Monday, March 11, 2019

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா



“அம்மா தன்னிடம் எதையும் வைத்துக் கொள்ளாமல் தான் கற்ற எல்லாவற்றையுமே தன்னிடம் நடனக் கலை கற்ற பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டார், அவர் எதையுமே ஒளித்து வைக்கவில்லை”

இப்படியொரு நெகிழ்வானதொரு அனுபவ மொழிகளை மகன் பகிர, தாய் கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில்
நிகழ்ந்தது.நாட்டிய கலாநிதி மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி கார்த்திகா கணேசரின் மூன்று  நூல்களின் அறிமுக நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை திருமதி சோனா பிரின்ஸ் அவர்களின் வரவேற்புரையுடன், இறை வணக்கத்துடன் திரு திருமதி பவராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். 





தலைமை தாங்கி திரு வை.ஈழலிங்கம் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தார்.  கார்த்திகா கணேசரின் முதல் குருவாக விளங்கிய பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர் தன்னுடைய இணுவில் மண்ணைச் சேர்ந்தவர் என்று பெருமையோடு குறிப்பிட்ட அவர் தொடர்ந்து புலம்பெயர் வாழ்வில் ஈழத்தமிழர் கழகத்தின் நிகழ்வுகளில் பல்வேறு நாட்டிய நாடகங்களை அரங்கேற்றியதோடு தொடர்ந்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் தன்னுடைய படைப்பாற்றலைக் காட்டி வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து செளந்தரி கணேசன் அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்திய போது ஒரு படைப்பு எல்லோருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு 56 ஆண்டுகளாக நடனத் துறையில் இயங்குபவர் கார்த்திகா என்று  சிலாகித்துப் பேசினார். 

“தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்” என்ற நூலைப் பற்றிப் பேச வந்த கலாநிதி ஆ.சி.கந்தராஜா அவர்கள்
தன்னுடைய வாழ்வியலில் நாற்பது ஆண்டுகளாக பரத நாட்டியம் ஒன்றைத்தானும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை என்றும், முதல் முதலாக இந்த வாய்ப்பு சிட்னிக்குக் குடி பெயர்ந்த பின்பு கார்த்திகா கணேசர் அவர்களின் பரத நாட்டிய நிகழ்வின் வழியாகவே கைகூடியது என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்தில் பரதக் கலை செழுமை பெறுவதற்கு முந்திய காலகட்டத்தின் கூத்து மரபு, சின்ன மேளம் போன்ற நாட்டிய, நாடக மரபுகளைத் தன் அனுபவங்களினூடு இந்தப் புத்தகத்தை ஒப்பு நோக்கி ஆய்ந்து பேசினார்.





அவருடைய உரையில் ஈழத்தின் பண்பாட்டு மரபியலில் நிகழ்ந்த மாற்றம் குறித்த ஆழமான பார்வை இருந்தது. காலவோட்டத்துக்கேற்ப நம் கலையிலும் புதுமை புகுத்தப்பட வேண்டும் அன்றில் அது அழிந்து விடும் என்று கார்த்திகா கணேசர் முன் வைத்த சிந்தனையும், அதை அவர் செயல் வடிவத்தோடு தன் நாட்டியப் பண்பில் செய்து காட்டியதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிகழ்வு நடைபெறப் போகிறது என்றறிந்து கார்த்திகா கணேசர் அவர்களின் கலையுலக வாழ்க்கையை வாழ்த்தி திருமதி ராணி பாலா கவிதைப் பகிர்வு மற்றும் வாழ்த்து மடலைச் சட்டம் போட்டுப் பகிர்ந்தார்.

