Saturday, December 29, 2018

ஆணும் பெண்ணும் உரிமைகளும்


சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கிலே பெண் வகித்த பங்குகள் பல. வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கால மனித இனம் பெண்ணைத் தலைமையாகக் கொண்டு வாழ்ந்த இனக்குழுக்களாக வாழ்ந்ததைக் காண்கிறோம்.

இங்கு பெண் தலைவியானதற்குக் காரணம் ஆணால் பெற முடியாத இன்னொரு மனிதனை தன்னுள் வளர்த்து வெளிக்கொணர்பவள் பெண் என்பதனாலாகும். அன்று இருந்த மனித சிந்தனை வளர்ச்சியில் இவ்வாறு தான் பெண் இனம் போற்றப்பட்டது.

இனக்குழுக்களுக்கு மனித சக்தி வேண்டி இருந்தது. நோய் மற்றும் மிருகங்களின் தாக்குதலால் இலகுவில் மனிதன் இறந்து விடும் நிலை அன்று இருந்தது. இதனால் பெரிய கூட்டம் ஒன்று தம்மைப் பெருப்பிக்கவும் பாதுகாக்கவும் வேண்டி இருந்தது. இதனால் மனிதனைப் பெற்றுத் தரும் பெண் போற்றப்பட்டாள். தலைவியும் ஆனாள்.

காலத்தின் ஓட்டத்திலே; மனித சமுதாய வளர்ச்சியிலே; இனப்பெருக்கத்தில் ஆணின் பங்கு என்ன என்பதை மனிதன் புரிய ஆரம்பித்தான். இனக்குழுவாக வாழ்ந்த வாழ்க்கையும் மாறத்தொடங்கியது. இனக்குழு உயிர்வாழ சேர்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. ஆனால் நிலையாக வாழத்தொடங்கிய மனிதன் நிலத்தில் உரிமை கொண்டான். இது எனது; எனக்கே உரியது; எனக்கே சொந்தமானது என்ற சிந்தனை வளர, தனக்குப் பிறந்த பிள்ளைகளே தனது வாரிசு மற்றவர்களுக்குப் பிறக்கும் பிள்ளை மாற்றானது, இதன் காரணமாகப் பிள்ளையைப் பெற்றுத் தரும் பெண் தனக்கு உரியவளாக வேண்டும். மனிதனை மனிதன் அடக்கி ஆள வேண்டும் என்ற சிந்தனை முளை விட்டது. அந்தச் சிந்தனையின் அமுலாக்கம் முதலில்  பெண்ணை அடக்குவதில் தான் ஏற்பட்டது. பெண்ணைத் தனக்கு மட்டும் சொந்தமாக்குவதற்கு தோன்றியதே ஆண் ஆதிக்க அடக்கு முறை.

பெண் தலைவியான வாழ்வு போய், பெண் ஒருவனுக்கு மட்டும் உரியவள் என்ற எண்ணம் வளர்ந்தது. அவளின் அழகு, வசீகரம் அத்தனையும் அவனுக்குச் சொந்தமானது. பிறனின் கண்ணில் அவள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பர்தாவால் மறைக்கப்படும் கொடுமையை நாம் இன்றுவரைக் காண்கிறோம். ஆனால் ஆணோ பல தார மணம் செய்து கொள்ளச் சமூகம் அனுமதித்தது. பெண்ணுக்கு மட்டும் கற்பு நிலை என்ற சிந்தனை பரப்பப் பட்டது.

’தெய்வம் தொளாஅள், கொழுநன் தொழுது எழுவாள்
‘பெய்’ என, பெய்யும் மழை’ (55)

இப்படிக் கூடக் கூறப்பட்டது. இது பெண்ணை அடிமைப்படுத்த தீட்டிய அழகிய ஆதாரங்களில் ஒன்று.

