Sunday, February 03, 2019

மாறுபட்ட சிந்தனைப் பண்பாடு

கடந்த ஞாயிறு ABC அலைவரிசையில் Talk back நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு கார் ஓடிக்கொண்டிருந்தேன். திருமண வாழ்வில் பொன் விழாக் காணும் தம்பதியருடன் ஒலிபரப்பாளர் பேசினார். ஆமாம், இந்தத் தம்பதியர் 1955இல் திருமனம் செய்தவர்கள். தமது பொன் விழாவைக் கொண்டாடும் பொருட்டு Flying boat இல் மெபோர்னில் இருந்து கடல் மூலமாக சிட்னிக்கு வந்துள்ளார்கள். பொன் விழா கொண்டாடும் தம்பதியர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஆனால் அவர்களிடம் வயோதிபத்தின் அறிகுறிகள் கிடையாது. திடகாத்திரமும் துணிச்சலும் மிக்கவர்களாக அவர்கள் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

எனது மனம் எம்மவரை நோக்கித் திரும்பியது. அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின் எம்மில் பலருக்கும் திருமண பொன் விழா நடக்கத் தான் செய்கிறது. பெற்றோரைக் கெளரவிக்கும் பொருட்டு பிள்ளைகள் இதை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். பலரும் வந்து வாழ்த்தி உணவுண்டு களித்துப் போகிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியத் தம்பதிகளைப் போல் திடகாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் இந்த வயதிலும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்?

இவை ஏன்? எமது சிந்தனையின் வேறுபாடா? கலாசார வேறுபாடா? பண்பாடா? ஆம்; அத்தனையும் காரணம் எனக் கூறலாம்.

எமது பாரம்பரியம் பெற்றோரானவர்கள் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதுடன் நின்றுவிடுவதல்ல; தொடர்ந்தும் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு பையனோ பெண்ணோ 18 வயதை அடைந்ததும் அவர்கள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள் தம்மைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அதுவரை அவர்களைச் சீராகக் கவனிப்பது தான் கடமை என்பது மேற்கத்தியச் சிந்தனை. அதற்குப் பின் பிள்ளைகள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்பது மேலைத்தேயப் பண்பாட்டு நியதி. ஆனால் நம் பண்பாட்டிலோ நம் பையனோ பெண்ணோ எம்முடன் தான் வாழ வேண்டும் என அழுங்குப் பிடிவாதம் பிடிக்கிறோம். அவர்களின் சுதந்திரத்தில் தாராளமாகத் தலையிடுகிறோம். இதுவே எமது முழுநேரக் கவனமாகி, எம்மைக் கவனிக்க மறுக்கிறோம். நாம் தனி மனிதர். நாமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதெல்லாம் நம் சிந்தனையில் இருந்து அறவே அகன்று விடுகிறது. பிள்ளைகளின் வாழ்வில் எமது சந்தோஷத்தை தொலைத்து விடுகிறோம்; அல்லது மறந்து விடுகிறோம். பெண்னைப் பெற்று விட்டால் அவளுக்குத் திருமணம், சீதனம் என்றெல்லாம் உழைத்து வயோதிப காலத்தில் தமது சேமிப்பையும் பல பெற்ரோர்கள் இழந்து விடுகிறார்கள். இவை யாவும் எமக்கு வேண்டிய பண்பாடுகளா?

தற்போது அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வயது வந்தும் பெற்றோருடன் சில பிள்ளைகள் தங்கி விடுகிறார்கள்.முன்பு மாதிரி வயது வந்தும் போகத் தயங்கும் ஒரு சமுதாயம் உருவாகிறது.
இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாக ஆங்கிலச் சஞ்சிகைகளில் எழுதப்படுகிறது. நாமோ அதற்கு எதிர் மாறாக வாழ்கிறோம். இங்கு வந்த பின் பெண்ணோ பையனோ வெளியே தங்க வீட்டை விட்டு வெளியே போய் விட்டால் எம்மவர்கள் அதை விரும்புவது கிடையாது.