“காலம் தோறும் நாட்டியக் கலை” என்ற நூலை ஆய்வு செய்த செல்லையா பாஸ்கரன் அவர்கள் 
பேராசிரியர் மெளனகுரு, பேராசிரியர் இந்திரபாலா மட்டுமன்றி சிங்கள விமர்சகர்களாலும் கார்த்திகா கணேசர் விதந்து பாராட்டப்பட்டதை நூல் வழியே சிலாகித்தார். குறிப்பாக இந்திரபாலா குறிப்பிட்ட “சிங்கப் பார்வை” என்ற சொலவாடையைக் கோடிட்டுக் காட்டினார்.
ஆடல் கலையில் கூத்து மரபு பின்பற்றப்பட வேண்டும் என்ற கார்த்திகா கணேசரின் வாக்கை முன் மொழிந்ததோடு நான்கு ஆண்டுகளில் 8 நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றிய அசுர சாதனையைச் சொல்லி வியந்தார். எல்லாளன் - துட்டகைமுனு நாட்டியத்தை போர் தர்மத்தின் நோக்கோடு கையாண்ட திறனைக் காட்டி இதன் வழி பரவலான விமர்சனத்தையும் கார்த்திகா எதிர்கொண்டதைக் குறிப்பிட்டார்.


இயேசு காவியம் மேடையேற்றலில் கார்த்திகா கணேசரின் புதுமையை தலைமையுரை ஆற்றிய ஈழலிங்கம் அவர்கள் ஞாபகப்படுத்தினார்.

இந்திய நாட்டியத்தில் திராவிய மரபு நூல் பற்றிய திறனாய்வை நிகழ்த்த வந்த திரு தனபாலசிங்கம் அவர்கள், தன்னுடைய தீவிர இலக்கிய ரசனையின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் சிலப்பதிகாரத்தோடு ஓப்பிட்டும், பொதுமைத் தன்மையோடும் நூலை ஆய்வு செய்தார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் தான் பரதக் கலையின் முதல் நூலென்றால் மாதவி குறித்து சிலப்பதிகாரத்தில் வரும் பாடலில் அடையாளப்படுத்தும் நாட்டிய நூல் இதையே குறிக்கிறதா அன்றித் தனித்துவமாக முன்னெழுந்த படைப்பா என்று நூலாசிரியரைக் கேள்வியெழுப்பினார்.

சிட்னியில் வாழும் இளைய தலைமுறையினரை மேடையேற்றித் தன் நூல்களை வழங்கிக் கெளரவித்தார் கார்த்திகா கணேசர். இருப்பினும் இந்த நிகழ்வின் வழியாகச் சிலாகிக்கப்பட்ட நூல்களின் சிறப்பை வந்திருந்தோர் உடன் வாங்கிப் 
படிக்க முடியாதது செய்தது ஒரு குறையாகவே பட்டது.

கார்த்திகா கணேசர் அவர்களது மகன் அமிழ்தன் தன்னுடைய தாயார் எவ்வளவு அர்ப்பணிப்போடு நாட்டியக் கலைக்காக இயங்கியதைத் தன் தொட்டில் பருவத்தில் இருந்து நேரே கண்டு அனுபவத்ததைச் சுவையான சம்பவங்கள் தொட்டுப் பேசினார். 
தினமும் ஒரு தவம் போலத் தான் கற்ற நடனக் கலையைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அம்மா, அங்கே பார்வையாளராக யாரும் இருக்காத விடத்தும் அவர் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பார் என்றார் மகிழ்னன்.

அப்போது பொப்பிசைப் பாடல்களுக்குப் பாட்டெழுதிப் பிரபலமான ஈழத்து இரத்தினம் என்ற பாடலாசிரியரை வைத்து இராமாயண நாட்டிய நாடகத்தை அரங்கேற்றிய புதுமையைப் பாடல் வரியின் சந்தமிசைத்துப் பாடி மேற்கோளுடன் குறிப்பிட்டார். புதுமைகளை ஏற்றுக் கொள்ளாத அந்தக் காலத்தில் வழுவூர் இராமையாப் பிள்ளை புதுமைகளைப் பழைமை போல் காட்டி கார்த்திகா கணேசர் வழியாகக் கொண்டு வந்தாராம்.

