்பது? தாய்மை என்ற சொல்லுக்கே அபகீர்த்தி விளைவிக்கும் தாய்கள் அல்லவா அவர்கள்!

விவாகரத்து என்ற சூதாட்டத்திலே பெற்ற பிள்ளைகளே பணயம் வைக்கப்படுகிறார்கள்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 6.6.2007ல் அன்று பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

Friday, December 28, 2018

கிரேக்கரும் நாமும்

இங்கு நாம் பல் இன; பல் கலாசாரங்களைக் கொண்ட மக்களுடன் வாழ்கிறோம். அதாவது Multicultural Country யில் வாழ்கிறோம். அதனால் மற்றவர்களினுடய நாகரிகத்தையும் நாம் அறிந்திருப்பது நல்லது.

பண்டைய கிரேக்கர்கள் காவிரிப்பூம் பட்டிணத்தில் வியாபாரம் செய்ததற்குச் சான்றுகள் உண்டு.  இவர்கள் தங்கள் பண்டங்களை விற்று முத்து, மிளகு போன்றவற்றை வாங்கிச் சென்றார்கள்.

இவர்கள் தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கெனத் தனிக் குடியிருப்புகள் காவிரிப்பூம் பட்டிணத்தில் இருந்திருக்கிறது. இவர்களின் வருகையால் தமிழ் நாடகங்களும் நல்ல பயனைப் பெற்றன. ’திரிசீலை’ எனப்படும் ’எழினி’ என்ற சொல் ’யவனிக்கா’ என்னும் கிரேக்க சொல்லின் மருவலே!

Alexander The Great பஞ்சாப் வரை படையுடன் வந்தான். அதன் வழியாக இவர்களின் செல்வாக்கு இங்கு ஓங்கி இருக்க வேண்டும். பஞ்சாப் பிரதேசத்தில் இவர்கள் பெளத்த சமயக் கருத்துக்களை வைத்து நாடகம் போட்டதற்கும் சான்றுகள் உண்டு.

கிரேக்கருக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே இருந்த கலாசார உறவைக் காட்டும் சாசனம் ஒன்று 1899ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ‘பாப்பிரஸ் சுருள்’ எனப்படும் நாணற்புல் தாளில் இது எழுதப்பட்டுள்ளது. இதில், கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு மொழி உரையாடல் ஒன்று எகிப்து மொழி நாடகமாகிய இதில் காணப்பட்டது. அண்மையில் எகிப்திற்கு ஆராய்ச்சிப் படிப்பிற்காகச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவரின் கண்ணில் இது பட்டது. அந்த 2ம் நூற்றாண்டுக் கையெழுத்துப் பிரதியில் ’வேற்று மொழி’ எனக் கருதப்பட்ட மொழி ’தமிழ்’ எனக் கண்டறிந்தார் அந்த இளைஞர். இதன் வழியாக எகிப்தியர் / கிரேக்கர்  தாம் சென்று வியாபாரம் செய்த நாட்டின் மொழியையும் தமது நாடகத்தில் எழுதத் தவறவில்லை.

கிரேக்கர்களின் பழக்கவழக்கங்களில் பல நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை ஒத்ததே. அவை எப்படிப்பட்டது என்று பார்ப்போம். அவர்களின் கோயிலின் முன் ஒரு தொட்டியில் நல்ல நீர் வைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்குச் செல்வோர் இந் நீரினால் கை, கால்களைக் கழுவிச் சுத்தம் செய்த பின்பே கோயிலுக்குள் போவார்கள். நாம் செய்வது போலவே தெய்வத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நிவேதனங்கள் யாவும் ஒழுங்காக நடைபெறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதைகளும் உண்டு. உற்சவ காலங்களில் தெய்வங்களின் திரு உலாவோடு இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் நாடகங்களும் நடைபெறுமாம்.

என்ன? தெய்வ வழிபாட்டில் இவர்களுக்கும் நமக்கும் எந்த ஒரு வித்தியாசமும் காண முடியவில்லை அல்லவா? கோயில்களில் கடவுளின் பிரசாதம் எனக்கூறி ஏழை எளியவர்களுக்கு உணவும் வழங்கப்படுமாம். நம் ஊர் அன்னதானம் போலவே...

இவர்களின் தெய்வங்கள் மனித உருவில் இருக்கும்.ஆனாலும் எம்மைப் போலவே பசு, நாகம் போன்றவற்றை வணங்கும் வழக்கம் அவர்களுக்கும் உண்டு. நாக சர்ப்பம் ஒன்றைக் கண்டால் அது வந்து போன இடத்தில் சிறிய கோயிலையே எழுப்பி விடுவார்களாம்.

அத்துடன் எமது கோயில்களைப் போன்றே அவர்களின் கோயில்களும் சிற்பக் கூடங்களாகவும் சித்திரச் சாலைகளாகவும் விளங்கின.

இவர்கள் அக்கினியை வணங்கும் வழக்கம் உள்ளவர்கள். இது அவர்களுக்கும் எமக்கும் இடையே உள்ள உறவை மேலும் நெருக்கமுறச் செய்கிறது. புராதன கிரேக்கருக்கும் பல தெய்வங்கள் உண்டு. கடலுக்கும் வானுக்கும் கலைக்கும் செல்வச் செழிப்பிற்கும் வெவ்வேறு தெய்வங்கள் அவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பூசைகள் செய்து நிவேதனம் படைப்பார்கள்.

இவர்களுக்குக் குறி கேட்பதிலும் நம்பிக்கை உண்டு. குறி கேட்பதற்காக டெல்பிக் என்ற கோயில் பிரபலமாக இருந்தது. இதனால் இந்தக் கோயிலுக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. பலர் தம் நில புலன்களை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள் என்றால் பாருங்களேன்!

இவர்கள் வாழ்க்கையில் பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அதற்கேற்ப வெவ்வேறு சடங்குகள் கூட உண்டு. சுத்தத்தைப் பேணுவதிலும் இவர்கள் எம்மவரைப் போன்றே தீவிரம் காட்டுவார்கள். சாவீட்டிற்குச் சென்றவர்கள் நீராடி விட்டுத் தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

சிட்னியில் எனது நண்பர் ஒருவர் கிரேக்கர் ஒருவரின்  வீட்டை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் குளியலறை ஒன்று வீட்டிற்கு வெளியே உண்டு. இவர்கள் தேவைப்படும் போது வீட்டுக்குள் நுழையாமல் முதலில் குளித்து விட்டு உள்ளே வருவதற்காக இது அமைக்கப் பட்டிருக்கிறது.

பிணமானது பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அதன் போது பெண்கள் மாரடித்துக் கொண்டு செல்லுவார்களாம். கூலிக்கு மார் அடிப்போரும் உண்டு. பிணத்தை எரிப்பதும் அங்கு பெரு வழக்கு.

என்ன யாழ்ப்பாணத்துக்கே போய் விட்டது போல் இருக்கிறதா?

( இக் கட்டுரை ‘ஒலிம்பிக் - அதன் கலைமுகம்’ என்ற கட்டுரையைத் தொடர்ந்து ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் 23.3.2006 அன்று ஒலிபரப்பானது. இங்கு அது இரு பகுதிகளாகப் பிரசுரமாகிரது.)

ஒலிம்பிக் - அதன் கலை முகம்

ஒலிம்பிக் விழாவை ஆரம்பித்தவர்கள் கிரேக்கர்கள் என்பது நாம் அறிந்ததே.ஆனால் அன்றய ஒலிம்பிக் விழாக்களில் விளையாட்டுப் போட்டிகளுடன் வேறு பல போட்டிகளும் நடந்தன.

ஒலிம்பிக் விழாக்களிலே கவிஞர்கள் தாங்கள் புனைந்த கவிதைகளை அரங்கேற்றினார்கள். நாடக ஆசிரியர்கள் தாங்கள் இயற்றிய நாடகங்களை மேடை ஏற்றினார்கள். சரித்திர ஆசிரியர்கள் தாங்கள் எழுதிய சரித்திரத்தை படித்துக் காட்டுவார்கள். நாவன்மை படைத்தவர்கள் தங்கள் திறமையைப் புலப்படுத்தும் பொருட்டு அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்கள்.

