Wednesday, December 26, 2018

தஞ்சைப் பெருங் கோயில்



எமது கோயில்கள் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடங்களாகப் போற்றப்படுகின்றன. சிறந்தது எதுவோ அதையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பது எமது வழமை. இவ்வாறே நாம் எமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

தஞ்சைப்பெருங் கோயில் கங்கை கொண்ட இராஜ ராஜசோழன் இறைவனுக்கு அர்ப்பணித்த காணிக்கையாகும். அதே போல மதுரை மீனாட்சி அம்மன் காலா காலமாக அரசாண்ட பாண்டிய மன்னனின் பெருமையைப் பேசுவது. ஆம், இந்த மன்னர்கள் எல்லாம் வாழ்ந்தார்கள்; போர் புரிந்தார்கள்; இராச்சியத்தை விஸ்தரித்தார்கள், இத்தனையும் புரிந்தவர்கள் தமக்கென கட்டி வாழ்ந்த அரண்மனைகள் இன்று வரை நிலைக்கவில்லை. காரணம் அவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டதெல்லாம் கோயில் கட்டுவதாகவே இருந்தது. இதனால் தான் இந்தக் கோயில்கள் எல்லாம் 1000 வருடங்களுக்கும் மேலாக தலை நிமிர்ந்து நின்று தமிழனின் நாகரிகத்தைப் பறை சாற்றுகிறது.

இந்த மன்னர்கள் எகிப்தின் பரோக்கள் போல் தமது மறு பிறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை. தம்மை இறைவன் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. தமக்காக எதையும் செய்யவில்லை. தாம் வாழ்ந்த அரண்மனையைக் கூட பலம் வாய்ந்ததாகக் கட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவை எல்லாம் காலத்தால் அழிந்து விட்டது.

எகிப்திய அரசர்கள் தம்மையே முதன்மையாக எண்ணி தன்னை மையமாக வைத்தே பிரமிட்டுகளைக் கட்டினார்கள். ஆனால் எமது மன்னர்களோ மாறாக அரண்மனைகளைத் தமக்காகக் கட்டாமல் தமது வெற்றிகளின் பேறாகக் கிடைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து நிறைவு காணக் காண்கிறோம்.

தஞ்சைப்பெருங் கோயிலிலே மாமன்னனே கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளது போல ஒரு சிற்பம் உண்டு. இந்தக் கருத்து பல ஆராய்ச்சியளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிலரால் நிராகரிக்கப்பட்டுமுள்ளது. மன்னன் ஒரு தொழிலாளியாக நேரடியாக ஈடுபடாது விடினும், ஒரு தொழிலாளியாக மன்னனே கோயிலைக் கட்டினான் என அர்த்தங் கொள்வதில் தவறேதும் இருக்காது என்பது என் எண்ணம். இது அவனது வாழ்க்கையில் பெரிய செயலல்லவா?

இங்கு நாம் காண்பது என்ன? நல்லனவற்றை எல்லாம் இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பண்பையே நாம் இங்கு தெள்ளத் தெளிவாகக் காண்கிறோம். இவ்வாறு நோக்கும் போது நாம் எமது நாகரிகத்தில் கோயில் வகிக்கும் முக்கிய பங்கைக் காண்கிறோம். அந்த அரசர்களின் காலத்திலே இந்தக் கோயில்கள் எவ்வாறு இயங்கியது என்று இனிக் காண்போம்.

கோயில்கள் மக்கள் கூடும் இடங்களாக இருந்தது. இந்தக் கோயில்களைக் கட்டி எழுப்ப பல காலங்கள் சென்றது. இதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால் அவர்களுக்கு ஊதியமும் கிடைத்தது.

பெரிய பாறாங்கற்களை எடுத்து வருவதற்கு யானையின் பலமும் மனித சக்தியுமே  பயன்படுத்தப்பட்டது. லொறிகள், கிறேன்கள்  இல்லாத காலம் அல்லவா அது! இப்படியாகக் கட்டி முடிந்த கோயில்கள் கும்பாபிஷேகம் முடிந்து செயற்படத் தொடங்குகிறது...