அந்தக் காலத்தில் மேற்படிப்புப் படிக்கவெண்ணிப் பெண்கள் மேலை நாடுகளுக்குப் போகும் போது ஏன் தன் மனைவி நாட்டியம் பயில இந்தியா செல்லக் கூடாது என்ற தனது கணவரின் பரந்த சிந்தனையின் வெளிப்பாடே தன் திருமணத்துக்குப் பின் நாட்டியக் கலையில் தீவிரமாக இறங்கியதன் பின் புலம் என்றார் ஏற்புரை ஏற்க வந்த கலாநிதி கார்த்திகா கணேசர்.



பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாட்டியக் கலை வடிவம் குறித்த தேடலில் இருந்த வேளை கார்த்திகா கணேசரது மூன்று கட்டுரைகளைப் பார்க்கும் வாய்ப்புக்  கிட்டி அதன் வழியாகத் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களின் தூண்டுதலில் தொடராக எழுதி நூலுருக்கொண்ட நினைவுகளைப் பகிர்ந்ததோடு புலம் பெயர் வாழ்வில் யசோதா பத்மநாதன் போன்றோர் தன் எழுத்துகளைச் சிலாகித்துத் தொடர்ந்து எழுதத் தூண்டியதன் பேறாக தமிழ் முரசு அவுஸ்திரேலியாவுக்கு எழுத வந்த கதையையும் சொன்னார். பேராசிரியர் மெளனகுருவிடமிருந்து கூத்து மரபின் ஆழமான நுட்பங்களை அறிந்து கொண்டார். பேராசிரியர் சிவத்தம்பி தன்னுடைய நாட்டிய நாடகத்துக்கான அறிமுக உரையைக் கொடுத்ததோடு பல மேடைகளுக்குத் தொடர் ரசிகனாக வந்து சிறப்பித்தார். இவ்வாறான அறிஞர் தொடர்போடு கார்த்திகா கணேசரின் கலைப்பயணம் தொடர்கிறது.

தன் தாயிடம் நடனம் பயில வரும் மாணவிகள் அசைட்டையோடு கற்கும் போது மனம் சளராமல் ஜதிகள் போட்டுக் கொண்டிருக்கும் தன் தாயிடம் அதைக் காட்டி விமர்சனம் செய்யும் மகனுக்குக் கார்த்திகா கணேசர் சொல்வாராம் இப்படி
“நடனத்தைக் கற்க வேண்டும் என்று ஆசையோடு வரும் பிள்ளையை ஆரம்பத்திலேயே விமர்சித்து அதை வெறுக்க வைக்கக் கூடாது, நாளாக நாளாகத் தன்னிடம் இருந்த குறை தெரிந்து தன்னைத் திருத்திக் கொள்ளும், அதுதான் கலை”.
இந்த அனுபவ மொழிகளில் தான் பெரிய தத்துவமே ஒளிந்திருக்கிறது.





































Tuesday, March 05, 2019

கார்த்திகா கணேசரின் புத்தக அறிமுகவிழா (2.3.19) நிகழ்வுகள்

படங்களும் பார்வையும்:
மணிமேகலா.
நன்றி: தமிழ்முரசு அவுஸ்திரேலியா

கடந்த 2.3.1019 அன்று மாலை 6.00 - 9.00 மணிவரை வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் சந்நிதியின் மன்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் கார்த்திகா கணேசரின் காலந்தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் 1969 இல் ‘தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற நூல் வெளியாகியது. ’காலந்தோறும் நாட்டியக்கலை’ என்ற நூல் 1980இல் வெளியாகி இரு பதிப்புகளைக் கண்டு தமிழ்நாட்டரசின் முதலாம் பரிசையும் வென்றிருந்தது.1984இல் வெளியான  ’இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றதோடு  கடந்த வருடம் குமரன் புத்தக இல்லத்தினரால் மீளச்சுப் பெற்றுள்ளது.