கிரேக்கர்களின் வாழ்க்கையிலே கவிதையும் இசையும் இரு கண்களாக விளங்கின. ஊது குழலும் யாழும் இசைக்கருவிகளாக இருந்தன. கோஷ்டி கோஷ்டியாக சேர்ந்து பாட்டிசைப்பார்கள். சங்கீதத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும் இங்கே இருந்தார்கள்.

கிரேக்கர்கள் நாடகத் துறையிலே மிக உன்னத நிலையில் இருந்தவர்கள். அங்கு மூன்று வகை நாடகங்கள் வழக்கில் இருந்தன. Cartoon நாடகங்கள் அவற்றில் ஒன்று. அரசியலையும் சமூக சீர்கேடுகளையும் கேலியாக Cartoon மூலமாக அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இரண்டாவது நகைச்சுவை நாடகங்கள். மூன்றாவது அவலச் சுவை நிறைந்த நாடகங்கள். இவை மிகப்பிரசித்தி பெற்றவை.

நாடகக் கலைக்காகப் போட்டிகள் நடந்தன. இத்தகைய போட்டிகளை நகர ஆட்சியாளர்களே நடாத்தினார்கள். நாடகப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப் படும். தயாரிக்கப் படும் நாடகப் பிரதி போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப் படும். இத்தகைய போட்டிகளுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும் பத்து நடுவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவல நாடகங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓர் ஆடு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நாடகங்களைப் பார்ப்பதற்கு பெருந் திரளாக மக்கள் கூடினார்கள். ஆரம்ப காலத்தில் இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. நல்ல இடம் பிடிப்பதற்காக நாடகத்திற்கு முதல் நாளே வந்து இடம் பிடித்துக் கொள்ளுவார்களாம். அது மட்டுமல்ல அன்னியரும் கிரேக்கர் அல்லாதவரும் கூட இந் நாடகங்களைப் பார்ப்பதற்கு வந்து கூடினார்களாம். அதனால் நுழைவுக்கென பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஏழைகளுக்கான கட்டணத்தை அரசே கொடுத்துதவியது. இதனால் சகல குடி மக்களுக்கும் நாடகம் பார்க்கும் உரிமை வழங்கப்பட்டது. அது மட்டுமா? நாடகம் பார்ப்பதற்கு கைதிகளும் இட்டுச் செல்லப்பட்டனர். அதனால் போலும் இன்றும் சிறைச்சாலைகளில் TV பார்க்கும் வசதி உண்டு.

எமது மரபிலும் நாடக மேடையே அறிவூட்டும் கல்விக்கூடம் என்ற எண்ணம் இருந்தது. அந்தச் சிந்தனையைக் கிரேக்கரிடமும் காண்கிறோம்.  தமிழ் மக்களுக்குச் சிலப்பதிகாரம் உட்பட அரிய பெரிய காப்பியங்களைத் தேடி நூலுருவில் பதிப்பித்து தந்த தமிழ் தாத்தா. உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் சொல்லுவதைக் கேழுங்கள்.

”புராதன கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், அனுஷ்டித்து வந்த பழக்க வழக்கங்கள் முதலியவற்றை அறியும் போது அவர்கள் எல்லோரும் நமது மூதாதையரிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு கிளையினர் தானோ என என நினைக்கத் வேண்டி இருக்கிறது. நமது பாரத நாட்டுப் பண்புகள் பலவும் அவர்களுடய வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அவர்களை அறிய அறிய அவர்களிடத்தில் நம்மை அறியாத ஒரு வாஞ்சை உண்டாகிறது. அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்கள், யுத்தங்களில் அடைந்த வெற்றி தோல்விகள் யாவும் எமது இதயத்தைத் தொட்டு விடுகின்றன.”

( இக்கட்டுரை ATBC வானொலியில் 23.3.2006 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)

மனமும் உடலும் ஆரோக்கியமும்


எமது உடலுக்கு வயதாகி விட்டதா? அல்லது எமக்கு வயதாகி விட்டதா?

ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் எம்மில் சிலர் வயதானாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் உடல் மட்டும் வயதானவர் என்று கூற முடியும்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு வயதான இளைஞரை பாடசாலை வாசலில் சந்தித்தேன். பேரனை வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்தார். 10 வயதான பேரன் பாடசாலை விட்டு வந்ததும் தாத்தாவைப் பார்த்து,  Hi, Tom என அழைத்தான். ஆமாம்; பேரன் தாத்தாவை அப்படித் தான் அழைத்தான்.

அவர்கள் வழக்கப் படி Pop அது தான் தாத்தா என அழைப்பது அவருக்குப் பிடிக்காத விஷயமாம். அப்படி அழைப்பதால் தான் வயதாகி விட்டதாக உணர்கிராறாம். அதனால் வயதாகி விட்டதாக உணர்ந்தாலே ‘கிழம் தட்டி விடும்.’ அதனால் பேரன் தன்னைப் பேர் சொல்லி அழைப்பதே மேல் என்றார் இந்த மனதால் இளைஞரானவர்.

இதைக் கேட்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் அவரது மனோபாவத்தை இரசித்தேன். இப்பொழுது எமது கீழைத்தேயக் கலாசாரத்தை எண்ணிப் பார்த்தேன். பிரம்மச்சாரியம், அதையடுத்து இல்லறம் பின் வானப்பிரஸ்தவம் இறுதியாக சன்னியாசம்.

ஆமாம் இல்லறத்தில் குழந்தைகளைப் பெற்று முறையாக வளர்த்து ஆளாக்கி விட்டால் சன்னியாசத்தை நோக்கி, கடவுளைச் சிந்தித்து, தியானம் பூஜை இவற்றில் ஈடுபட்டு, மோட்ச வழிக்கு புண்ணியம் தேடுவதே நம் இலக்காகி விடும்.

இந்தச் சிந்தனையில் நம்மவர் முழுமையாக ஈடுபடா விட்டாலும் அந்த “வயதானாலும் மனதில் இளமையாக இருக்கும்” இளைஞர் போல் சிந்திப்பது கிடையாது. ஏதோ வாழ்ந்து முடித்து விட்டோம். இனிமேல் நமக்கு என்ன?நல்ல படியாகப் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற வகையில் பேசுவதை நாம் அடிக்கடி கேட்டுள்ளோம்.

எனக்குத் தெரிந்த ஒரு 65 வயது மதிக்கக் கூடிய அம்மையார், “ கார்த்திகா, இந்த உடம்பு இனிமேல் Warranty முடிந்து போன Car மாதிரித் தான். அப்பப்போ இதற்கு Repair செய்து தான் ஓட வேண்டும். இதற்கு என்ன Spare Parts வாங்கிப் போட முடியுமா?” என்றார்.

உடலுக்கு வயதாகி விட்டால் இயற்கையாக உடல் இளமையில் இருந்தது போல வளைந்து கொடுக்காது. தசை நார்கள் தளர்ந்து விடும். வியாதி ஏதாவது வந்தால் குணப்படுத்த நாளாகும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் உடலைச் சீராக வைத்திருக்க முடியும். நாம் வயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால், வயோதிபத்தால் வரும் உடல் உபாதைகளைக் குறைக்க முடியும்.

சர்வதேச வயோதிபருக்கான சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 90 வயதிற்கு மேற்பட்டவரை வைத்து ஆராய்ந்ததில் உடற்பயிற்சி மூலம் அவர்கள் முந்தி இருந்த நிலையில் இருந்து முன்னேறி உள்ளதாக அறிவித்திருக்கிறது.

ஆமாம், 174 விதமான  முன்னேற்றத்தை அவர்களின் உடலில் காண முடிகிறதாம். இதற்காக முரட்டுத் தனமாக நோவுகளைப் பொறுத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபடக் கூடாது. உங்கள் உடல் இடம் தரும் அளவுக்கான  பயிற்சி போதும் என இந் நிறுவனம் கூறுகிறது.