எமது வரலாற்றிலே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பயங்கரமான கொடுமை என்னவென்றால் அது கணவன் இறந்து, அவனது உடலை எரிக்கும் போது, அதனுடன் சேர்ந்து அவனது மனைவியையும் எரிப்பது. அவன் மேல் கொண்ட காதலால் அவனுடன் தன் உயிரையும் மாய்ப்பது என்று இதற்கு விளக்கம்  கூறிய போதும்; உண்மை இதற்கு மாறுபட்டதாகவே இருந்தது. வலுக்கட்டாயமாக அவள் கொலை செய்யப்பட்டாள். அதுவும் மதத்தின் பெயரால் தர்மம் என்ற அடைமொழியின் பெயரால் அது நடந்தது.

அவ்வாறு செய்யாமல் பிற்காலத்தில் இருந்த பெண்கள் கனவனை இழந்ததன் அடையாளமாக மொட்டை அடிக்கப்பட்டு அவளின் அழகைச் சீரழித்து வைத்திருந்தார்கள். அது அவள் யாருக்கும் அழகாக இருந்து விடக் கூடாது என்பதற்காகச், சம்பிருதாயம் எனற பெயரில் நடந்தது. இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மொட்டைப் பாட்டிகளைக் காணலாம். ஆனாலும் இப்பொழுது விதவையான இளம் பெண்கள் மறுமணம் செய்து புதிய வாழ்வில் புகுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே.

இவ்வாறாக உடன் கட்டை ஏறும் நிலையில் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்த வாழ்க்கை ஒன்று சமூகத்தால் அவள் மேல் திணிக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணம் அவள் ஓர் ஆணின் விந்தை சுமந்து கருத்தரித்து பிள்ளையைப் பெற்றெடுப்பவள் என்பதே.

வேத உபநிடதங்களிலே பெண் என்பவள் ஆணின் விந்தைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் ஓர் உயிர் என்ற அளவுக்குத் தான் பெண்ணுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. அவளுக்கு ஜாதியும் கிடையாது; குலமும் கிடையாது என்கிறது அது. அவளால் பெற்றெடுக்கப்படும் ஆண் குழந்தையே தகப்பனின் வாரிசு. அவனே தகப்பனுக்கு அந்திமக் கிரியை செய்ய முடியும்.

இதைப் பின்னணியாக வைத்து ஜெயக்காந்தன் ஒரு கதை எழுதி இருந்தார். கதையின் சாரம் இது தான். தனது சொந்த மனைவி மூலம் ஒருவருக்குப் பெண் குழந்தைகள் மாத்திரமே உண்டு. பெண் குழந்தைகளை மட்டும் வாரிசாக பெற்ற பிராமனன் தனக்கு ஒரு தாசி மூலம் பிறந்த ஆண் மகனுக்கு பூனூல் சடங்கு செய்து வைக்கிறான். இதை அவனது பிராமன சமூகம் எதிர்க்கிறது. ஆனால் அந்த வேதங்களை மெத்தப்படித்த பிராமணனோ வேதங்களை ஆதாரம் காட்டி தான் செய்தது தவறு அல்ல என்று வாதாடுகிறார். தனது அந்திமக் கிரியை செய்ய ஆண் வாரிசு வேண்டும். அவன் பிராமனனாக இருக்க வேண்டும். அதற்காகவே அவனுக்குப் பூனூல் சடங்கு செய்கிறான். ஆமாம் பிராமண சமூகத்திலே பூனூல் போடாதவன், அதாவது, பிராமணன் ஆக்கப் படாதவன் சிரார்த்தம் செய்ய முடியாது.