இவைகளின் அறிமுக நிகழ்வு திரு.ஈழலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் திரு.திருமதி.பவராஜா தம்பதியினர் மங்கள விளக்கேற்ற பக்தி பூர்வமான இறைவணக்கத்தோடு ஆரம்பமானது. பேரா.ஆசி.காந்தராஜா, செ.பாஸ்கரன், ம. தனபாலசிங்கம் ஆகியோரினால் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியை வழிநடத்தியவராக சோனா பிரின்ஸ் அவர்களும்; கார்த்திகா கணேசரை அறிமுகப்படுத்தியவராக செளந்தரி கணேசனும் வாழ்த்துமடல் ஒன்றை வாசித்தளித்தவராக ராணி.பாலாவும் அமைந்திருந்தது நிகழ்ச்சிக்கு மேலதிக வசீகரத்தை அளித்திருந்தது.


நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் அவர்கள் பல்துறை விற்பன்னர். பரத நாட்டியத்தோடு மட்டும் நின்றுவிடாது நாட்டியத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் நிமித்தமாக பல்வேறு நாட்டியக் கலைகலையும் கூத்துகளையும் கற்றும் அறிந்தும் பழகியும் வந்துள்ளவர்; மேலும், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக தான் கண்டறிந்த பார்த்தும் படித்தும் சுமந்திருக்கும் அனுபவங்களைச் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வாரம் மூன்று நாட்கள் நிகழ்ச்சியாகத் தயாரித்தளித்து வருகிறார். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பல நாடுகளிலும் வாழ்ப் பெற்றதனால் தான் பெற்ற, கற்ற நாட்டிய அனுபவங்களை உலக மாணவர்களுக்கு இன்றும் கற்பித்து வருகிறார்.


 இந் நாள் நடந்த இவரது புத்தக அறிமுக நிகழ்வில் பேராசிரியர் ஆசி காந்தராஜா அவர்கள் பேசும் போது, ஈழத்தின் ஞானம் சஞ்சிகையின் அட்டைப்பட அதிதியாக கார்த்திகா.கணேசர் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வொன்றைச் சுட்டிக் காட்டி, யாழ்ப்பாணத்துச் சின்னமேள பண்பாடு நிலவிய ஒரு இறுக்கமான; கிடுகுவேலிக் கலாசாரம் நிலவிய சமூக சூழலில்; நாட்டியத்தை அதிலும் பெண்களுக்கான நாட்டியத்தையும் பெண்களையும் ‘ஆட்டக்காறி’, ’சதிர்’ எனப் பார்க்கும் யாழ்ப்பாணத்து மக்களின் சிந்தனை மரபுச் சூழலில் துணிச்சலான சிந்தனையோடு முகிழ்ந்த கார்த்திகா. கணேசரையும் அவரது செயல்திறனையும் விதந்து பாராட்டிப் பேசினார்.

மேலும் கார்த்திகா தன் பதின்ம வயதில் திருமணம் முடித்ததையும் அவரது கணவரே இவரை நடனக் கலையைக் கற்க தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தமையையும் சுட்டிக் காட்டி, அன்றே புதுமை படைத்த ஒரு புதிய தோற்றப்பாட்டை  அறிமுகப்படுத்தி அவரது துணிச்சலையும் புதுமை படைக்கும் வேட்கை அவரது இயல்பிலும் அவருக்குக் கிடைத்த சூழலிலும் அமைந்து விளங்கிய பாங்கையும் விபரித்துப் பேசினார்.

அது பலருக்கும் அக்காலச் சமூகச் சூழலையும் அப்பின்னணி நிலவிய காலப்பகுதியில் அவருடய துணிச்சலையும் அவருக்குக் கிட்டிய வாய்ப்பையும் விளங்கிக் கொள்ள அது ஒரு சிறந்த திறவு கோலாக அமைந்தது.


பேராசிரியரின் பேச்சு நிறைவு பெற்ற போது ஆலய பூசைகள் நடைபெறும் நேரமும் நெருங்கி விட்டிருந்ததால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல அரை மணி நேர இடைவேளை விடப்பட்டது. அது எல்லோரும் ஆற அமர சிரமபரிகாரங்களைச் செய்து கொள்ளவும் தேனீர் சிற்றுண்டிகளைச் சுவைத்து பின் அமரவும் போதுமான மணித்துளிகளைக் கொடுத்திருந்தது.