இங்கு Linda McDonald கூறுவதைக் கேழுங்கள். இவர் பல வருடங்களாக இடுப்பு நோவால் பாதிக்கப்பட்டதால் இறுதியில் சத்திர சிகிச்சையை அவரது முள்ளந்தண்டில் செய்ய வேண்டி ஏற்பட்டதாம். இதன் பின் இவரால் நன்றாக நடமாட முடியாமல் போய் விட்டது. நடமாட முடியாமல் போனதையடுத்து நடமாடாமல் இருப்பவரைத் தாக்கும் வியாதிகளான இரத்த அழுத்தம், அளவுக்கு மீறிய உடற்பருமன், இதைத் தொடர்ந்து Diabetes  யாவற்றாலும் பாதிக்கப்பட்டார்.

இவர் உடல் நோவைத் தீர்க்க அடிக்கடி Physiotherapist இடமும் Dietitian இடமும் போய் வந்தார். இவர்களின் உந்துதலால் ’Living Longer; Living Stronger’ அதாவது ‘சுகத்துடன் நீண்ட ஆயுள்’ என அரசால் நடத்தப்பட்ட மையத்திற்குச் சென்றார்.

“இந்த மையத்திற்கு நான் மிகுந்த மனக் கிலேசத்துடன் வந்தேன். பயிற்சியாளர் கூறியவற்றைச் செய்ய எனக்குச் சிறிது நாட்கள் பிடித்தது. நான் முன்பு எனக்கு இருந்த கூச்சம் பயத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். பயிற்சியாளரும் எனது இடுப்பிலும் முதுகிலும் அழுத்தாத படி பயிற்சியை ஆரம்பித்தார்.

சில மாதங்களில் நான் இதன் பலனைக் கண்டேன். எனது உயர் இரத்த அழுத்தம் வலுவாகக் குறைந்தது. நான் இப்பொழுது நிறைந்த உடல் உறுதியுடனும் சுறுசுறுப்பாகவும் உலாவி வருகிறேன்.  உடற்பயிற்சி மூலம் எனது உடல் நன்றாகத் தேறி உள்ளது. நிறைந்த சக்தியைப் பெற்றவளாக இருக்கிறேன். முன்பு நான் இப்படி இருக்கவில்லை. மொத்தத்தில் எனது வாழ்க்கை சுகத்துடனும் இன்பகரமாகவும் இருக்கிறது” என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,’ 12 மாதங்களுக்கு முன் பஸ்ஸில் ஏற இறங்க முடியாது இருந்தேன். ஆனால் இப்பொழுது நான் பஸ்ஸில் Australian Northern Territory க்கும் போய் வந்தேன். இரண்டு மணி நேரம் நடந்து சில இடங்களைச் சுற்றிப் பார்த்தேன்’ என்கிறார்.

முன்பு எனது உபாதையால் நடமாடுவதற்கு தடி ஊன்றிய நான் இவ்வாறு முன்னேறியுள்ளேன். நானே இப்பொழுது Supermarket க்குச் சென்று பொருட்களை வாங்குகிறேன்.எனது 6 வயதுப் பேரனுடன் சந்தோஷமாக ஓடி விளையாட முடிகிறது’ என்கிறார்.

மேலும் Linda, ’உடற்பயிற்சியால் தாம் களைப்படைவதாகப் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் முயன்றால் கட்டாயம் அவர்களால் முடியும். சில நாட்களில் அவர்கள் களைப்பு இருந்தது தெரியாது மறைந்து விடும்’. என்கிறார்.

யாவராலும் தேகப்பயிற்சி செய்ய முடியும். அவரவர் தமக்கு ஏற்ற வகையில் அவரவருக்குரியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவரது ஆலோசனையாகும். ‘நான் உடற்பயிற்சி செய்ததால் வாழ்க்கையில் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்பட்டது’ என்று மேலும் அவர் சொல்கிறார்.

Linda வின் வார்த்தைகள் எம்மை ஊக்குவிக்கவில்லையா? எமது சமூகத்திலே தினமும் உடற்பயிற்சி செய்யும் வயதானவரைக் காண்பது அரிது. வயதாகி விட்டால் கோயில் குளம், சிவசிவா, ராமா என்று வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. புதிய சூழலில் பல புதிய வாழ்க்கை முறையை வாழும் எம்மவர் இனிமேல் உடற்பயிற்சியின் அவசியத்தையும் உணருவர்.

உறுதியான மதிற்கும் திடகாத்திரமான உடலுக்கும் பயிற்சி முக்கியம். சீன மொழியில், ’உடல் உழைப்பிற்கு நாம் பயப்படக் கூடாது; உழைக்காத உடலைக் கண்டு தான் பயப்பட வேண்டும்; அதுவே நோய் நொடி குடி கொள்ளும் இடம்’ என்று ஒரு பழமொழி உண்டு.

இதனால் தான் போலும் சீனர்கள் இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் பொது மைதானங்களில் அவர்கள் உடற்பயிற்சி செய்வதைக் காண முடிகிறது. கூட்டம் கூட்டமாக நின்று அவர்கள் பயிற்சி செய்வதே அழகு தான். உற்றுப் பார்த்தால் 60களைத் தாண்டியவர்களாகத் தான் அவர்கள் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் கலாசாரம்.

பல வருடங்களுக்கு முன், நான் இலங்கையில் இருந்த சமயம், சீனாவுக்குச் போய் வந்த என் நண்பர், அங்கு காலையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒலி பெருக்கியில் உடற்பயிற்சிக்கான விளக்கம் இசையுடன் வருமாம்; அப்பொழுது யாவரும் தாம் செய்யும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு உடற்பயிற்சியில் இறங்குவார்களாம். என்றார்.  இது நடந்தது Beijing இல்.

அன்று அவர் கூறியதைக் கேட்க வியப்பாக இருந்தது. ஆனால் இன்று அவுஸ்திரேலிய மைதானங்களில் இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்க்க அவர்கள் உடற்பயிற்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிந்தது.

மேலும் சீனாவை அரசர் ஆண்டு வந்த காலத்திலே, குறிப்பிட்ட ஒரு வட்டாரம் ஒரு வைத்தியரின் பொறுப்பில் இருக்குமாம். அந்த வட்டாரத்தில் வசிப்பவர்களின் உடல் நிலையைப் பராமரிப்பது அந்த வைத்தியரின் பொறுப்பு. அங்கு உள்ளவர்கள் நோய் நொடியால் பாதிக்கப்படாமல் வைத்தியர் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வட்டாரத்தில் பலர் நோயால் பாதிக்கப்பட்டால் வைத்தியருக்குச் சம்மள உயர்வு கிடைக்காதாம்.

இதே போன்று பிற்பட்ட காலத்திலும் வைத்தியர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படது. இவர்களுக்கு Bear Foot Doctor எனப் பெயர். இங்கு இந்த Doctor கள் குறிப்பிட்ட இடை வெளியில் வீடு வீடாக வந்து யாவரும் சுக பலத்துடன் இருக்கிறார்களா என பரிசோதித்துச் செல்வார்கள். சிறு சிறு உபாதைகளும் உடனடியாகக் கவனிக்கப்படும். இதனால் மக்கள் நோய்களினால் மிகவும் பாதிக்கப்பட பின் வைத்தியசாலையை நோக்கி ஓட வேண்டி வராது.



( இக் கட்டுரை 7.3.2006ல்  ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )

Thursday, December 27, 2018

JOHN LOGIE BAIRD

இன்று நாம் வீட்டுக்கு வீடு வைத்திருக்கும் தொலைக்காட்சி மூலம் பல விந்தைகளைக் கண்டு வியக்கிறோம். எமது வாழ்வின் அன்றாட விஷயங்களில் இருந்து பிரிக்க முடியாததாக தொலைக்காட்சி இன்று அமைந்து விட்டது.ஆனால் இதை ஆக்கிய தந்தையான Logie Baird தனது ஆக்கங்களைப் பார்த்து வியப்பதற்கு உயிரோடு இருக்கவில்லை.

Logie Baird Scotland  நாட்டின் Helensburgh  கைச் சேர்ந்த இளைஞர். இந்த இளைஞனின் கல்வி, பொழுது போக்கு, கனவு யாவும் ஒலி அலைகளை Radio Waves மூலம் வெகு தூரத்துக்கு அனுப்புவது எவ்வாறு என்பது பற்றியதாகவே இருந்தது. அலைகளை வெகு தூரத்துக்கு அனுப்பி அதனைப் பார்க்கவும் கூடியதாக ஆக்க முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

இரவு பகலாக இவன் இதற்காக உழைத்தான். மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது இதற்காகக் கடுமையாக உழைத்தான் Logie.