எமது பிராமண குலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அகாலமாக மரணமடைந்தார். அவர் பிராமன சம்பிருதாயங்களை வெறுப்பவர். மகனுக்கு அப்பொழுது வயது 18. தகப்பனார், மகனுக்குப் பூனூல் சடங்கு தேவை இல்லை என எண்ணி அவனுக்குப் பூனூல் போடவில்லை. அதன் காரணமாக அவரது மரணச் சடங்கை நடத்த அவரது மகன் அனுமதிக்கப்படவில்லை. தந்தையின் தம்பியே கிரியைகளைச் செய்தார். பையன் சித்தப்பாவிற்குப் பின்னால் ஒரு தடியை ஒரு பக்கம் பிடிக்க,  தடியின் மறு முனையை  பிடித்துக் கொண்டு சித்தப்பா சகல காரியங்களையும் செய்தார். இப்படியாகச் செய்வது பையனுக்காகச் சித்தப்பா கிரியை செய்வது ஆகுமாம். வைதீக பிராமணர் என்பதால் பூனூல் அனியாத பையன் சிரார்த்தம் செய்ய முடியாது எனத் தடுத்து விட்டனர் சுற்றத்தார். தந்தையின் அருமை மகனால் வளர்ந்த பையனுக்கு இந்த நிலை ஏற்பட்டதை கண்டு கலங்குகிறோம். இங்கு நாம் ஜெயக்காந்தன் எழுதிய கதையின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டோம்.

பெண் என்பவள் தந்தையின் வாரிசு இல்லை என்பதை பிராமணர் அல்லாத மற்றச் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. பெண் தந்தைக்கு அந்திமக் கிரியை செய்வது கிடையாது. அது மட்டுமா? பெற்ற தந்தை இறந்தால் துடக்குக் காக்கும் வழமை கூட அவளுக்குக் கிடையாது. கணவன் வீட்டு விவகாரங்களே இனி அவளது. தாரை வார்த்து ஒரு பெண்ணைக் கொடுத்து விட்டால் கை கழுவி விட்டோம் என்பதா? இவ்வாறான ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது தான் எம் சமூகம்.

அண்மையிலே ஒரு ஹிந்திப்படம் Provoked என்ற பெயரில் வந்தது. இது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Kiranjit. Ahluwalia என்ற உண்மையான பெண்ணின் கதையே அது. இவர் திருமனமாகிக் கணவனுடன் லண்டன் போய் விட்டார். அவரது கணவர் தொடர்ந்து அவளை பல வகையாகக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பொறுமையை இழந்த Kiranjit கோபாவேசத்தில் அவளது கணவரைத் தீ மூட்டி எரித்து விடுகிறாள். பிரித்தானிய அரசு இவள் செய்தது கொலை எனத் தீர்ப்பு வழங்கியது.

ஆமாம், இப்படி எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்? மனைவி என்பவள் தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வந்தவள் என்பதைப் புரியாத ஆண்களை இன்றும் சமூகத்தில் காணலாம். மனிதாபிமானம் அற்ற ஆண்களிடம் பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இம்சைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எதோச்சதிகாரம் கொண்ட கணவனிடம் வாழ்க்கை முழுவதும் அல்லல் படும் பெண்களின் வாழ்வு இன்றும் சமூகத்தில் நடைபெறும் ஒன்றே.

ஆண்கள், பெண்ணை இம்சிக்கும் போது ஆத்திரம் கொண்டு பெண்ணை அடிக்கவும் உதைக்கவும் செய்வார்கள். இதனால் ஏற்படும் காயங்கள் வெளிப்படையாகத் தெரிபவை. இதற்கான சிகிச்சைக்கு வைத்திய நிலையம் வரை போக வேண்டி உள்ளது. இந்த நிலை பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