அன்றய தினம் இரு அரங்கேற்றங்கள், பழைய மாணவர்சங்க நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் இருந்த போதும்; இடைவேளை விட்டு மீண்டும் சபை தொடங்கிய போது அனைத்து பேரும் மீண்டும் வந்திருந்தது நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருந்ததையும் மக்களின் அறிவின் பாலான ஆர்வத்தை எடுத்துக் காட்டியதாகவும் இருந்ததென்பதை இச் சந்தர்ப்பத்தில் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.




நிகழ்வில் அடுத்ததாக செ.பாஸ்கரன் அவர்கள் பேச வந்தார். ‘சிங்கத்தின் பார்வை’ கொண்ட கார்த்திகா என அவர் தொடங்கிய பேச்சும் அது குறித்து அவர் சொன்ன விளக்கமும் ஒட்டு மொத்த புத்தகத்தையும் கார்த்திகா யார் என்பதையும் விளக்கப் போதுமானதாக இருந்தது. கார்த்திகாவின் புரட்சிகரமான சிந்தனைகளும் அதனை நடைமுறைப்படுத்தியதில் அவர் எதிர் கொண்ட சவால்களும் விமர்சனங்களும் - எவ்வாறிருந்த போதும் தனக்கு சரி எனப்பட்டதை செய்வதில் அவர் தயங்காது நின்ற நிலைப்பாடும் காட்சிகளாகவும் கருத்துகளாகவும் சம்பவங்களாகவும் பாஸ்கரனின் பேச்சில் அடிநாதமாக நின்றொலிக்கக் கார்த்திகா குறித்த ஒரு  பிரதிபிம்பம் கேட்டோர் உள்ளங்களில் சிறப்பாகச் சென்று பதிந்தது. 

அவரைத் தொடர்ந்து சிறந்த பேச்சாளரும் தமிழறிருமான ம.தனபாலசிங்கம் அவர்கள் பேச எழுந்தார். ’இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு என்ற புத்தகத்தை அவர் அறிமுகம் செய்த போது ‘மாற்றங்களின் முகவராக’ - Agent for change - அவர் விளங்கியவாறை சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் பாரதியோடு  ஒப்பிட்டும் தொட்டும் சுவைத்தும் சொன்ன பாங்கு ஒரு இலக்கிய விருந்தாகவும் அமைந்ததென்றே சொல்ல வேண்டும். இலக்கியங்களில் சிறந்த புலமை போகிய அவரது அனுபவத்தில் இருந்து பொங்கிப் பிரவகித்த அவர் பேச்சில் சொற்கட்டும் ஆற்றொழுக்கும் புலமையும் ஊன்றிப் பார்க்கும் நோக்கும் வெளிப்பட்டு நின்றது. அவர் தன் பேச்சில் தமிழ் இலக்கியத்தில் பரத சாஸ்திரத்துக்கு முன்னர் தமிழில் நுண்கலை குறித்த  நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன என்றும் ஒரு ஓவிய நூல் குறித்த குறிப்பு மணிமேகலையிலும் நன் நூல் பற்றிய குறிப்பொன்று சிலப்பதிகாரத்திலும் வருவதைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.



பின்னர் முதற்பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. மூன்று புத்தகங்களுக்குமான முதல் பிரதிகளை முறையே யசோதா.பத்மநாதன், பானு.போல், றேசி.டைட்டஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அவர்களை அவர் அழைக்கும் போது முதலாமவர் தன் உற்ற சினேகிதி என்றும்; தன் கணவர் உயிரோடு இருந்த காலத்தில் தான் எழுதும் புத்தகங்களுக்கான முதல் விமர்சகராக அவரே இருந்தார் என்றும்; பல வாதப்பிரதிவாதங்கள்; கருத்துப் பகிர்வுகள் இவற்றின் பின்பாக வரும் முடிவுகளின் பின்னரே ஒரு புத்தகம் புத்தக உருப்பெறும் என்றும்; அவருடய இழப்பின் பின் அந்த இடத்தை இந்த சினேகிதம் நிரப்புவதாகவும் கூறி முதல்பிரதியை யசோதா.பத்மநாதனுக்கு வழங்கி நட்பினை மகிமைப்படுத்தினார்.