இங்கு புரோகிதர்கள் மட்டும் பூஜைகளை நடத்தவில்லை. கோயிலுக்கென ஓதுவார்கள் என்கிற வர்க்கத்தினர் இருந்தனர். இவர்கள் பொருள் சுத்தமாக விளங்கும் படி பாடுவதில் வல்லவர்கள். கோயில் பூ அலங்காரத்துக்கு நந்தவனமும் அதனைப் பராமரித்துப் பூக்களால் இறைவனை அழகிய முறையிலே அலங்கரிப்பதற்கு பண்டாரங்கள் என்போர் இருந்தனர். உணவுப்பண்டங்களைத் தயாரிப்பதற்கு மடப்பள்ளி ஆட்கள் தயாராக இருந்தனர். கோயிலில் நான்கு கால பூசையிலும் இசையால் இறைவனை வழிபட இசைக்கலைஞர்களாக நாதஸ்வரகாரர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கோயிலுக்கு இறை வடிவங்களை அமைத்த வெங்கல சிற்பத் தொழிலாளர்கள் சிற்பிகள், இறைவன் புகழைப் பாடி ஆடுவதற்கு ஆடல் நங்கையர் ஆகியோரும் கோயிலைச் சூழ உள்ள புறங்களில் அமர்த்தப்பட்டிருந்தனர். தஞ்சைப் பெருங் கோயிலிலே ஒரே சமயத்தில் 400 தேவதாசிகள் இருந்தார்களாம். தேவதாசிகள் மட்டும் 400 ஆக இருந்தால் மற்றய வேலைகளில் எத்தனை பேர் ஈடு பட்டிருக்கக் கூடும் என ஓரளவுக்கு ஊகிக்க முடியுமல்லவா?

மொத்தத்திலே கோயிலை மையமாக வைத்து பல கலைகளும் தொழில்களும் நடந்தன. கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் உற்சவ நாட்களில் இசை நிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடந்தன.ஏன் பல கவிதைகளும் அரங்கேறின.

கோயில்களுக்கென நில புலன்களும் இருந்தன. கோயில்களே வங்கிகளைப் போன்று இயங்கின. பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தது. பலரது செல்வத்தை வைத்திருந்து அதற்கு வட்டியும் கொடுத்தது. இவற்றை எல்லாம் இன்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம்.

இன்றும் கூட ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்திய அரசுக்குக் கடன் கொடுப்பது யாவரும் அறிந்த விஷயம்.

கோயிலுக்கு நிலம் இருந்தது. கோயிலுக்குள் வங்கியும் இருந்தது. மொத்தத்திலே கோயில் ஒரு அரச ஸ்தாபனம் போலவே இயங்கியது எனலாம்.
(ATBC வானொலியில் 23.10.18 அன்று ’ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)

2 comments:

  1. வித்தியாசமான கோணத்தில் சோழர்கால கோயிலையும் அரசனின் அரசியலையும் அணுகி இருக்கிற பாணி புதிது!
    அதனை வானொலியோடு நின்று விடாது எழுத்துலகுக்கும் வழங்கியமைக்கு நன்றி.புதிய வருடத்தில் உங்களிடம் இருந்து மேலும் பல விடயங்களை அறிய ஆவல்....

    ReplyDelete
  2. தஞ்சைப்பெருங் கோயில் - இது பற்றிப் பல 1000 கணக்கான கட்டுரைகள் வந்திருக்கலாம். மேலும் பல கட்டுரைகள் இனியும் வரலாம். நான் கூட வேறு ஒரு கட்டுரையும் தஞ்சைக் கோயில் பற்றி எழுதி இருக்கிறேன்.

    ATBC வானொலியில் ‘பண்பாட்டுக்கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி காற்றில் பறந்து மறைந்தவைகளை எழுத்துருவில் சிறைப்பிடித்துப் பலரும் அறியத் தரும் என் அருமைத் தோழி யசோதா என்பதைக் கூறாது விட்டால் நான் கடமையில் தவறியவள் ஆவேன்.

    ReplyDelete