இது ஒருவழிப்பாதையா? அல்லது இரு வழிப்பாதையா? அதாவது பெண்கள் மட்டும் ஆண்களிடம் இம்சைப்படுகிறார்களா ஆல்லதுஆண்களும் பெண்களிடம் இம்சைப்படுகிறார்களா? என்ன? இதைக் கேட்டதும் சிரிக்கிறீர்களா? என்ன, ஒரு பெண் ஆணை இம்சைப்படுத்துவதா? அது முடிகிறா காரியமா? உடல் பலத்திலே பெண்ணிலும் உறுதி வாய்ந்தவரைப் பெண்ணால் இம்சிக்க முடியுமா? ஆம் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆமாம்! பெண்ணால் ஆண் இம்சிக்கப்படுவது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஒளவையார் காலம் தொட்டு இந்த இம்சை உண்டு. ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்று பாடிய ஒளவையார் தான் ’கொடிது எது?’ என்ற பட்டியலிலே ’கொடிது கொடிது அன்பிலாப் பெண்டிர்’ எனவும் பாடினார்.

நான் சிறுமியாக இருந்த போது ஒளைவையார் படம் பார்த்தேன். இதில் கே.பி. சுந்தராம்பாள் ஒளவையாராக நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சியில் கணவனுக்கு இலையில் உணவு பரிமாறும் மனைவி அவனைக் கன்னாபின்னா என்று வைத படியே உணவு பரிமாறுகிறாள்.அவனோ பசியுடன் சாதத்தில் கை வைத்தவன் உண்ண முடியாது திண்டாடுகிறான். சாப்பாட்டைத் திட்டித் தீர்த்த படியே பரிமாரினால் யாரால் தான் உண்ண முடியும்? இதைக் கண்ணுற்ற ஒளவையார் ‘அதனிலும் கொடிது இன்புற அவர்  கையால் உண்பது தானே’ எனப் பாடுகிறார். ஒளவையார் பாடிய காலத்தில் இருந்து நாம் பல நூற்றாண்டைத் தாண்டி வந்து விட்டோம்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனது சிந்தனையையும் மாற்றுகின்றது. இது தவிர்க்க முடியாத நியதி. 3 தலைமுறைகளுக்கு முன் பெண் போதிய கல்வியறிவைப் பெற வில்லை. இந்த அறியாமையில் வாடிய பெண்ணின் பரிதாபத்தைப் பார்த்த பாரதி பெண் விடுதலை பற்றிப் பாடினான். முன்னர் தந்தையால் பராமரிக்கப்பட்டு பெண் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டாள். கணவனின் பின் பெற்ற மகன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நியதி இருந்தது. இவை எல்லாம் இன்று பழங் கதை.

இன்றய பெண் கல்வியிலும் தொழிலிலும் ஆண்மகனுக்குச் சமனாக வாழ்கிறாள். எவரெஸ்ட் மலை உச்சியை அடைவதில் இருந்து ஆழ்கடல் ஆய்வு வரை எங்கும் பெண்களைக் காணலாம். இது வரவேற்கப்பட வேண்டியதே. வீட்டிலே சண்டை சச்சரவு என வரும் போது பெண் சளைத்தவள் அல்ல. இங்கு நான் எல்லாக் குடும்பங்களும் சண்டை போட்டுக் கொள்ளுவதாகக் கூற வரவில்லை. காரியாலயத்திலும் பொறுப்புள்ள வேலை பார்த்து, வீட்டையும் சிறப்பாக நிர்வகிக்கும் திறமை கொண்ட பெண் நிச்சயமாக அன்றய சமூகப் பெண்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டவளே!

இன்று புதிதாகப்பேசப்படும் விஷயம் பெண்களால் ஆண்கள் துன்புறுத்தப்படுவது. இவ்வாறு இம்சைப்படும் ஆண்கள் சமூகத்தில் தாம் பெண்ணால் இம்சிக்கப்படுவதாக வெளியில் கூறவும் தயங்குகிறானாம். இது தமது ஆண்மைக்கு இழுக்கு; சமூகம் தம்மை மதிக்காது என அஞ்சுகிறானாம். இவ்வாறு பெண்களால் இம்சிக்கப்படும் ஆண்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதில்லை. இவற்றைச் செய்யும் பெண்கள் ஆண்கள் போல் அடி, உதை என இல்லாது உளவியல் ரீதியாக அவர்களை இம்சிக்கிறார்களாம்.