அடுத்த பிரதியை பானு.போல் என்ற இளம் நாட்டிய நர்த்தகிக்கு வழங்கி; அடுத்த சந்ததி நடனக் கலையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியை இவ் இளம் நாட்டிய தாரகையின் அண்மைக்கால நடன நிகழ்வுகள் பறைசாற்றி நிற்கின்றன என்று விளக்கமளித்து; தன் இனத்துக்கும் மொழிக்கும் கலைக்கும் மனிதத்துக்கும் பானு செய்து வரும் பணியினை பலரும் அறிய வைத்து அடுத்த புத்தகத்தை பானு.போலுக்குக் கையளித்தார்.

மூன்றாவது பிரதியை றேசி.டைட்டஸ் இற்கு அவர் தன் அரங்கேற்ற நிகழ்வில் நடன கட்டமைப்புக்குள் நின்றவாறே தன் சொந்த படைப்பாக ஜேசுபிரானின் மகிமைகளையும் பாடுகளையும் பரத நடனத்திலே வடிவமைத்து செய்து காட்டிய புதுமையையும் தத்துரூபத்தையும் புகழ்ந்து வியந்து பாராட்டி மூன்றாவது பிரதியை றேசிக்குக் கொடுத்து பெருமை கொண்டார்.


இங்கு நான் குறிப்பிட விரும்பும் விடயம் என்னவென்றால் ஒரு உண்மைக்கலைஞன் கலை எங்கு உயிர்ப்புடன் விளங்கினாலும் அதனைக் காணவும் வியக்கவும் பாராட்டவும் தயங்க மாட்டான் என்ற உண்மையை நான் அறிந்து கொண்டது தான்.

இம் மாணவிகள் அவரது மாணவிகள் அல்லர்; எனினும் ஒரு குருவாக எதிர்கால ஒளி விளங்கும் பிள்ளைகளை அடையாளம் கண்டு, குறுகிய மனோ பாவங்களில் இருந்து விலகிப், பெருந்தன்மையோடு  இவ்விளம் மாணவ மணிகளுக்கு அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வளங்கிய அவரது குணாம்சம் அவர் ஒரு சிறந்த குரு என்பதற்கும்; தமிழ் சமூகம் சார்ந்த அக்கறை கொண்டவர் என்பதற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.

இந் நிகழ்வின் பிறகு ஏற்புரைக்கு முன்பதாக கார்த்திகா. கணேசரின் ஏக புதல்வன் அமிழ்தன் ‘Inside story' என சில சுவாரிசமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டமை சபையை நிமிர்ந்து உட்கார வைத்தது. தினம் தோறுமவர் செய்து வந்த பயிற்சிகளும் ஒரு விடயத்தையே பல்வேறு மேடைகளில் பல்வேறு விதமாக ஆடி அசத்திய தன்மைகளையும் அவர் பகிர்ந்து கொண்ட போது இந் நடன ஆசிரியரிடம் இருந்த அர்ப்பணிப்புணர்வும் தான் கற்றுக் கொண்ட கலையில் அவருக்கிருந்த ஆழமான புலமையையும்  சபை உணர அது ஒரு வாய்ப்பாக இருந்தது. மாணவருக்கு அவர் எதையும் மறைத்ததில்லை; எதையும் கொடுக்க அவர் மறுத்ததில்லை என்று நெகிழ்ச்சியோடு சொன்னது இன்னும் மனதில் எதிரொலிக்கிறது.