ஒரு நாள் ஓர் உயர்ந்த கம்பத்தின் மேலேறி சில சோதனைகளைச் செய்ய முற்பட்ட போது, பலத்த மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டான். இதன் பயனாக நோய்வாய்ப்பட்டு ஆறு மாதங்கள் வரையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. இதன் போது அவனது கனவெல்லாம் தவிடுபொடியாகியது. இதனால் மிகவும் வருந்திப் புலம்பினான்.
இவனை வைத்தியசாலையில் பராமரித்த தாதி இவனது நிலையைக் கண்டு, இரங்கி, அவனது கனவு நனவாக உடன் இருந்து உதவுவதாக வாக்குறுதி அளித்தார். அவனது வாழ்க்கையில் இதன் மூலம் வசந்தம் வீசத் தொடங்கியது. Margaret Albu என்பது அந்த Nurse இன் பெயர். இப் பெண் இவனது எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுத்ததுடன் அவனில் காதல் கொண்டு அவனைத் திருமணமும் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் Television  கண்டுபிடிப்பில் வெகு மும்மரமாக  ஈடு பட்டனர். இவர்களின் அந்தக் கனவு ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி 1925ல் நனவானது. முதலாவது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி உருவானது. இந்த வெற்றியில் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

 இதனை அறிந்த Scotland அரசு அவர்களுக்கு உதவ முன் வந்தது.அதன் மூலமாக முதலாவது தொலைக்காட்சி நிலையம் ( TV Station) நிர்மானிக்கப்பட்டது. அதே நேரம் இரண்டாம் உலகப் போரும் மூண்டது. அதனால் இம் முயற்சி தடைப்பட்டது.

எனினும் Logie உம்  Margaret உம் மனம் தளரவில்லை.அவர்கள் வர்ண அலைகளை எவ்வாறு படமாக்குவது என்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதிலும் வெற்றி கிட்டியது.

இது இவ்வாறிருக்க Scottish அரசு 2ம் உலக மகா யுத்தத்தில் Germany யினை வெற்றி கொண்டதை வெற்றிவிழாவாகக் கொண்டாட நாள் ஒன்றை நியமித்தது. இந்த வெற்ரி விழாவையே  முதலாவதாக வர்ணத் தொலைக்காட்சியில் காட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக Logie கடுமையாக உழைத்தார். இரவு கடுமையாக உழைத்த Logie மறு நாள் எழுந்திருக்கவே இல்லை.

தனது 57வது வயதில் மாறாத் துயிலில் அவன் ஆழ்ந்து விட்டான். மறுநாள் வெற்றி விழாவிற்குப் பதிலாக Television இன் தந்தையான Logie யின் இறுதி ஊர்வலம் சகல அரச மரியாதைகளுடன் ஒரு வெற்றி வீரனுக்கு அளிக்கும் இறுதி மரியாதையாக நடந்தேறியது..

Logie யின் வெற்றிக்கு அயராது உழைத்த Margaret கண்ணீர் சிந்த, Scotland மக்கள் இந்த மாவீரனுக்கு சிரம் தாழ்த்தி தம் அஞ்சலியைச் செலுத்தினர்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் 19.1.2005 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)

நாதஸ்வரமும் சங்கீதமும்


நாதஸ்வர இசை என்பது நம் எல்லோரையும் இன்றும் கவர்வது. இந்த வாத்தியத்தின் மகிமை என்னவென்றால் அது கோயிலிலோ அல்லது கல்யாணத்திலோ வாசிக்கப்பட்டால் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்கு இந்த இசையைக் கேட்டு மகிழலாம்.

இந்துக் கோயில்களிலே இதை வாசிப்பது வழமை.  ஆனால் இந்த வாத்தியத்தை இசைப்பதிலே மன்னராக விளங்கியவர் ஷேக். சின்ன மெளலானா என்ற முஸ்லீம். இவர் மட்டுமல்ல, தெலுங்கு தேசத்திலே பல முஸ்லீம் குடும்பங்கள் இதை வாசிப்பதுண்டு. இவரின் வாசிப்பைப் பலர் கொழும்பு வேல் விழாவிலே கேட்டிருக்கலாம்.

நாதஸ்வரத்தை வாசிப்பதிலே தன்னிகரில்லாது திகழ்ந்த இன்னொருவர் திருவாவடுதுறை.இராஜரட்னம் பிள்ளை அவர்கள். அந்த நாளிலே திரு இராஜரட்னம் பிள்ள அவர்கள் கல்யாணத்துக்கு வாசிக்க வருகிறார் என்றால் திருமண ஊர்வலத்திலே அயல் ஊர் மக்கள் எல்லாம் கூடி வந்து கச்சேரியை இரசிப்பார்களாம். ஊர்வலத்திலே ஒளி ஊட்டுவதற்கு கூலி ஆட்கள் தலையிலே Gas Light ஐத் தூக்கிச் செல்வார்களாம். இவர்களை ‘மண்டை விளக்கு’ என அழைப்பார்கள்.

All India Radio விலே திரு. இராஜ ரட்னத்தைப் பேட்டி எடுத்தவர், ‘ பிள்ளைவாழ், உங்கள் மனதில் நிறைந்திருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்ன என்று கேட்ட போது அவர்,  தான் ஊர்வலத்திலே தோடி இராகத்தை நுணுக்கமாக வாசித்த போது, ஒரு மண்டை விளக்கு அதைப் புரிந்து கொண்டு ‘சபாஷ்’ போட்டதைக் கூறினார்.

செம்பை வைத்தியநாத பகவதர் சென்னையிலே வசித்த காலத்தில் இவர் பாடுவதை வீட்டு ஜன்னல் வழியாக இருந்து ஒரு றிக்‌ஷாக் காரன் கேட்டு மகிழ்வது வழக்கம். ஒரு நாள் பாகவதர் அவனை அழைத்து, ‘சங்கீதம் கற்றுத் தரட்டாப்பா’ என்று கேட்டார்.அவரது இசையைப் போன்று அவரது மனமும் மிக இளகியது...

எனது சில நண்பர்கள் தாங்கள் ஞானசூனியங்கள்; கர்நாடக இசை தெரியாது; இரசிக்க முடியாது என்பார்கள். எல்லாம் மனம் தான். நாமே நமக்குப் போடும் தடைக்கல் இது. ரிக்‌ஷாக் காரன் சங்கீதம் படித்தா இரசித்தான்? அல்லது மண்டை விளக்கு புரிந்தா சபாஷ் சொன்னான்? இசை எம்மை இசைய வைக்கும்;  இசைக்கு மொழி கிடையாது. இந்த ஞானம் ஏற வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் FM Channel ல் English Classical Music கேட்பார். இவர் ஒரு கர்நாடக சங்கீத இரசிகரும் கூட. மதுரை மணியும் ஒரு Western Music இரசிகர். அவர் அமைத்த Western Music Tune இன்றும் பல வீணை மற்றும் வயலின் கற்றுக் கொள்ளும் மாணவர்களால் வாசிக்கப் படுகிறது. கடந்த வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற சங்கர நாராயணனும் ஒரு Western Classical Music இரசிகர்.

நான்கு தடவைகள் தொடர்ந்து மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து Best Music Director Award பெற்ற தமிழரான எம்.பி. ஸ்ரீநிவாசன் கர்நாடக சங்கீத இராகங்களிலே 30 -35 பேரை ஒரே நேரம் பாட வைத்து Western பாணியிலேயே Ogastral effect ஐக் கொண்டுவந்தவர். அதன் மூலமாக கர்நாடக இசைக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்தவர். இவர் வளர்த்த நாய்க்கு பிரபல Opera Singer ODATA வின் பெயரை வைத்திருந்தார் என்பது ஒரு சுவாரிசமான செய்தி.