இது மிகவும் திட்டமிட்ட செயலாக இருக்கும். இது வரை மறைக்கப்பட்டு வந்திருந்த இந்த விஷயம் இன்று வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமது பிள்ளைகளையும் கொண்டு வெளியேறி விடுவேன் என மிரட்டுவது இன்று சர்வ சாதாரணமாம். குழந்தைகளைப் பிரிய முடியாத கணவன் எதையும் சகிக்கத் தயாராகுகிறான். பல ஆண்கள் மெளனமாக இதைச் சகித்து வருகிறார்களாம். சகிக்க முடியாத ஆண் சட்டத்துறையை நாடினாலும் அங்கும் அவர்களின் முறைப்பாடுகள் தகுந்த அங்கீகாரம் பெறுவதில்லை. பெண்னால் கொடுமைப்படுவது மட்டுமல்லாது முறையீடு செய்யப்போன இடத்திலும் ஆணைச் சந்தேகக் கண்ணுடன் நோக்குகிறார்களாம்.

இறுதியில் மனைவி விவாகரத்துக் கோரி குழந்தைகள் பராமரிப்பு, வீடு, கார் அத்தனையையும் தனதாக்கி கணவனை மிகுந்த பரிதாப நிலைக்கு ஆளாக்குகிராளாம்.

இன்றய சட்டங்கள் என்றோ ஆக்கப்பட்டவை. அவை பெண் மெல்லியலாள் ஆக இருந்த காலத்தயது. அதனால் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆணின் சொத்து அத்தனையும் அவளது உரிமையாக்கப் பட்டது.

அன்றய சமூகம் பெண் கணவனை விட்டுப் பிரிவதை பெரிய அவமானமாகக் கருதியது. இன்றோ இது சர்வ சாதாரணமாகி விட்டது. இவற்றால் பாதிக்கப்படுவது இவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளே. அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களாக வளர்வதை மனவியல் அறிஞர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

கெளதமர் ‘தாய் குழந்தையை நேசிப்பது போன்று உலகை நேசியுங்கள்’  என்றார். ஆனால் இன்று சொத்தும் சுகமும் பெறுவதற்காக மட்டும் விவாகரத்துக் கோரும் பெண்களை என்னவென்பது? தாய்மை என்ற சொல்லுக்கே அபகீர்த்தி விளைவிக்கும் தாய்கள் அல்லவா அவர்கள்!

விவாகரத்து என்ற சூதாட்டத்திலே பெற்ற பிள்ளைகளே பணயம் வைக்கப்படுகிறார்கள்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 6.6.2007ல் அன்று பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

2 comments:

  1. சகோதரி கார்த்திகாக ஆண் - பெண் சம நிலை குறித்து அழகாகவும் அழுத்தமாகவும் எழுதியுள்ளார். ஜெயகாந்தனின் கதையையும் ஒரு மனிதரது இறுதிச்சடங்கில் நடந்ததையும் விபரிக்கின்றார். ஒரு குறிப்பிட்ட ஆய்வை எழுதும்போது, அதனை படிக்கும் வாசகர்களுக்கு சோர்வு தட்டாது இருக்கப்பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவிடயத்தில் கார்த்திகா அனுபவத்துடன் எழுதியிருக்கிறார். அதனால் நாமும் தேடலில் ஈடுபட முடிகிறது. கார்த்திகாவுக்கு எமது வாழ்த்துக்கள். இந்த இணைப்பை எனக்கு அனுப்பிய தங்கை யசோதா பத்மநாதனுக்கும் நன்றி. முருகபூபதி

    ReplyDelete
  2. நண்பரே உங்கள் கருத்துக்களை மனதில் இருத்திச் செயற்படுவேன்.

    தவறாது கருத்தைத் தெரிவிப்பது ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது

    ReplyDelete