இறுதியாக ஏற்புரை வழங்க வந்த கார்த்திகா. கணேசர் அவர்கள் தன் கணவர் குறித்தும் தனக்கு வாய்ப்பாக அமைந்திருந்த புலமைத்துவ சான்றோரின் நட்பும் நெருக்கமும் தன்னை வளர்த்த பாங்கினையும்; தமிழ் நாட்டிலும் வெளி நாடுகளிலும் தனக்கு வாழக்கிடைத்ததால் கிட்டிய அனுபவங்கள் தன்னை வளம்படுத்திய தன்மையையும் அடக்கத்தோடு கூறி,  தன் மாணவிகளையும் அறிமுகப்படுத்தி நன்றி கூறி அமர்ந்தார்.

நிகழ்ச்சி இனிதே 9.15 அளவில் நிறைவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் இறுதி வரை வந்திருந்த பார்வையாளர்கள் யாரும் எழுந்து செல்லாது அமர்ந்திருந்து உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது அது ஒரு ‘கனதியான’ சபை என்பதை கூறி நின்றது.

இருந்த போதும் புத்தகங்களை வாங்க முடியாது போனமை மிக்க வருத்தத்துக்குரிய ஒன்றாக இருந்தது என்பதை நிச்சயமாகக் குறிப்பிட்டாக வேண்டும். கன்பரா போன்ற அண்மை மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள்; மேலும் தமிழகத்துக்குப் பயணம் போகும் போது  புத்தகங்களை வாங்கிப் போக என வந்திருந்த பார்வையாளர்கள் என நானறிந்த சிலர் தம் ஏமாற்றங்களைத் தெரிவித்துக் கொண்டனர். ஆலய நிர்வாகம் புத்தக விற்பனைக்கு அனுமதி வழங்கவில்லை என்பது மிக்க வருத்தத்திற்குரியது.

மேலும் கச்சிதமாக அமைந்திருந்த அக்கட்டிடத்தில் சிறப்பாக அமைந்திருந்த மேடையில் கார்த்திகா. கணேசரின் மாணவிகளின் ஒரு நடன நிகழ்வாவது முத்தாய்ப்பாய் அமைந்திருந்தால் அது இந் நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டி இருந்திருக்கும் என்பதையும் சொல்லாமல் செல்ல முடியவில்லை.

இத்தகைய சில தன்மைகள் நம் கைகளுக்கு அப்பாலானதாக இருந்திருக்கும் என்ற போதிலும், நிகழ்ச்சி ஒட்டு மொத்தமாக ‘structured' ஆக; ஒருவிதமான ஒழுங்கமைப்புக்கும் நேரத்துக்கும் உட்பட்டு கார்த்திகா. கணேசர் யார் என்ற பிம்பத்தையும் அவரது புத்தகங்கள் எதைப் பேசி நிற்கின்றன என்ற சுருக்கமான அறிமுகத்தையும்  பார்வையாளருக்கு வழங்கியது என்பதில் இந் நிகழ்வு கச்சிதமான வெற்றியைப் பெற்றது என்றே சொல்வேன்.

சிட்னியின் தீவிரமான ஒரு ரசிக கூட்டத்தினர் கார்த்திகாவையும் அவரது புத்தகங்களையும் அவரது வரலாற்றுப் பங்களிப்பையும் உள்ளது உள்ளபடி அறிந்திருப்பர்.

இந் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்!.

கார்த்திகா.கணேசர் ஒரு பெண்ணாக; கம்பீரமாக நின்று, தான் சார்ந்த சமூகத்துக்கும் கலைக்கும் வரலாற்றுக்கும் அவர் அளித்து நிற்கும் பங்களிப்புக்காக அவருக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

’போற்றி தாயென்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாயென்று பொற்குழல் ஊதடா

ஊது கொம்புகள்; ஆடு களி கொண்டே’ - பாரதி -

தமிழும் தமிழரும் அவர்தம் கலைகளும் உலகெங்கும் சிறந்து வாழ்வதாக!பரந்து வெல்வதாக!!


தமிழ்முரசு அவுஸ்திரேலியாவில் வெளியாகியுள்ள இந் நிகழ்ச்சி குறித்த பார்வைக்கு கீழ் வரும் இணைப்புக்குச் செல்க:

தமிழ்முரசு அவுஸ்திரேலியா