அது மட்டுமா? இன்று மேற்கத்தயத்தவரும் கர்நாடக இசையை இரசித்து வருகிறார்கள். சென்னையில் நடக்கும் மார்கழி விழாவில் சங்கீதக் கச்சேரி கேட்கவும் மேற்கத்தயவர்கள் கூட்டம் வருகிறது. எமது சாப்பாட்டை இரசிப்பதுடன் இசை நாட்டியத்தையும் உலகளாவிய ரீதியில் அவர்கள் இரசிக்கத் தொடங்கி விட்டார்கள். நாம் ஏன் பின் நிற்க வேண்டும்?

இசை என்பது காதுக்கு விருந்தே தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் முதலிலே எமக்கு இந்தக் கர்நாடக இசை புரியாது என்ற சிந்தனையை மாற்றினால் தானாக இசையை இரசிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

(ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ......... அன்று ஒலிபரப்பானது)

Wednesday, December 26, 2018

குரு

இன்று நாம் குருவின் பலன் பற்றிச் சற்றுச் சிந்திப்போம்.

குரு என்றதும் வியாழ பகவான் பற்றி ஏதோ பேசப்போவதாக நினைத்து விடாதீர்கள். கல்வி அறிவைப் புகட்டும் குருவைப்பற்றித் தான் கூற வருகிறேன்.

திறமையும் அறிவும் கருணையும் பொருந்திய குரு கிடைத்தவர் பாக்கிய சாலிகளே! இதை உணர்ந்து தான் போலும் மகா அலெக்‌ஷாண்டர் பிறந்த போது அவரது தந்தை அரிஸ்டோட்டலிடம், ’நீங்கள் வாழும் இந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றாராம். அரிஸ்டோட்டல் என்ற அந்த மேதை தனது சீஷ்யனை உலகம் வியக்கும் வண்ணம் உருவாக்கினார். மகா அலெஷ்சாண்டரின் சாதனை அவன் வாழ்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பும் உலகை வியப்பில் ஆழ்த்துகிறது. அதற்கான  தார்ப்பரியங்கள் / பெருமைகள் யாவும் அவரை உருவாக்கிய குருவான அரிஸ்டோட்டிலையே சாரும்.

இந்தியப் பெருங் கண்டத்தில் சக்கரவர்த்தியாகவிருந்த சந்திரகுப்த மெளரியன் என்ற அரசனை வழிநடத்தியவர் கெளடில்யர் என்ற ராஜ குரு.மெளரிய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த உதவியது கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரம் என்பது ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் முறைகளை எடுத்துக் கூறும் நூலாகும். அது இந்தியப் பண்பாட்டின் அறிவுத்திறனையும் ராஜ தந்திரத்தையும் பறைசாற்றும் நூலுமாகும்.

 அரசியலைக் கற்கும் எந்த மாணவனும் அர்த்த சாஸ்திரத்தைப் படிக்கத் தவறுவதில்லை. இது ஜேர்மன் உட்பட பல மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை ஆக்கிய கெளடில்யரின் இன்னொரு பெயர் சாணக்கியன் என்பதாகும்.

இவ்வாறு சிறந்த குருவால் வழிநடத்தப்பட்டு வாழ்க்கையில் சித்தி கண்ட சீஷ்யர்கள் பலர். இனி, அன்றய சானக்கியன் காலத்தில் இருந்து இன்றய கால கட்டத்துக்கு வருவோம். குரு சீஷ்ய உறவைச் சற்றே பார்ப்போம்.

செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர் அண்மையிலே காலமான ஒரு சிறந்த சங்கீத வித்துவான். இவரது சீஷ்யனாக இருந்தவர் மைசூர் மகாராஜாவின் மகனான இளவரசன். ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்த போது, யுவராஜா தொடர்ந்து ஒரே தப்பை செய்து கொண்டிருந்தாராம். செம்மாங்குடியாரும் மிகுந்த பிரயத்தனத்தோடு அதைத் திரும்பத் திரும்பத் திருத்தினாராம். பையன் சரியாகப் பாடவில்லை என்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த குரு, சீஷ்யனை ஓங்கி அறைந்து விட்டார்.

அதன் பின்னர் தான் மகாராஜாவின் பிள்ளை அல்லவா என்பதை உணர்ந்தார். அரச குமாரனை அறைந்து விட்டு அரண்மனையில் எவ்வாறு தங்க முடியும்? தவித்துப் போனார் பிள்ளைவாள். பெட்டியைக் கட்டிக் கொண்டு புகையிரத நிலையத்துக்குப் புறப்பட்டு விட்டார். இதனையறிந்த சீஷ்யரான யுவராஜா உடனடியாக புகையிரத நிலையத்துக்கு விரைந்தார். ‘இந்த சமஸ்தானத்தின் இளவரசன் கூறுகிறேன்; நீங்கள் உடனடியாக அரண்மனைக்குத் திரும்பவேண்டும்.’ என்றார். வேறு வழியின்றி யுவராஜாவின் கட்டளைக்குப் பணித்து அரண்மனை ஏகினார் குருவான பிள்ளைவாள்.

அரண்மனையில் என்ன நடந்தது தெரியுமா? சீஷ்யனான யுவராஜா குருவின் அறைக்கு வந்தான். சாஷ்ட்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான்; நமஸ்கரித்தான். ‘இப்பொழுது உங்கள் சீஷ்யன் உங்கள் முன் நிற்கிறேன். செய்த தறுகளுக்காக கொடுக்க வேண்டிய மிச்ச அறைகளையும் நீங்கள் இப்போது கொடுக்கலாம்’ என்றாராம் யுவராஜா.குருவும் தனது சீஷ்யனை அள்ளி அணைத்துக் கொண்டாராம்.

இந்த செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயருக்கு பெரிய சீஷ்ய பரம்பரையே உண்டு. இவர்களில் ஒருவர் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். சென்னையிலே நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்த வந்திருந்த சினிமா நடிகர் வை.ஜீ. மகேந்திரனிடம் செம்மாங்குடியாருக்குச் சமனாக தனக்கு ஆசனம் போட வேண்டாம் என்றும்; அவருக்கு பின் வரிசையில் தனக்கான ஆசனத்தைப் போடும் படி கேட்டுக் கொண்டாராம். இதனை மேடையில் வை.ஜீ. மகேந்திரன் கூறினார்.

அதற்குக் காரணம் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சினிமா விசிறிகள் தமது மதிப்பிற்குரிய பாடகருக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் பின்னால் இருத்தி விட்டார்களே என அவர்கள் விசனப்படாமல் இருக்கவே. பின்னர் பாடகர். ஜேசுதாஸ் பேசும் போது தான் செம்மாங்குடியாரிடம் படித்த காலத்தில் தான் ஒரு வேறு மதத்தவராக இருந்த போதும் கடுமையான ஆசாரங்களை அனுஷ்டிக்கும் ஐயர் அவர்கள் தன்னை எந்தப் பாகுபாடும் காட்டாது தனது சொந்தப் பிள்ளையைப் போல நடாத்தினார் என உணர்ச்சி ததும்பக் கூறினார்.

பதிலுக்கு ஐயர்வாள் தனது குருவான விஸ்வநாத ஐயர் தன்னை ஒரு பிள்ளையைப் போலவே நடாத்தினார். இது கற்றுக் கொடுக்கும் குருவுக்கு இருக்க வேண்டிய பண்பு என்பதை தனது குருவின் மூலம் தான் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

ஆமாம், தான் பெற்ற பிள்லளை என்பது தனக்குப் பிறந்தவன். ஆனால் சிறந்த சீஷ்யன் என்பது தான் உளமார நேசித்து தான் போஷிக்கும் கலையை சீஷ்யனோடு பகிர்ந்து கொண்டவர். தனது கலையானது சீஷ்யன் மூலம் பிரகாசிப்பதை குரு காண்கிறார். இது குருவின்; சீஷ்யனின் நெஞ்சிலே பசுமையான இடத்தைப் பிடிக்கிறது.