பெற்றோரானவர்கள் மெழுகுதிரி மாதிரி எரிந்து ஒளியைக் கொடுத்து தன்னையே அழிப்பது போல தமது வாரிசுகளுக்காக வாழ்ந்து மாள வேண்டியவர் என்பது எமது பண்பாடு. எமக்குக் கிடைத்த அறிவுரை அத்தனையும் பிறருக்காகத் தியாகம் பண்ணுவது வாழ்க்கையில் சிறந்த அம்சம் என்பதே.  தனக்காக வாழ்வது மிகத் தன்னலமான காரியமாகக் கருதப்படுகிறது.

பண்டைய நூல்களும் இல்லறத்தின் பின் துறவறம் பற்றியே போதிக்கின்றது. இல்லற இன்ப வாழ்வு முடிந்ததும்  உலக இன்பங்களை விடுத்து மரணத்தின் பின் வரும் மோட்சத்தை வேண்டி இறை பிரார்த்தனையில் காலத்தைக் கழிக்க வேண்டும் என்பது இந்தியப் பண்பாட்டு நியதி. எம்மவர்கள் துறவறம் போகிறார்களோ இல்லையோ வாழ்க்கை இன்பத்தைத் துறக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பல காலங்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர் ஜெயக்காந்தன் எழுதிய கதை ஒன்றை வாசித்தேன். இப்பொழுது அந்தப் புத்தகம் என்னிடத்தில் இல்லை. கதையின் பெயரும் மறந்து விட்டது. ஆனால் கதையின் சாரம் மட்டும்ஞாபகமாக இருக்கிறது.

கதை சென்னை தமிழ் சமுதாயத்தைப் பற்றியது. தந்தையும் தாயும் கூட்டுக் குடும்பமாக தமது திருமணமான மகன்களுடனும் அவர்களின் மனைவி மக்களுடனும் வசிக்கிறார்கள். 3 வது மகன் ஒரு Doctor. வெளிநாடு ஒன்றுக்கு உயர்படிப்புக்காகச் சென்ற போது அங்கு ஒரு ஐரோப்பியப் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருகிறார். ஆசாரம் மிக்க இந்த பாரம்பரிய தமிழ் குடும்பத்திலே ஆசாரங்கள் எதுவும் தெரியாத வெள்ளைக்காரி! எல்லோரும் மனோரீதியாக அவளை வெறுக்கிறார்கள். பெற்றோருக்குத் தமது கடைக்குட்டிப் பையன் இப்படிச் செய்து மானத்தை வாங்கி விட்டானே என்ற கவலை.

தாயாருக்கு 45, 46 வயது இருக்கும். ஒருநாள் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். Doctor ஆன 3வது பையன் தாயின் நாடியைப் பரிசோதித்து, அவள் கர்ப்பமாகி இருப்பதாகக் கூறுகிறான். அந்தத் தாயின் மூத்த மகன்களும் மருமக்களும் முகத்தைச் சுளிக்கிறார்கள். அந்தத் தாயாரை ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள். ‘இத்தனை வயதுக்கு மேல் இப்படியா ஆசைப்படுவது! வெட்கம் கெட்டதுகள்’ என்றெல்லாம் பேசிக்கொள்ளுகிறார்கள். தாயும் தந்தையும் பிள்ளைகளின் எதிரில் குற்றம் புரிந்தவர்கள் போலத்  தலைகுனிந்து கூனிக் குறுகி நிற்கிறார்கள்.

விஷயம் தெரிந்ததும் புதிதாக வந்த வெள்ளைக்கார மருமகள் மற்றவர்களுக்கு மாறாக அவர்களைக் கட்டி அணைத்துத்  தனது சந்தோஷத்தைத் தெரிவிக்கிறாள். இந்த வயதில் இவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதை அவள் ஒரு சந்தோஷமான விஷயமாகக் கருதுகிறாள். மாமியாரை முற்றுமுழுதாகக் கவனிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்ளவும் செய்கிறாள்.

இந்தியர்களின் சிந்தனைப் பண்பாட்டு மாறுபாட்டை எழுத்தாளர் ஜெயக்காந்தன் அழகாகச் சித்தரித்து எது சிறந்தது என்ற தீர்ப்பை எம்மிடமே விட்டு விடுகிறார்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக 27.9.2005 இல் ஒலிபரப்பானது. )

No comments:

Post a Comment