இவ்வாறாகக் குருவின் நெஞ்சிலே இடம் பிடித்த சீஷ்யனை புராணத்திலும் காண்கிறோம். அவன் தான் அர்ச்சுணன் என்ற வில் வீரன். இவனது குருவான துரோணாச்சாரியார் பஞ்ச பாண்டவருக்கும் துரியோதனனாதியருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்தவர். அர்ச்சுணனிடம் இருந்த அபாரத் திறமையைக் கண்டார்.  அவனது திறமையில் கர்வம் கொண்டார். தனது சீஷ்யன் யாராலும் வெல்ல முடியாத வீரன் என்பதில் தான் அவருக்கு எத்தனை கர்வம்! பெருமை!! அளவிலா மகிழ்ச்சி!!!

எங்கோ காட்டு வாசியாக வாழ்ந்த ஏகலைவன் இவரிடம் வருகிறான்.’ஐயா உம்மிடம் நேரடியாக வில்வித்தை கற்றுக் கொள்ளும் தகுதி என்னிடத்திலில்லை. ஆனால் எனது மனதில் உம்மையே எனது குருவாக மதித்து வில் வித்தையைக் கற்றேன். இன்று உமக்கு என் மரியாதையை செலுத்தி குரு தட்சிணை கொடுக்க வந்தேன்’ என்கிறான் அப்பாவியான ஏகலைவன். அவனின் வில் வித்தையின் அத்தனை திறமைகளையும் கண்டார் துரோணாச்சாரியார். அவை யாவும் தனது தலைசிறந்த சீஷ்யனான அர்ச்சுணனின் திறமைக்கு ஈடாக விளங்குவதைக் கண்டார்.

அவரது உள்ளத்தால் அதனைப் பொறுக்க இயலவில்லை. தனது சீஷ்யனுக்கு நிகராக வேறொருவன் வருவதை சகிக்கவில்லை அவர் மனம். பாவியான துரோணாச்சாரியார் குரு தட்சிணையாக ஏகலைவனின் பெரு விரலைக் கேட்கிறார். பெருவிரலை இழந்தால் நாணில் வில்லேற்ற இயலாதே!.... இவ்வாறு தனது சீஷ்யனில் ஆறாக்காதல் கொண்ட குருவை மகாபாரதத்தில் நாம் காண்கிறோம்.

இனி குருவால் வஞ்சிக்கப்பட்ட ஒருவனைக் காண்போம். பரசுராமர் என்பவர் ஒரு சிறந்த குரு. போர்க் கலைகள் பலவற்றையும் அறிந்த மேதாவி. ஆனால் இவரோ பிராமணர் அல்லாத யாருக்கும் போர் நுணுக்கங்களை கற்றுத்தர மறுத்தவர். போர் வித்தைகளில் வித்தகர்களாக விளங்கிய ஷத்திரியர்களை வெறுத்து வாழ்ந்தவர்.

கர்னனுக்கோ இவரைக் குருவாகக் கொள்ள ஆசை. திட்டமிட்டு குருவுக்கு இசைவான பணிவிடைகளைச் செய்து, அவரது நன்மதிப்பைப் படிப்படியாகப் பெற்று வந்தான். பரசுராமரும் அவனது பணிவான, இங்கிதமான பணிவிடைகளில் மயங்கி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அவனோ அவரிடம் இருந்த இரகசியமான பாசுபதம் என்ற அஸ்திர வித்தையை கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறான்.

ஒரு நாள் குரு இவனின் மடியிலே தலை வைத்து படுத்து கண்ணயர்ந்து விடுகிறார். கர்னனின் தொடையிலே வண்டு ஒன்று கடித்துத் துளைத்து விடுகிறது. எனினும் மிகுந்த சகிப்புத் தன்மையோடு குருவின் நித்திரை கலையாது பாதுகாக்கிறான்; கர்னன் அசையாது இருக்கிறான். கண் விழித்த குருஇரத்த வெள்ளத்தைக் காண்கிறார்; ‘ஒரு பிராமனனால் இத்தகைய வலியைப் பொறுத்துக் கொண்டு சகித்திருக்க முடியாது; நீ நிச்சயமாக ஒரு ஷத்திரியனாகத் தான் இருக்க வேண்டும்; நீ என்னை ஏமாற்றி விட்டாய்’ என்னிடம் கற்ற வித்தை உன் ஆபத்துக்கு ஒரு போதும் உதவாதிருக்கக் கடவதாக’ எனச் சாபமிடுகிறார்.

பாரத யுத்தத்தில் கார்னன் அர்ச்சுனனோடு போர் புரிந்து மாண்ட கதை நாமெல்லாம் அறிந்தது தானே! பரசுராமரிடம் கற்ற பாசுபதம் என்ற வில்வித்தை அவன் போர் புரியும் போது அவனுக்கு துணைநிற்க முடியாது போயிற்று.

கலையைக் கற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் குரு சீஷ்ய உறவென்பது ஒரு முக்கியமான விஷயமாகும். குரு மூலமாகவே கலையைக் கற்றுக் கொண்டவள் நான். எனது அனுபவத்தையும் இங்கு கூறாவிட்டால் இக்கட்டுரை முழுமை பெறாது.

எனது குருவான பத்மஸ்ரீ. வளுவூர். இராமையா பிள்ளை அவர்களிடம் குருகுலக் கல்வி மூலமாக நாட்டியம் கற்றுக் கொண்டவள் நான். எனது குரு நாட்டியம் கற்றுக் கொடுப்பதுடன் போதும் என இருந்து விடார். தான் செல்லும் நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் யாவற்றுக்கும் என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். அவைகள் முடிந்து காரில் திரும்பி வந்துகொண்டிருக்கும் போது அவற்றைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதுண்டு. எனது திறமையைத் துலக்கும் வகையில் பல கேள்விகளை அவர் என்னிடம் கேட்பது வழக்கம்.

மேலும் அவரைத் தேடி பல கலைஞர்கள் அறிஞர்கள் வருவதும் அளவளாவுவதும் போவதுமாக இருப்பார்கள்.அப்போதெல்லாம் அவர் என்னை அருகில் வைத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறாக என் குருவிடம் நான் கற்றுக் கொண்டவை பல.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் என்னைத் தனது மகள் போலவே நடாத்தினார். இலங்கைப் பெண்ணான எனது உடல் நலத்திலும் உணவிலும் கூட மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எனது மேடை கச்சேரி முடிந்ததும் கண்சிருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து சிருஷ்டி பரிகாரம் செய்தே என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

இவற்றை எல்லாம் எண்ணும் போது இப்படி ஒரு குரு அமைய என்ன புண்ணியம் நான் செய்திருக்கக் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

குருவே சரணம்!

(ATBC வானொலியில் 20.4.2005 அன்று  ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் இக்கட்டுரை ஒலிபரப்பானது)




தஞ்சைப் பெருங் கோயில்



எமது கோயில்கள் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடங்களாகப் போற்றப்படுகின்றன. சிறந்தது எதுவோ அதையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பது எமது வழமை. இவ்வாறே நாம் எமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

தஞ்சைப்பெருங் கோயில் கங்கை கொண்ட இராஜ ராஜசோழன் இறைவனுக்கு அர்ப்பணித்த காணிக்கையாகும். அதே போல மதுரை மீனாட்சி அம்மன் காலா காலமாக அரசாண்ட பாண்டிய மன்னனின் பெருமையைப் பேசுவது. ஆம், இந்த மன்னர்கள் எல்லாம் வாழ்ந்தார்கள்; போர் புரிந்தார்கள்; இராச்சியத்தை விஸ்தரித்தார்கள், இத்தனையும் புரிந்தவர்கள் தமக்கென கட்டி வாழ்ந்த அரண்மனைகள் இன்று வரை நிலைக்கவில்லை. காரணம் அவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டதெல்லாம் கோயில் கட்டுவதாகவே இருந்தது. இதனால் தான் இந்தக் கோயில்கள் எல்லாம் 1000 வருடங்களுக்கும் மேலாக தலை நிமிர்ந்து நின்று தமிழனின் நாகரிகத்தைப் பறை சாற்றுகிறது.

இந்த மன்னர்கள் எகிப்தின் பரோக்கள் போல் தமது மறு பிறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை. தம்மை இறைவன் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. தமக்காக எதையும் செய்யவில்லை. தாம் வாழ்ந்த அரண்மனையைக் கூட பலம் வாய்ந்ததாகக் கட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவை எல்லாம் காலத்தால் அழிந்து விட்டது.

எகிப்திய அரசர்கள் தம்மையே முதன்மையாக எண்ணி தன்னை மையமாக வைத்தே பிரமிட்டுகளைக் கட்டினார்கள். ஆனால் எமது மன்னர்களோ மாறாக அரண்மனைகளைத் தமக்காகக் கட்டாமல் தமது வெற்றிகளின் பேறாகக் கிடைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து நிறைவு காணக் காண்கிறோம்.

தஞ்சைப்பெருங் கோயிலிலே மாமன்னனே கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளது போல ஒரு சிற்பம் உண்டு. இந்தக் கருத்து பல ஆராய்ச்சியளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிலரால் நிராகரிக்கப்பட்டுமுள்ளது. மன்னன் ஒரு தொழிலாளியாக நேரடியாக ஈடுபடாது விடினும், ஒரு தொழிலாளியாக மன்னனே கோயிலைக் கட்டினான் என அர்த்தங் கொள்வதில் தவறேதும் இருக்காது என்பது என் எண்ணம். இது அவனது வாழ்க்கையில் பெரிய செயலல்லவா?

இங்கு நாம் காண்பது என்ன? நல்லனவற்றை எல்லாம் இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பண்பையே நாம் இங்கு தெள்ளத் தெளிவாகக் காண்கிறோம். இவ்வாறு நோக்கும் போது நாம் எமது நாகரிகத்தில் கோயில் வகிக்கும் முக்கிய பங்கைக் காண்கிறோம். அந்த அரசர்களின் காலத்திலே இந்தக் கோயில்கள் எவ்வாறு இயங்கியது என்று இனிக் காண்போம்.

கோயில்கள் மக்கள் கூடும் இடங்களாக இருந்தது. இந்தக் கோயில்களைக் கட்டி எழுப்ப பல காலங்கள் சென்றது. இதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால் அவர்களுக்கு ஊதியமும் கிடைத்தது.

பெரிய பாறாங்கற்களை எடுத்து வருவதற்கு யானையின் பலமும் மனித சக்தியுமே  பயன்படுத்தப்பட்டது. லொறிகள், கிறேன்கள்  இல்லாத காலம் அல்லவா அது! இப்படியாகக் கட்டி முடிந்த கோயில்கள் கும்பாபிஷேகம் முடிந்து செயற்படத் தொடங்குகிறது...

இங்கு புரோகிதர்கள் மட்டும் பூஜைகளை நடத்தவில்லை. கோயிலுக்கென ஓதுவார்கள் என்கிற வர்க்கத்தினர் இருந்தனர். இவர்கள் பொருள் சுத்தமாக விளங்கும் படி பாடுவதில் வல்லவர்கள். கோயில் பூ அலங்காரத்துக்கு நந்தவனமும் அதனைப் பராமரித்துப் பூக்களால் இறைவனை அழகிய முறையிலே அலங்கரிப்பதற்கு பண்டாரங்கள் என்போர் இருந்தனர். உணவுப்பண்டங்களைத் தயாரிப்பதற்கு மடப்பள்ளி ஆட்கள் தயாராக இருந்தனர். கோயிலில் நான்கு கால பூசையிலும் இசையால் இறைவனை வழிபட இசைக்கலைஞர்களாக நாதஸ்வரகாரர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கோயிலுக்கு இறை வடிவங்களை அமைத்த வெங்கல சிற்பத் தொழிலாளர்கள் சிற்பிகள், இறைவன் புகழைப் பாடி ஆடுவதற்கு ஆடல் நங்கையர் ஆகியோரும் கோயிலைச் சூழ உள்ள புறங்களில் அமர்த்தப்பட்டிருந்தனர். தஞ்சைப் பெருங் கோயிலிலே ஒரே சமயத்தில் 400 தேவதாசிகள் இருந்தார்களாம். தேவதாசிகள் மட்டும் 400 ஆக இருந்தால் மற்றய வேலைகளில் எத்தனை பேர் ஈடு பட்டிருக்கக் கூடும் என ஓரளவுக்கு ஊகிக்க முடியுமல்லவா?

மொத்தத்திலே கோயிலை மையமாக வைத்து பல கலைகளும் தொழில்களும் நடந்தன. கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் உற்சவ நாட்களில் இசை நிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடந்தன.ஏன் பல கவிதைகளும் அரங்கேறின.

கோயில்களுக்கென நில புலன்களும் இருந்தன. கோயில்களே வங்கிகளைப் போன்று இயங்கின. பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தது. பலரது செல்வத்தை வைத்திருந்து அதற்கு வட்டியும் கொடுத்தது. இவற்றை எல்லாம் இன்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம்.

இன்றும் கூட ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்திய அரசுக்குக் கடன் கொடுப்பது யாவரும் அறிந்த விஷயம்.

கோயிலுக்கு நிலம் இருந்தது. கோயிலுக்குள் வங்கியும் இருந்தது. மொத்தத்திலே கோயில் ஒரு அரச ஸ்தாபனம் போலவே இயங்கியது எனலாம்.
(ATBC வானொலியில் 23.10.18 அன்று ’ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)

வயலின்


இசை என்பது இசைய வைப்பது எனப் பொருள் படும்.’இசைக்கு இசையாதவன் மனிதனே அல்ல’ என அறிஞர் சோக்கிரட்டீஸ் சொன்னார். ஒருவன் இசைக்கு இசையவில்லை எனில் அவன் கொலையும் செய்யக்கூடிய பாதகனாக இருப்பான் என்பது அதன் கருத்து.

பாமரன் முதல் பல்மொழிப்பண்டிதன் வரை எவரையும் தன் வசப்படுத்துவது இசை. இந்த இசையானது தன்னையே மறக்கச் செய்வது. இது மொழி,பிரதேசம் அத்தனையையும் கடந்து உயர்ந்து நிற்பது.

இவ்வாறு மொழியைக் கடந்து நிற்பது வாத்திய இசைக்கும் பொருந்தும். அருமையான இசையைக் கேட்கும் போது எமது உள்ளம் அதில் லயிக்கிறது.சாதாரண மனிதனையே இசை இவ்வாறு கவர்ந்தால் அதில் மேதைகளாக இருப்பவர்கள் பற்றிக் கூறவும் வேண்டுமா?

இந்தியப் பெரும் கண்டத்தை ஐரோப்பியர் ஆண்டு வந்த காலத்திலே அவர்களது நாகரிகமும் இந்தியாவிற்கு வந்தது.அவர்களது Band வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.இசைப்பிரியர்களான மன்னர்களின் சமஸ்தானங்களிலே மேலைத்தேயக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வயலின் அல்லது பிடில் என அழைக்கப்படும் வாத்தியம் இவ்வாறே இந்தியாவை வந்தடைந்தது.

இன்று கர்நாடக இசைக்கச்சேரிகள் எதுவுமே வயலின் பக்கவாத்தியம் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுச்சாமி தீட்சிதர் ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து வயலினைக் கற்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அதே காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் வடிவேலுப்பிள்ள. அவரும் வயலினைக் கற்றுக் கொண்டார்.

நாட்டியப் பரம்பரையில் வந்த வடிவேலு தான் இந்த வாத்தியத்தை முதலிலே நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன் படுத்தினாராம். இவை யாவும் நடந்தது இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகும்.

இவர்களைத் தொடர்ந்து பல வித்துவான்கள் வயலினை வாசித்தது மட்டுமல்லாது கர்நாடக இசைக்கும் மேலும் மெருகூட்டினார்கள். வயலின் மனிதனின் குரலோடு இசைந்து செல்லக்கூடிய ஒரு வாத்தியமாகும்.இதனால் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இந்த வயலின் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டது. எங்கிருந்து வந்தாலும் எமது இசைக்கு வயலினால் மெருகூட்ட முடியும் என்னும் போது எமது கலைஞர்கள் அதனை அன்புடம் அணைத்துக் கொண்டார்கள்.

இந்த வயலின் கர்நாடக இசைக் கச்சேரிகளில் ஒத்திசையாக வாசிக்கப்படுகிறது. அது தவிர, பலர் தனியாகவே இந்த வாத்தியத்தை வாசித்துக் கச்சேரி செய்வது வழக்கம். தற்போது இந்த வாத்தியம் இருவராக அல்லது மூவராக சேர்ந்தும் வாசிக்கப்பட்டு வருகிறது.

இந்த வாத்தியத்தை வாசிப்பதில் மேதையாகத் திகழ்ந்தவர் மைசூர் செளடய்யா என்ற மேதை. இவரது வாசிப்பால் கவரப்பட்டவர்கள் பலர். செளடய்யாவின் மறைவுக்குப் பின் அவருக்கு அவரின் ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் கட்டினார்கள். அந்த மண்டபத்தை செளடய்யா வாசித்த வயலின் உருவிலேயே அமைத்துள்ளார்கள்.






( 1943ம் ஆண்டு வெளிவந்த கன்னடத் திரைப்படமான வாணியில் ஸ்ரீ செம்பை வைத்தியநாதர் பாட, பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்க, செளடய்யா வயலின் இசைக்கும் கச்சேரியை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். இந்தப் படத்தினைத் தயாரித்தவரும் வயலின் மேதை செளடய்யா அவர்களே.)

https://www.youtube.com/watch?v=j-8eA7Fl4q4

 ஒரு தாழ்வான இடத்திலேயே இந்த மண்டபம் அமைந்துள்ளது. பக்கத்திலே அமைந்திருக்கும் மேட்டில் நின்று பார்த்தால் இந்த வயலின் உருவம் அழகாகத் தெரியும். அந்த வயலினின் தந்திக்கம்பிகளாக அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் கொடுக்கும் மின்சாரக் கம்பிகள் பாவிக்கப்பட்டிருப்பது அதனை அமைத்த  கட்டிடக் கலைஞனின் செய்திறனுக்கும் கலாவிற்பன்னத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டும் கலார்ப்பனமுமாகும். பெங்களூருக்குப் போனால் இதனைப்பார்க்கத் தவறாதீர்கள். ஆமாம், ஒரு வயலின் மேதைக்கு ஒரு கட்டடக் கலைஞன் செலுத்திய காலாஞ்சலி அதுவாகும்.

இனிமேலும் நாம் வயலின் மேற்கத்திய வாத்தியம் எனக்கூறுவதா? கர்நாடக சங்கீதம் தத்தெடுத்துக் கொண்ட குழந்தையன்றோ இது! இந்த வயலினை வாசிப்பதில் மேற்கத்தியவர்கள் வியக்கும் வண்ணம் கர்நாடக இசைக்கலைஞர்கள் வாசித்து வருகிறார்கள்.மார்கழியில் சென்னையில் நடக்கும் இசை விழாக்களுக்கு மேற்கத்திய வயலின் இசைக்கலைஞர்கள் பார்வையாளர்களாக வருவதுடன் நில்லாது எம்மவரிடம் வயலின் வாசிக்கும் முறைகளையும் கற்று வருகிறார்கள்.

எமது கர்நாடக சங்கீத வித்துவான்கள் வயலினைத் தம்வசப்படுத்தியதுடன் நின்றுவிடவில்லை. 1927ல் ஓர் அதிசயம் நடந்தது. மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத மேதை Beethoven க்கு சென்னையிலே ஓர் அஞ்சலி நடந்தது. நம் நாட்டிலே தியாராஜருக்கும் கொடுக்கும் மரியாதையைப் போல் மேற்கத்தய நாட்டவர்கள் Beethoven ஐ மதிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இந்தியா சாஸ்திரிய இசையைப் பயின்ற இசைக்குழு ஒன்று தமக்கு முற்றிலும் பயிற்சியற்ற Beethoven இன் சிம்பொனியை துல்லியமாக இசைத்து அந்த அஞ்சலியைச் செலுத்தினார்கள்.இது ஒரு விசேஷ சாதனையாகும். அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. Beethoven மறைந்த நூறாண்டு நிறைவையொட்டி மைசூரில்  Beethoven நினைவு வாரமே கொண்டாடினார்கள்.

இந்திய இசைக்குழு ஒன்றிற்கு German இசைக்கலைஞர் ஒருவர் ஒரு மாத இசைப்பயிற்சி அளித்தார். அவரின் பெயர் ஓடோ ஸ்மித். அதனை நடத்தி வைத்தவர் அன்றய மைசூர் மகாராஜா.

திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தியாகராஜர் திருவுருவத்தின் முன் ஆராதனை நடைபெறுவது போல் Beethoven விழாவிலும் மேடையில் அவரின் சிலை ஒன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பியானோ முன் நிறுத்தப்பட்டதாம்.

ஆமாம், இசை நுணுக்கங்களை இரசிக்கும் மனோபாவம் இருந்தால் தியாகப்பிரம்மத்திற்கு கொடுக்கும் அதே அஞ்சலியை Beethoven ற்கும் கொடுப்பார்கள். சங்கீத அனுபவம் என்பது நுண் உணர்வுகளை வசப்படுத்துவது.அதற்கு மொழி, தேசியம் என்ற வரையறை கிடையாது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இசைக்கும் தமிழுக்கும் செய்த சேவை அளப்பரியது. இவர்களால் உருவாக்கப்பட்டதே தஞ்சை சரஸ்வதி மகால் என்னும் நூல் நிலையம். இந்த அரசின் கனக்கு வழக்கு ஆவணங்களிலே பியானோ என்னும் வாத்தியத்தைச் செப்பனிட்ட இமானுவல் நேபராயி என்பவருக்கு கொடுத்த பண விபரம் உண்டு. அதே போல் அரண்மனை இசைக்கலைஞர் பட்டியலிலே எலிசபெத். மக்கரின் என்ற பெயர் காணப்படுகிறது. இதன் மூலம் அன்றய மராட்டிய மன்னர்கள் இந்திய சாஸ்திரிய இசையைப் போல மேற்கத்திய சாஸ்திரிய இசையையும் போற்றி வந்துள்ளமையை அறிகிறோம்.

கடந்த 60 வருடங்களுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜா கிருஷ்னராஜ உடையாருக்கு பியானோ கற்ருக்கொள்ள ஆசை ஏற்பட்டதாம். அதற்காக இங்கிலாந்தில் இருந்து 6 மாத ஒப்பந்தத்தின் பேரில் ஒரு தேர்ந்த பியானோ வித்துவான் வரவழைக்கப்பட்டார். அவர் வந்த சமயத்தில் மகாராஜாவுக்குக் கற்றுக் கொள்ள நேரமில்லாமல் இராஜாங்கக் காரியங்கள் அதிகரித்து விட்டது. அப்போது சமஸ்தானத்தின் வீணை வித்துவானாக இருந்த ஷேஷண்ணாவை பியானோவைக் கற்றுக் கொள்ளச் செய்தனராம்.

பெரும் மேதையான ஷேஷண்ணா முதல் மாதத்திலேயே இந்த வாத்தியத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு விட்டார் என்றும்; இரண்டு மாதத்தில் பியானோ ஆசிரியருக்குத் தெரிந்த அத்தனை மேற்கத்திய சாகித்தியங்களையும் கற்றுக் கொண்டு தன் ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்தினாராம்.

ஆமாம், நாதம் என்பது மொழி, பிரதேசம் என்ற கட்டுப்பாட்டை கடந்த ஒரே மொழி. இசை இசைய  விரும்பியவனை தன் வசப்படுத்துவது. தன் நாட்டின் இசையை அறிந்தவன் பிற நாட்டின் இசையையும் உள்ளம் திறந்து இரசிப்பான்.

( ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் 27.4.2005இல் ஒலிபரப்பானது)

Tuesday, December 18, 2018

அறிமுகம்


வாசகர்களுக்கு வணக்கம்!

இங்கு இது வரை நான் வானொலியில் ஒலிபரப்பிய ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற தலைப்பிலான உரையாடல்கள் ஒலிவடிவில் இருந்து எழுத்துருப் பெறும்.

தமிழ் வாசகர்கள் இப் பெறுபேற்றின் ஒரு சிறு அம்சத்தையேனும் பெற்றுப் பயன் பெறுவார்களாயின் அதுவே இதனை உருவாக்கியதன் பயனென மகிழ்வேன்.